About Me

2021/05/01

உழைப்பு.

 


உழைக்கும் கரங்கள்

உயர்வின் உரங்கள்

வாழ்வும் செழிக்க

வாழ்வோம் உழைத்தே

ஜன்ஸி கபூர் - 01.05.2021


ஐந்தறிவும் அன்பால்

 


சொல்லும் கேட்கும் ஐந்தறிவும் அன்பால்
துள்ளும் கன்றும் உணர்வை வருடுமே
அள்ளும் விழிகளின் அழகை மறந்தே
கொல்லும் மானிடர் வதைத்தே புசிப்பினும்
வெல்லும் காருண்யம் மாக்களும் நலமாக

ஜன்ஸி கபூர் - 01.05.2021


2021/04/30

உழைப்பின் மகிமை

 


 தொழிலாளர் சிந்துகின்ற வியர்வைத் துளிகள்

வழியும் செல்வங்களாக நாட்டின் அபிவிருத்தியில்

ஆற்றலும் அர்ப்பணிப்பும் முயற்சியும் வலியும்

குவிக்கும் வெற்றிகளால் உழைப்பும் பெருமையுற

வையகத்தில் புகழும்  என்றும் ஓங்கும்


ஜன்ஸி கபூர் - 30.04.2021

உழைக்கும் கரங்கள்

உணர்வுக்குள் உழைப்பேற்றி 
              செய்தொழில் தெய்வமென்றே 
உயிர்த்தே உவக்கின்ற 
              செந்நிறக் கரங்கள்/
வியர்வைத் துளிகளால் 
              உரமேறுகின்றன தினமும் 
விளைச்சல் மேட்டில் 
              வெற்றிகளைக் குவித்திடவே/

தொடுகின்ற வறுமையும் 
              தொடர்கின்ற வலியும் 
மிடுக்குடன் மிரட்டும் 
              போதும் தடுமாறாது 
விடியலைத் தேடி 
             விருப்புடன் பயணிக்கும் 
துடிப்பான மனிதர்கள் 
             வெற்றித் திலகங்கள் 

பொங்கும் வெயிலிலும் 
            பொழுதினை வீணாக்காது 
உழுதே மண்ணையும் 
            பொன்னாக்கும் தங்கங்கள் 
ஊனை உருக்கி 
            உடலை வருத்தி 
தரணிக்குள் தலைகாட்டுகின்ற 
            செல்வங்கள் இவர்கள் 

நித்திரை துறந்து 
             நித்திலம் காத்தே 
சொத்தென வளங்களை 
            நாட்டுக்குள் குவிக்கும் 
முத்தான மனிதர்கள் 
             பெருமையின் வித்தவர்கள் 
சத்தான வாழ்விற்கும் 
           சரிதமாகும் வீரர்கள் 

ஜன்ஸி கபூர் -30.04.2021