About Me

2020/07/29

அகவை வாழ்த்து

அகவை ஆறினில் பதித்திட்ட தளத்தில்/
ஆனந்தக் கீற்றுக்கள் தேனூற்றி மகிழும்/
அகம் நுழையு முந்தன் கவிதனில்/
அமிர்தச் சுவையூற்றாய் தமிழும் நனையும்/

ஆக்கமும் ஊக்கமும் எமக்களிக்கும் நிலா முற்றமே/
ஆற்றலுடன் வளர்கின்றாய் அன்னைக் குழுமமாய்/
ஆர்வத்துடன் உனை செதுக்கிய நிறுவனர்க்கும்/
அழகாய்  உனக்குள் உயிரூட்டும் குழுமத்திற்கும்/

அழகு சான்றிதழ்களும் அணைத்திட/
அற்புதத் தளமானாய் எம் பயணத்திற்கே/
அன்பான வாழ்த்துக்கள் அகம் மகிழ/
ஆயிரம் வருடங்கள் ஒளிர்ந்திடு அகிலத்தினுள்/


- ஜன்ஸி கபூர் - 28.07.2020

2020/07/28

வாழ்க்கை

வறுமையும் தொலைத்ததோ குறும்பின் குறுநகை
சிறகடிக்கும் விழிகளிலோ பசித் துடிப்பு
சிறு ரூபாய்க்குள் முடங்குகின்றதே வாழ்க்கை         

ஜன்ஸி கபூர் -28.07.2020





 



 

கவிப் பயணம்

நிலாவில் கவி வடித்தேன் நித்தமும்
உலாவியே நனைந்தேன் அமிர்தத் தமிழில்
கனவுக்குள்ளும் உணர்வு பிழியும் கவியுமானேன்
கற்பனைச் சாரலுக்குள்ளும் காதல் நனைத்தேன்
சொற் சுவைதனில் சிந்தையும் மகிழ
அற்புதத் தளமாம் முற்றத்தில்  பயணிப்போம்

ஜன்ஸி கபூர்  
 



தூளியிலே ஆட வந்த நிலா

தூளியிலே ஆட வந்த நிலாவே/
தூங்கவிடாமல் தூண்டியிழுக்கிறே உந்தன் அன்பாலே/
பொங்கும் புதுப்புனலாக உரசுகின்றாய் உயிருக்குள்ளே/
மங்காப் புகழ் வருடும் மனசுமாகின்றாய்/

நித்தில மடிதனில் செந்தமிழ் சிந்திடும்/
முத்தின் சுடரொளியே கண்ணுறங்கு/
எத்திசையு மறிந்திடும் உந்தன் கலைப்பணி/
முத்துப்பேட்டை மாறனார்   வார்த்திட்ட தமிழ்ப்பணி/

வண்ணங்கள் பிழிந்தூற்றும் அழகெல்லாம் தலைப்பாகும்/
எண்ணங்கள் உரசிடும் விரலெல்லாம் எழுதுகோலாகும்/
கண்களும் கசிந்திடுமே மொழிக் காதலால்/
விண்ணும் வியந்திடுமே உந்தன் பேரழகால்/

ஆறின் அகவைக்குள் உயிர்க்கின்ற நிலாவே/
ஆனந்தமாக உதித்திடு ஆயுளெல்லாம் நீண்டிடு/
ஆரோக்கியமாய் வளர்ந்திடுவாய் அகிலமும் உன்னோடு/
ஆரத்தழுவுகிறேன் நிலாவே வாழ்ந்திடு பல்லாண்டு/

ஜன்ஸி கபூர்