About Me

2021/06/01

எலான் மஸ்க்


பணம் மனித வாழ்வின் போக்கினையே தீர்மானிக்கின்ற மாபெரும் சக்தியாக விளங்குகின்றது. செல்வம் கொண்டோர் மனித சமூகத்தின் கௌரவ அடையாளமாகப் பார்க்கின்ற காலகட்டத்தில் வாழ்ந்து வருகின்றோம்.

பணம் சம்பாதிப்பதும், அதனை சேமிப்பதும், பாதுகாப்பதும் ஒரு கலைதான். இக்கலை நுட்பம் அறிந்தவர்களை இன்று உலகமும் பெருஞ் செல்வந்தர்களாக பிரமித்துப் பார்க்கின்றது.

"பணம் பாதாளம் வரை பாயும்" என்பார்கள். அந்தப் பணத்தைத் திரட்டுகின்ற வாழ்க்கைப் போராட்டத்தால் பலரது கனவுகளும், சந்தோசங்களும், இளமையுமே காணாமல் போய் விடுகின்றன.

உலகின் ஓர் மூலையை வறுமை ஆக்கிரமித்துக் கொண்டிருக்க, மறுமுனையிலே செல்வத்தின் உச்சக் கட்டம் இமயம் வரை எட்டி நிற்கின்றது.

இன்றைய வாழ்வினைத் தீர்மானிக்கின்ற மையப் புள்ளியான செல்வத்தை ஆள்கின்ற செல்வந்தர்களுள், முதல் பத்து வரிசையில் இடம்பெற்ற ஒருவரே எலான் மஸ்க்.

இவர் 1971 ஜூன் 28, அன்று கனேடிய தாயிற்கும், தென்னாபிரிக்க தந்தைக்கும் பிறந்தவர். இவர் தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் வளர்ந்தார். 

பன்னிரெண்டு வயதாக இருக்கும்போதே, தமது வீடியோ விளையாட்டுக்கு அவரே குறியீடுகளை எழுதி விற்று, பணம் சம்பாதித்த இளம் வயது முயற்சியாளன்.

கனடாவில் ஒண்டாரியோ கிங்ஸ்டனில் உள்ள குவீன்ஸ் பல்கலைக் கழகத்திலும்,


பின்னர் 


பென்சில்வேனியா பல்கலைக்கழகத்திலும் படித்தார். 

பொருளியல் மற்றும் தெரியியல் ஆகியவற்றில் இளங்கலைப் பட்டங்கள் பெற்றார். ஆய்வுகள் செய்து பட்டம் பெற கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். ஆனால் படிப்பை அங்குத் தொடரவில்லை.

இவர் டெஸ்லோ நிறுவனத் தலைவர். கனேடிய, அமெரிக்க தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர் மற்றும்  முதலீட்டாளர்.  இவரது சொத்து மதிப்பு 202  பில்லியன் டாலர்களாம். 

அடடா..... ஆச்சரியத்தில் என் விழிகளும் விரிந்து நிற்கின்றன. 

  • 1999 இல் பேபால் என்ற ஒரு நிதி நிறுவனத்தைத் தொடங்கினார்.

  • ஜிப் 2 ஐ தனது சகோதரர் கிம்பலுடன் இணைந்து நிறுவி சில காலம் கழித்து விற்றார். 
  • 1999 இல் எக்ஸ் டாட் காம் என்ற குழுமத்தை  தொடங்கினார்.
  • 2002 ஆம் ஆண்டில்  மஸ்க் விண்வெளி உற்பத்தியாளர் மற்றும் விண்வெளி போக்குவரத்து சேவை நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தை நிறுவினார். 

  • 2004 ஆம் ஆண்டில்  அவர் மின்சார வாகன உற்பத்தியாளரான டெஸ்லா மோட்டார்ஸ் இன்க்  இல் தலைவராகவும் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் சேர்ந்தார். 
  • பிறருடன் இணைந்து இவர் உருவாக்கிய  டெஸ்லா மோட்டார்ஸ் தயாரித்த மின்சார மகிழுந்துகள்     ஜெனரல் மோட்டார்ஸ் குழுமத்தையும் விஞ்சிவிட்டது என 2017 ஏப்ரலில் அறிவிக்கப்பட்டது.

