About Me

2020/06/15

இணைய உலா

முகநூல் முகமறியாத நட்பினருடன் கூடி
அக எண்ணங்களை வலிமையாக்கும் தேடி
விரல் அசைவுகளின் இணைய  உலாவில்
நேர நகர்வுகள்   புரிவதில்லை  நமக்கே

ஜன்ஸி கபூர்  

கவிதை பிறந்தது

செந்தமிழ் பிசைந்து தெவிட்டா அமுதுடன்
சிந்தையில் பூத்த எண்ணங்களை வார்த்தே
சந்தக் கவி களிசைத்து மகிழ்ந்தோம்
முத்தமிழ் வளர்த்த நிலாமுற்ற முன்றலில்

இணையம் தந்த இதயம் மகிழ்ந்திட
இணைந்த கவிகளால் மகிழ்வும் பெருகிட
கற்பனையும் யதார்த்தமுமாய் கலவைகள் கரைத்தே
சொற்களும் பதங்களுமாய் அலங்கரித்தன கவிதைகள்

முத்துபேட்டை மாறனார் செதுக்கிய தளமாம்
முகநூலில் கலைநயம்  வளர்த்திட்ட தடமாம்
அகமதின்  எண்ணங்களை பண்புடன் படைத்திட
ஆக்கமும் ஊக்கமும் தெளித்திடும்  வளமாம்

கவிகளோடு பிறந்து கவியாய் வாழ்ந்து
புவி யலைவரிசையின் தமிழ் வாழ்த்தாய்
கலைகள் வளர  கருத்தாகி மலர்ந்த
கலைமகனை வாழ்த்த கவிதை பிறந்ததுவே

ஜன்ஸி கபூர்     - 15.06.2020




அற்புத பறவை




தொலை நிலா உருகும் பொன்னாய்
அலைகள் குவிந் தாடும் களிப்பாய்
ஆழி நனைக்கும் ஒளிக்கீற்றுக்களும் விரிந்தே
செழிக்கும் இரவுப் பூக்களாய் மலர்ந்து

கழுகு விரிக்கும் சிறகின் துடிப்பில்
தழுவிக் கிடக்கும் மதியின் நிழல்
நழுவி யோடும் தடைகள் உடைந்து
விழுதாய் பற்றுமே வாழ்வின் வெற்றியாய்

காரிருள் துளைக்கும் கூரிய பார்வையும்
காற்றை யுடைக்கும் அதீத வேகமும்
தற் றுணிவோடு நகரும் இலக்கும்
அற்புத பறவையாய்  அகிலத்தில் செதுக்குமே

ஜன்ஸி கபூர் - 15.06.2020


நட்பே துணை


'அவள் கணவன் இறந்த செய்தி  இடியாய் இறங்கியது. அவள் மனதில் துளிர்த்திருந்த/ எதிர்கால கனவுகள் எதிர்பார்ப்புக்கள் அனைத்துமே ஒரு நொடியில் காணாமல் போயின. இனி ஒன்றுமே இல்லை.  அழுவதைத்தவிர......

'அம்மா பசிக்குது'/

மெல்லிய குரலில் விசும்பிய  மூன்று வயது மகள் அனுஜாவை அணைத்தவாறே கண்ணீரில் கரைந்தாள் செல்லம்மா.

செல்லம்மா............ வறுமைப்பட்ட பெற்றோருக்கு செல்லமாகப் பிறந்த மகள்தான். பெற்றோரின் ஆசியுடன் , கூலித் தொழிலாளி நடேசனுடன் வாழ்வில் இணைந்தாள். அவ் வசந்த வாழ்வின் பொக்கிஷமாக அனுஜா

அன்று ஒரு மாலைப்பொழுதில் வேலைக்குச் சென்றவன்  உரிய நேரத்திற்கு வீடு திரும்பவில்ல.
அந்த இரவு கண்ணீரில் கரைந்தது.

மறுநாள்..........

அதிகாலை காவல் நிலையத்திலிருந்து கைபேசி அழைப்பு வந்தது. விபரம் சொன்னார்கள்.

மரக்கிளைகளை வெட்டும்போது/ கால் தவறி வீழ்ந்து பிணமாகி இருந்தான் அவள் கவலைக்குள் மூழ்கி விரக்தியடைந்தாள்.
 
யார் யாரோ எல்லாச் சடங்குகளையும் செய்து முடித்தார்கள்.

ஆனாலும் வாழ்க்கை இன்னும் முற்றுப் பெறவில்லை.
மகளின் வாழ்வுக்கான ஆரம்பமாக இருந்தது./ வாழ்ந்துதான் ஆக வேண்டும்

சிந்தனைக்கோலங்களில் சிறைப்பட்டிருந்தவளை யாரோ சுயநினைவுக்குள் இழுத்தார்கள்.மெல்ல நிமிர்ந்தாள்..

எதிரே...........

சோகத்தின் இறுக்கத்திலும் கண்கள் ஆச்சரியப்பட்டு விரிந்தன.

'பவ்யா'........சிரிக்க முயன்றாள்.  சிறைப்பட்டிருந்த சோகம் வென்றது.

தன் பள்ளிக்கூட நண்பியை இத்தனை வருடங்களின் பின் சந்திப்பாளென்று கனவில்கூட அவள் நினைத்துப் பார்த்திருக்கவில்லை.நண்பியின் விழிகளில் வழியும் கண்ணீர் அவளை இன்னும் உசுப்பேத்தி இருக்க வேண்டும்.  அழுகை வெடித்தது. தோழியை சிறு குழந்தையாய் அணைத்தாள்.

'எல்லாம் கேள்விப்பட்டேன். இனி உனக்கு யாரும் இல்லையென்று நினைக்காதே. உனக்கு நான் இருக்கிறேனடி.. உன்னோட வாழ்க்கை இன்னும் அழிஞ்சு போகல  செல்லம்"
.
என்றவாறு அணைத்த தன் தோழியின் கரங்களுக்குள் சிறைப்பட்டாள் செல்லம்மா.

கண்ணீர் சோகம் கலந்த ஆனந்தத்தின் கலவையாக மாறிக் கொண்டது. அறுந்து போன அவள் வாழ்க்கை . நட்பின் துணையால் மீண்டும் தளிர்க்க ஆயத்தமாகிக் கொண்டது.

கதையாக்கம்
ஜன்ஸி கபூர்