About Me

2021/04/13

வீழ்வாயோ தமிழே

 


தமிழே தவமெமக்கு தரணிக்கும் பாலமது 

தாயின் மூச்சுக்காற்றால் தத்தானதே நித்திலத்தில் 

செங்கரும்புச்சாறு பிழிந்தே செதுக்கிய எம்தமிழே 

செல்லுமிடமெல்லாம் ஒலிக்கின்றதே செந்தமிழின் நாதம் 


உயிரும் மெய்யுமாகி உணர்வுக்குள் உறைந்தே 

உயிர்க்கின்றாய் அழகாக உன்னத மொழியாகியாகி 

தொடக்கப்புள்ளியாய்க் குவிந்தே தொடர்கின்றாய் வாழ்வினில் 

தொன்மைத் தமிழென மகுடமேந்தி தித்திக்கின்றாய் 


சிங்கமொழியே சிரிக்கின்றாய் அங்கத்தின் மூச்சுக்காற்றாகி 

சிந்தைக்குள் குளிர்ந்தே சித்தமெங்கும் நிறைகின்றாய் 

வீழ்வாயோ தமிழே வீழ்த்திடுமோ நவீனமும் 

விரிகின்ற பொழுதெல்லாம் விரிகதிர் நீதானே 


ஜன்ஸி கபூர் - 05.11.2020


வறுமையும் வாழ்வும்

 

வலிக்குள் வாழ்வினைத் துரத்துகின்ற வறுமைக்குள்/ 
வீழ்ந்தே துடிக்கின்றேன் விடிவும் இல்லையே/ 

 அழுகின்ற கண்களுக்குள் அழுகுகின்றன இன்பங்கள்/ 
விழுகின்ற நீரினுள் புன்னகையும் கரைகின்றதே/ 

 துடிக்கின்ற வயிற்றுக்குள் துயில்கின்ற பசியைத்/ 
துரத்திட வழியும் தெரிந்திடாத மனது/ 
 துக்கத்தில் நனைகின்றது தவிப்பினைச் சுமந்தபடி/ 

கிழிசல் ஆடைக்குள் கிழிந்த கனவுகளும்/ 
அமிழ்கின்றன தினமும் ஆசைகளை மறைத்தபடி/ 

நிழல்களும் வெம்மைக்குள் நொருங்கிடும் வாழ்வினில்/ 
அழகான அன்பை தினமும் சேமிக்கிறேன்/ 

 ஜன்ஸி கபூர் - 27.11.2020
 

உறவு

 

உணர்வுகள் ஒன்றியே/

உறவுக்குள் இணைந்தோம்/

உன்னதமான வாழ்வுக்குள்/

வளர்கின்றது நம் குடும்பம்/


ஜன்ஸி கபூர் - 08.11.2020

மணமேடை

 

இரு மனங்களின் இணைவில் பூரிக்கின்ற மணமேடைக்குள்/
வாலிபக் கனவுகளும் உயிர்க்கின்ற மங்கள நேரம்/
இன்னிசை ஒலிகளும் மானசீக வாழ்த்துக்களும் ஆசிகளும்/
மகிழ்வின் தோரணங்களாகி நிறைக்கின்றதே அழகுப் பந்தலினுள்/
பண்பியல் வாழ்வாகத் துளிர்க்கின்றது  இனிய இல்லறமும்/ 

ஜன்ஸி கபூர் - 18.11.2020