  • 2008 இல் அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக ஆனார். 
  • 2016 இல் சோலார் சிட்டி என்ற குழுமத்தை வாங்கினார்.
  • 2016 ஆம் ஆண்டில்  நியூராலிங்க் என்ற நரம்பியல் தொழில்நுட்ப நிறுவனத்தை அவர் இணைந்து நிறுவினார்.
  • மேலும் சுரங்கப்பாதை கட்டுமான நிறுவனமான "தி போரிங்" நிறுவனத்தை நிறுவினார்.  
  • ஓபன் AI என்ற ஆராய்ச்சி நிறுவனத்தில் இவர் பொறுப்பேற்றுச் செயல்பட்டார். இது செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக் குறித்து ஆய்வு செய்கிறது. மேலும் நியுராலிங்க் என்ற அமைப்பில், மனிதர்களின் மூளையில் கருவியைப் பொருத்தி மென்பொருளுடன் இணைக்கும் முயற்சியை மேற்கொள்வதில் எலான் மஸ்க் முனைப்பாக இருக்கிறார்.
அடடா இவரது சொத்துக்களின் பட்டியல் இவ்வாறு நீண்டு கொண்டே செல்கின்றது. இவ்வாறாக மலை போல குவிந்து கிடக்கின்ற இந்த செல்வத்தின் சொந்தக்காரர் வயது 49 என்றால் வியப்பாகத்தானே உள்ளது.

ஒவ்வொருவர் மனதுக்குள்ளும் பெறுமதியான இலட்சியக் கனவுகள் இருக்கும். அவற்றின் உயிர்ப்பிற்காக ஒவ்வொருவரும் அர்ப்பணிப்புடன் அயராது உழைக்கின்றார்கள். வணிக நோக்கில் விண்வெளிக் கலங்களை உருவாக்கி, விண்வெளி சுற்றுப் பிரயாணத்தினை நடைமுறைப்படுத்துகின்ற கனவில், முயற்சியில் இருக்கின்றார். 

அதுமாத்திரமல்ல 2024 ஆம் ஆண்டில் மனிதர்களை செவ்வாய்க்கிரகத்தில் குடியமர்த்தும் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றார்.

                                                 

இவரின் நம்பிக்கை பலிக்குமா?
காலம் பதில் சொல்லட்டும்!

ஜன்ஸி கபூர் - 01.06.2021


சினோபார்ம் தடுப்பூசியும் நாமும்



யாழ்ப்பாணத்தில் தற்போது கொரோனா தடுப்பூசியான சினோபார்ம்   கிராம சேவையாளர் மட்டத்தில் தற்போது ஏற்றப்பட்டு வருகின்றது. உண்மையில் இது இம்மக்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகும். பல வருட கால யுத்த வலியில் அல்லல்பட்ட மக்கள் அண்மைக் காலமாக இந்நோயின் பாதிப்பினாலும்; அவதியுறுகின்றார்கள். கடந்த சில நாட்களாக சிறு வயதினருக்கும் இந்நோய்த்தாக்கம் ஏற்பட்டுள்ளமை கவலையளிக்கின்றது.

எனவே வீரியமிக்க கொரோனாத் தொற்றிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள இத்தடுப்பூசி அவசியமாகின்றது. எதிர்வரும் நாட்களில் இத்தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள நானும் ஆவலுடன் காத்திருக்கின்றேன்.

உடலில் நோய் எதிர்க்கின்ற சக்தி குறைவடைகின்றபோதே எந்த நோயும் நம்மை ஆக்கிரமிக்கின்றது. இது ஆளுக்காள் வேறுபடக்கூடியது.

நோய் எதிர்ப்பு சக்தி என்பது யாது?

உடலை நோயிலிருந்து காக்கின்ற தன்மை என சுருக்கமாகக் குறிப்பிடலாம். நோய் எதிர்ப்பு மண்டலம் என்பது கலங்கள், இழையங்கள், உடலுறுப்புக்களால் ஆக்கப்பட்ட நமது உடலைப் பாதுகாக்கின்ற கட்டமைப்பாகும். நமது குருதியிலுள்ள வெண்குருதி சிறுதுணிக்கைகளே நம்மை நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்கின்றன.  

ஒரு மைக்ரோ லீற்றர் இரத்தத்தில் 4000 தொடக்கம் 11000 வரையிலான வெண்குருதி சிறுதுணிக்கைகள் காணப்படுகின்றன. இக்கூறுகள் குறைந்தால் உடலில் நோயை எதிர்க்கின்ற தன்மையும் குறைந்து விடுகின்றது.

சரி...... இத்தடுப்பூசியின் தன்மையை இனிப் பார்ப்போம்.

