About Me

2015/02/24

எழுத்தணிக்கலை



இஸ்லாமிய எழுத்தணிக்கலை
-----------------------------------------
அரபிமொழியானது இஸ்லாம் அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் மக்களால் பேசப்பட்டு வந்தது. புனித இஸ்லாம் மார்க்கம் நபி(ஸல்) அவர்களால் அரபி மொழியில் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், புனித அல்குர்ஆனும் அரபி மொழியில் இறக்கப்பட்டது. இதனால் அரபுமொழியானது இஸ்லாமிய கலாச்சாரத்தில் மிக முக்கிய செல்வாக்கைப் பெற்றிருந்தது.

உமையா கிலாபத்தின் ஆட்சியாளர்களில் ஒருவரான கலீபா அப்துல் மலிக்கின் காலத்தில் இஸ்லாமிய ஆட்சிப் பிரதேசங்களில் உத்தியோகபூர்வ மொழியாக அரபிமொழி மாற்றப்பட்டது. அக்காலத்தில் அதிகமான முஸ்லிம் பிரதேசங்களில் தாய்மொழியாக அரபுமொழி காணப்படவில்லை. அக்கால இஸ்லாமிய உலகில் அரபுமொழிக்கு அடுத்தபடியாக பெருன்பான்மை மக்களால் பாரசீக மொழி பேசப்பட்டு வந்தது. இஸ்லாமிய உலகில் ஆரம்ப காலப்பகுதியில் எகிப்தில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆட்டுத்தோல்களிலும், ஒரு வகையான மரஇலைகளிலும் எழுத்துக்கலைகள் வரையப்பட்டு வந்தன.

கி.பி. 9ஆம் நூற்றாண்டில் சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட காகிதத் தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், காகிதத் தாள்களில் இஸ்லாமிய எழுத்தணிக்கலைகள் வரையப்பட்டன. இஸ்லாமிய எழுத்தணிக்கலைகள் சிறந்தமுறையில் வரைவதற்கு காகித்தாள்கள் பெரிதும் உதவிசெய்தது. அக்கால இஸ்லாமிய எழுத்தணிகளை வரைவதற்கு ‘கலம்’எனும் சாதானம் பயன்படுத்தப்பட்டது. அது கோரைப்புல் தாவரத்தால் உருவாக்கப் பட்டிருந்தது. ஆரம்பகால குர்ஆன் பெரியவையாகக் காணப்பட்டதுடன், அவை இஸ்லாமியக் கலைத்திறன்மிக்கதாகக் காணப்பட்டது. அதிலிருந்து இஸ்லாமிய எழுத்தணிக்கலைகள் சிறந்த ஓவிய முறையாக வளர்ச்சியடைந்தது.

நன்றி - தமிழ் விக்கிப்பீடியா

- Jancy Caffoor-
  24.02.2015

சித்திரமும் கைப்பழக்கமும்


ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கு சித்திரம் வரைதல் மிக விருப்பமானதொன்று.

சித்திரம் என்பது மனதில் எழுதும் கருத்துக்களை ரேகைகளாக்கி அவற்றுக்கு நிறங்களைப் பயன்படுத்தி வௌிப்படுத்தும் வௌிப்பாடாகும், ரேகைகளை வரைதல், வடிவங்களை ஆக்குதல், நிறப் பயன்பாடு என்பன சித்திரம் வரைதலின் முக்கிய நிலைகளாகும்.

ஒருவர் தனது உள்ளத்தில் கிளர்ந்தெழும் உணர்ச்சிகளுக்கு கருத்து வடிவம் கொடுக்கும்போது அது அவரின் அனுபவம், கலையார்வம், ஆற்றலின் பிரதிபலிப்பாக வௌிவருகின்றது.

ஆரம்ப காலங்களில் எண்ணங்களை வௌிப்படுத்த மட்டுமன்றி, செய்திகள், கண்டுபிடிப்புக்கள் என்பவற்றை வெளிப்படுத்தவும் சித்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

- Jancy Caffoor-
  24.02.2015

மறை வழியில் கல்வி



கல்வியின் மூலமாக பெற்றுக் கொள்ளப்படும் அறிவே மனித வாழ்வை வழி நடத்திச் செல்லும் காட்டியாகும். இவ்வறிவின் சிறப்பைக் கூறும் சில ஹதீஸ்களின் பொன் வரிகள் சில -

'ஒருவர் ஓர் அறிவைத் தேடி ஒரு பாதையில் சென்றால், அல்லாஹ் அதனைக் கொண்டு அவருக்கு சுவனம் செல்லும் ஒரு பாதையை இலகுபடுத்திக் கொடுக்கின்றான்.' (முஸ்லிம்)

