என் இமைக்குள்ளும் பல கனவுகள்தான்.
ஒருநாள் இமைக்காமல் உன்னையே பார்த்துக் கொண்டிருந்தபோதுதான்
என் கனவுகள் உன்னையும் லேசாக உரசிச் சென்றது. திடுக்கிட்டு விழித்தாய் புன்முறுவலுடன்!
விரல் நீட்டினேன்.
பற்றிக் கொண்டன நம் ரேகைகள்.
உரிமையுடன் கைகளை உரசி அன்புணர்த்தினாய் .
இதழ்கள் படபடத்தபோது அடக்கினாய் சில துளிகள் முத்தங்களையிட்டு!
மனசு காற்றிலே பறந்தபோது ஆரத்தழுவினாய்.
நானோ விழிகள் உடைந்து முதன் முதலாய் உன் அன்பில் நெகிழ்ந்து அழுதபோது உன் கண்களும் உப்பேற்றின.
புரியாமல் விழித்தோம்.
அன்பு வார்த்தைகளாய் கசிந்தன.
அன்று
வெட்கம் வெடிக்க இருவரும் நம்மைப் பார்வைக்குள் ஔித்துத் திரிந்தோம் சந்திக்காமலே!
நாட்கள் பறந்தன
உருவங்கள் பருவங்கள் திறந்தன.
நிறையப் பேசினோம்.
ஒருவரையொருவர் புரிந்து கொள்வோமென்ற நப்பாசையில்!
ஒருநாள்......
நம் உதடுகள் மூடிக் கொண்டன ஊமையாய்.
திறந்த போது வெடித்தன சண்டைகளாய்.
முதன்முதலாய்
புரிதலுடன் பிரிதலும் தலைகாட்ட,
ஒன்றோடொன்று உறைந்த நம் நிழல்கள் திசை பிரிந்தன.
யதார்த்தக் கதவுகளில் நம் காதல் தொலைந்து போனதா!
ஏனோ ........
இப்போதெல்லாம் நமக்குள் நாமே முள்வேலிகளிட்டு
அன்பை மறைத்துக் கொண்டிருக்கின்றோம்!
இருந்தும்
சில துளிகள் வற்றாத அன்பினால் நம் கனவுகளிலும் இரகஸிய ஈரலிப்புக்கள்!
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!