COVID-19 நோயை உருவாக்கும் வைரஸ் SARS-CoV-2 இனைக் கட்டுப்படுத்துவதற்காக இது சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள அரசுக்குச் சொந்தமான சினோபார்ம் என்ற நிறுவனம் மூலமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே   இத்தடுப்பூசி  பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் அண்மைய ஆய்வுகளின் அடிப்படையில் திரிபடைந்த வைரஸூகளுக்கு எதிராகவும் இது பாதுகாப்பானது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதலைப் பெற்ற 6வது தடுப்பூசி இதுவாகும். 22 இற்கும் மேற்பட்ட நாடுகள் இதனைப் பயன்படுத்தியுள்ளன எனும் தகவலை அறியக்கூடியதாக உள்ளது.

இது 80 சத வீதம் செயற்றிறன்மிக்கதாம். அதாவது இவ்வூசி பெற்றுக் கொண்டோரில் 80 சதவீதமானோருக்கு கொரோனாத் தொற்று ஏற்படாதாம். ஆனாலும் ஏனையோருக்கு தொற்று ஏற்பட்டாலும்கூட அது பாதிப்பின்றிக் காணப்படும்.

'நோய் எதிர்ப்பு ஆற்றல் செயல்பாட்டில் உங்கள் உடலை முழுக்க புதிய வகையான செயல்பாட்டுக்குத் தயார் செய்வதற்காக  இரண்டாவது முறையும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பதில் அவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்'' என்று லண்டன் இம்பீரியல் கல்லூரியில் நோய் தொற்று சிகிச்சைத் துறை பேராசிரியர் டேன்னி ஆல்ட்மன் தெரிவித்தார்.

SAGE BIBP தடுப்பூசியை 2 அளவுகளாக (0.5 மில்லி) பயன்படுத்த WHO பரிந்துரைக்கிறது. 

எனவே 3 முதல் 4 வாரங்கள் இடைவெளியில் இரண்டு டோஸ்கள் செலுத்தப்பட வேண்டும். முதலாவது டோஸ் ஏற்றப்பட்டு 4 வார இடைவெளியின் பின்னர் இரண்டாவது டோஸ் ஏற்றப்படவேண்டும்.

முதலில் யாருக்கு தடுப்பூசி போட வேண்டும்?

 18 வயதுக்கு மேற்பட்ட  அதிக ஆபத்து உள்ள சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் வயதானவர்களுக்கு தடுப்பூசிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

  • அத்துடன் தொற்றா நோய் உள்ளவர்களுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டால் பாதிப்பு அதிகம். எனவே நீரிழிவு, இருதய நோய், குருதி அமுக்கம் போன்ற தொற்றா நோய் உள்ளவர்கள் கட்டாயம் தடுப்பூசி ஏற்றவேண்டும். 
  • எச்.ஐ.வி. தொற்றுள்ளவர்கள் அது கட்டுப்பாட்டில் இருக்கும்போது இந்தத் தடுப்பூசியை ஏற்ற முடியும்.
  • பாலூட்டும் தாய்மாருக்கு கட்டுப்பாடில்லை

  • மேலும் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைப்பதற்கான மருந்து எடுப்பவர்களும் குருதி உறைதல் பிரச்சினை உள்ளவர்களும் கடும் ஒவ்வாமை உள்ளவர்களும் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று இத்தடுப்பூசியை செலுத்த முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • கொரோனாத் தொற்று உள்ள ஒருவர் இந்தத் தடுப்பூசியை ஏற்ற முடியாது. தொற்று மாறிய பின்னர் அதாவது இரு வாரங்கள் கழித்து அவர்கள் தடுப்பூசியைப் போட முடியும்.
  • கர்ப்பம் தரிப்பதற்கு எதிர்பார்ப்பவர்களும்  கர்ப்பிணித் தாய்மாரும்  இந்தத் தடுப்பூசியை ஏற்றக் கூடாது.
      X
  • 38.5ºC க்கு மேல் உடல் வெப்பநிலை உள்ள எவருக்கும் காய்ச்சல் வராத வரை தடுப்பூசியை ஒத்திவைக்க வேண்டும்.

 இந்தத் தடுப்பூசி உடலில் சென்று செயற்படத் தொடங்கும்போது தலையிடி, காய்ச்சல், உடம்பு நோ  போன்ற   பக்கவிளைவுகள் ஏற்படும். 