''நிச்சயமாக அறிவைத் தேடிச் செல்பவனுக்கு, மலக்குகள் அவன் செய்யும் அவ்வேலையில் திருப்தியடைந்து தமது இறக்கைகளை விரிக்கின்றனர். அறிஞனுக்காக, நீரில் உள்ள மீன்கள் உட்பட, வானம் மற்றும் பூமியில் உள்ள அனைத்தும் பாவ மன்னிப்புக் கோருகின்றன. ஓர் 'ஆபித்' (வணக்கவாளிக்கு) முன்னால், ஓர் அறிஞனின் சிறப்பு, நட்சத்திரங்களுடன் ஒப்பிடும்போது சந்திரனுக்குள்ள சிறப்பைப் போன்றதாகும். மேலும், அறிஞர்கள் நபிமார்களின் வாரிசுகளாவர். நபிமார்கள் தங்க நாணயத்தையோ அல்லது வெள்ளி நாணயத்தையோ வாரிசாக விட்டுச் செல்லவில்லை. அவர்கள் வாரிசாக விட்டுச் சென்றதெல்லாம் அறிவையேயாகும். அதனைப் பெற்றுக் கொண்டவர் பெரும் பேற்றைப் பெற்றுக் கொண்டவராவர்.'' (அபூ த h வு த்  அஹ்மத்)

--------------------------------------------------------
குர்ஆன் என்னும் பெயர்

வானவர் ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலம், நபியவர்களுக்கு வல்லவன் அருளிய இந்த நன்மறைக்கு எத்தனையோ பெயர்கள் இருந்த போதிலும், இந்த மாமறையிலே பல இடங்களிலும்  குறிப்பிடப்படும் “குர்ஆன்” என்ற பெயரே சிறப்பு பெயராக விளங்கி வருகிறது

“குர்ஆன்” என்ற அரபிச் சொல்லுக்கு “ஓதப்பட்டது”, “ஓதக்கூடியது”, ஓதவேண்டியது என்று பொருள்படும். அண்ணல் நபி அவர்களுக்கு ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலமாக “ஓதப்பட்ட” இவ்வேதம், மனித சமுதாயம் தன் மேன்மையைக் கருதி “ஓதவேண்டியது” என்ற பொருளையே தன் பெயராகக் கொண்டிருப்பதும், இவ்வேதமே இவ்வுலகில் அதிகமான மக்களால் “ஓதப்படுவதும்” சிந்தித்து நயக்கத்தக்கதாக இருக்கிறது.

-------------------------------------------------------
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

ஒருவர் படுக்கைக்குச் சென்று தூங்கியப் பின், ஷைத்தான் அவர் தலைமாட்டில் 3 முடிச்சுகள் போட்டு, ஒவ்வொரு முடிச்சிலும் நீர் உம்மிடத்தில் தூங்கிக் கொண்டிரும்,உமக்கு இன்னும் இரவு இருக்கிறது, நன்றாகத் தூங்கும் என்று உளறுகிறான். அந்த அடியார் தூக்கத்திலிருந்து எழுந்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால், முதல் முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. பிறகு படுக்கையிலிருந்து உளு செய்தபின், இரண்டாவது முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. தொழுது விடுவாரேயானால், மூன்றாவது முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. எனவே அவர் அதிகாலையில் நல்ல மனத்துடன் சுறுசுறுப்போடு இருக்கிறார். இல்லை என்றால் கெட்ட எண்ணங்களோடு சோம்பல் கொண்டவராக இருக்கிறார்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழி)
நூல்கள் : புகாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், நஸயீ


- Jancy Caffoor-
  24.02.2015

பரீட்சைச் சுமை



இயற்கையோடு இணைந்து ஆரம்பக்கல்வியை அனுபவங்களாகப் பெற வேண்டிய பிள்ளைகளுக்கு பரீட்சைச் சுமையொன்று முதன்முதலாக ஐந்தாம் தரத்தில் புகுத்தப்படுகின்றது. பரீட்சை நெருங்கும்வரை ஒரே படிப்பு படிப்பு.......படிப்பு! பிள்ளைப் பருவத்தில் கிடைக்க வேண்டிய எல்லா இயல்புகளும் விளையாட்டுக்கள் உட்பட மறுக்கப்படுகின்றது. பெற்றோர்களும் தம்பிள்ளைகளின் ஐந்தரத்திற்கு கொடுக்கும் "அதி முக்கியத்துவத்தையும் கவனிப்பையும் ஏனைய வகுப்புக்கள் கற்கும் போது குறைத்து விடுகின்றார்கள்.

இப்பரீட்சை நிதியுதவி வழங்குவதற்காகவோ அல்லது பிரபல்யமான பாடசாலைகளுக்குச் செல்லவோ நடத்தப்படுகின்றது. பெரும்பாலும் பரீட்சையில் அதிகளவான சித்தி பெறுவது அரச ஊழியர்களின் அல்லது வசதி படைத்த பெற்றோர்களின் பிள்ளைகளே இவர்களுக்கு பிரபல்ய பாடசாலைகள் மட்டுமே கிடைக்கும்.

ஆனால் அரிதாக வறுமையோடு போராடிக் கொண்டு சித்தி பெற்ற மாணவர்கள் இந் நிதியால் பயனடைவதும் மறுப்பதிற்கில்லை. எப்படியோ இவ் ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சை நடத்துவது தொடர்பாக அரச மட்டத்தில் அடிக்கடி வாத, பிரதிவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்கள் இப்பரீட்சை 2016ம் ஆண்டிலிருந்து நடாத்தப்படாதென இன்று (19.12.2013) அறிவித்துள்ளார்.

- Jancy Caffoor-
  24.02.2015