About Me

2020/09/18

மழைத் தோரணங்கள்

 மழைத் தோரணங்கள் அழகின் ஆபரணங்கள்;

தவழுதே தரணிப் பந்தலின் அலங்காரங்களாய்

பருகிடும் விழிகளில் எழிலின் கலவை

பரவசத் துடிப்பினில் ஈரத்தின் சாயல்

இன்ப ரசிப்பினில் களிக்கின்ற விரல்களும்

இதமாக அசையட்டுமே இங்கு கவியாத்திட

காத்திருக்கின்றோம் உங்கள் கற்பனைக்குள் ஊற்றெடுக்கின்ற

அனுபவங்களையும் சுவைத்திடவே 

வாருங்கள் கவியுறவுகளே கவியெழுதலாம் அழகாக

18.09.2020




அன்பின் ஆளுகை

 

மாற்றம் செய்தால் பழமைக்குள் புதுமையே/

ஏற்ற வாழ்வுக்குள் சுற்றிடுமே நம்முலகும்/

சீற்றம் காணாத இயற்கையைக் காத்திடவே/

சுற்றத்தின் கரங்களை பற்றுவோம் வலுவோடு/

ஆற்றலுடன் பிணைந்த அன்பின் ஆளுகையால்/

அவனிக்குள் நாமும் சாதனைகளை நிகழ்த்தலாமே/


ஜன்ஸி கபூர்  





2020/09/17

என்னவளே

 

ஏந்துகின்றேன் உனையே எந்தன் ஆசைக்குள்ளே/

ஏக்கங்கள் வெடிக்கின்றதே உனையே காண்கையிலே/

ஏந்திழை உனையே உயிருக்குள் உருக்குகையில்/

எனையும் தொடுகின்றதே உந்தன் புன்னகையும்/

 

உந்தன் விழிகளில் மொய்த்திடும் கனவுகளை/

எந்தன் மனமும் உரசி ரசித்திடவே/

பருவத்தின் நூலிழையில் பறக்கின்றேன் உன்னோடு/

கரும்பைப் பிழிந்தூற்றி நனைக்கின்றாய் என்னுயிரையே /  


இதழ்களின் விருந்தோம்பலில் சிலிர்க்கின்ற தேகமும்/

இதயத் துடிப்பினில் வருடுகின்றதே தித்திப்பை/

மையிடும் கண்களும் சந்தனத் தேகமும்/

பொய்யில்லா அன்புக்குள் வெட்கத்தில் சிவக்குதே/


உந்தன் தரிசனத்தினை நுகர்ந்திடும் பார்வைக்குள்/

உரிமை பெறுகின்றதே வனப்பான அன்பும்/

உறங்கிடாத நினைவுகளும் அலைகின்றதே நிழலாக/

உணர்ச்சியின் மையத்தில் வீற்றிருக்கின்றாய் இராணியாக/


எந்தன் சுவாசத்தினுள் விட்டுச் செல்கின்றாயே/

உன் அழகான வாசனையைக் கவிதையாக/

என்னையும் மொழிபெயர்க்கின்றேன் தினமும் தனிமைக்குள்/

எனக்குள் என்னையே அடையாளமிடுகின்றாய் அன்பினாலே/


ஜன்ஸி கபூர் - 17.09.2020

 

கல்லறையின் ஈரலிப்பில்

 கவிதாஞ்சலி வடிக்கையில் வழிகின்றதே கண்ணீரும்

கலங்கிய விழிகளின் ஈரலிப்பில் கல்லறையும்

உயிர்த்திடுமோ அன்பின் நினைவுகளையும் சுமந்தே

உணர்வும் துடிக்கின்றதே ஆத்மா சாந்திக்காக


ஜன்ஸி கபூர் - 17.09.20