சின்ன வயதில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்வதென்றால் மகிழ்வினை வார்த்தைகளில் வர்ணிக்கவே முடியாது. அதிலும் புகைவண்டிப் பயணம் என்றால் ..........
கனவுகளைச் சுமந்து எதிர்பார்ப்புக்களை நெஞ்சில் தாங்கி சின்னச் சின்ன விடயங்களையெல்லாம் இரசித்து வாழ்ந்த அந்த பட்டாம்பூச்சிக் காலம் மறக்கப்பட முடியாத வசந்த காலம்...
வெளிநாடு செல்வதுபோல் கொழும்பு போவதற்காக புதிய ஆடைகள் தைத்து பல நாட்கள் ஆயத்தப்படுத்தலை மேற்கொண்ட அந்த சின்ன வயதுப் பருவம் இன்றும் கண்களில் மெலிதான விம்பம்போல் தெறித்துச் செல்கின்றது.
தந்தை அரச உத்தியோகத்தர் என்பதால் புகையிரத ஆணைச்சீட்டுப் பயணம். வுழமையாக கொக்குவில் புகையிரத நிலையத்தில் வைத்தே ஏறுவோம். எனக்கு எப்பொழுதும் ஜன்னல் அருகிலான இருக்கையே வேண்டும் என்பதால் என் பெற்றோர் அதனை ஒதுக்கித் தந்துவிடுவார்கள். நான் கடந்து செல்லும் ஒவ்வொரு ஊர் பற்றிய குறிப்பை எனது பதிவேட்டில் குறித்தவாறு பயணிப்பது எனது வழமை. இயற்கையின் இரசிப்பை மனதினுள் படரவிட்டவாறு பயணிப்பது அலாதி சுகம்தானே...
பிரம்மாண்டமான கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இறங்கியதும், அந்த பரபரப்பினை நுகர்ந்தவாறு முன்னே செல்கின்ற தந்தையைப் பின்தொடர்ந்து செல்வதும், அந்த நகரத்தின் நகர்வை அதிசயமாக உள்வாங்கிக் கொண்டதும் இன்றும் மறக்கப்படமுடியாத அழகிய கனாக்கள் போல்தான் இருக்கின்றது.
அப்பொழுது கொழும்புத் தண்ணீரைக் குடிக்கும்போது கசப்பதைப் போன்ற உணர்வு. வாப்பாவிடம் சொல்லி கடைகளில் சுடுநீர் வாங்கிப் பருகுவோம்.
ஆனால் யுத்தத்தால் இடம்பெயர்ந்து வேறு மாவட்டங்களில் வாழப் பழகிய பிறகு, அந்தக் கனவுப் பயணம் சுவையற்று இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. தண்ணீர் சுவையில்கூட மாற்றம் தெரியவில்லை. இரசிப்பின் வருடலை மனம் இழந்துவிட்டது போலும்..
காலம் மனதை மட்டுமல்ல வாழ்வையும் மாற்றிவிடுகின்றது..
ஜன்ஸி கபூர் -11.04.2021