தடுப்பூசி நம்மை பாதுகாக்கின்ற ஒரு அரணே தவிர முழுமையான தீர்வல்ல. எனவே தடுப்பூசி ஏற்றிய பின்னரும் 

முகக்கவசம் அணிதல், 

சமூக இடைவெளி பேணுதல், 

கைகளை அடிக்கடி கழுவுதல் 

போன்ற செயற்பாடுகளைத் தொடரவேண்டும். ஏனெனில் தடுப்பூசி ஏற்றியவருக்கு கொரோனாத் தொற்றால் பாதிப்பு ஏற்படாதபோதும், அவர் கொரோனாக் காவியாக இருக்கலாம். அவர் ஊடாக தடுப்பூசி ஏற்றாத ஒருவருக்குக் கொரோனாத் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே ஊசி ஏற்றப்படுகின்ற சந்தர்ப்பங்களை அரசு நமக்கு வழங்கினால் நிச்சயம் நாம் அதன் மூலமாக நமது பாதுகாப்பினையும் நம்மைச் சூழவுள்ளோரின் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

 ஜன்ஸி கபூர் - 01.06.2021

 


 


2021/05/31

Jeff Bezos



மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருமே ஏதாவது சாதிக்க வேண்டுமென்ற உத்வேகத்தில் தமது நகர்வுகளை முன்னெடுக்கின்றனர். நமது முன்னேற்றமானது முயற்சியிலும், ஆற்றலிலும், தன்னம்பிக்கையிலும், அதிஷ்டத்திலும் தங்கியுள்ளது. சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் மனதில் உதிக்க ஆரம்பிக்கையிலேயே, அத்திசையிலேயே நாமும் பயணிக்க ஆரம்பித்து விடுகின்றோம். செல்வத்திலும் சரி, செல்வாக்கிலும் சரி நாம் முன்னேற வேண்டுமானால், நமது கண்முன்னே வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கின்ற முன்மாதிரிகளை நாமும் கொஞ்சம் திரும்பிப் பார்க்க வேண்டும். 

அந்த வகையில் உலகின் தலைசிறந்த பணக்காரர்களின் வாழ்வினை நாம் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்.

யார் அவர்கள்......................

 

Jeff Bezos

இவர் 57 வயதானவர். உலகின் பணக்காரர் வரிசையில் முதலிடத்தில் இருக்கின்றார். 1994 ஆம் ஆண்டில் அமேசான் எனும் நிகழ்நிலை வர்த்தக நிறுவனத் தலைவர்.

இவரின் சொத்தின் பெறுமதி பற்றி உங்களுக்குத் தெரியுமா?

$177 billion இலும் அதிகம் எனக் குறிப்பிடுகின்றார்கள்.

நம்மால் கற்பனைகூட செய்து பார்க்க முடியாத பணத் தொகைதானே இது.

ஒவ்வொரு சாதனையாளர்களையும் நாம் நோக்கினால் அவர்களின் உயர்வின் பின்னணியில் கடுமையான உழைப்பு இருக்கும்.

இவரிடமும் அக்குணம் இருந்தது. ஆன்லைன் புத்தக விற்பனை செய்யும் ஆர்வமே இவரது சிந்தனையில் முதன்முதலாக ஏற்பட்டதாம். 

அதனை தனது முதலாளியான டேவிட். ஈ. ஷாவிற்கு கூறியபோது, அவர் ஆர்வம் காட்டவில்லையாம். ஆனாலும் அவர் மனம் தளரவில்லை. அமேசன்.காம் எனும் நிறுவனத்தை நிறுவினார். 

இது உலகில் முதல்தர சில்லறை விற்பனைக்குப் பெயர் போனது. பின்னர் 2017 ஆம் ஆண்டில் உணவுகளையும், 2018 ஆம் ஆண்டில் மருந்துகளையும், விற்பனை செய்கின்ற நிறுவனமாக இதன் விரிவாக்கம் பரவிச் சென்றது எனலாம். இன்று பல பொருட்களின் முதற்தர விற்பனை மையமாக இந்நிறுவனம் பூமியில் தரித்துள்ளது.

 அமேசானின் பங்கு விலை ஆன்லைன் ஷாப்பிங்கிற்கான அதிகரித்த தேவையை உயர்த்தியதால், நுகர்வோர் வீட்டிலிருந்தே கொள்வனவு செய்யும் நடைமுறை உருவாக்கப்பட்டது. இன்றைய கொவிட் அலையின் மிக வேகமான பரவலின்போது நடைமுறையிலிருக்கின்ற ஆன்லைன் வியாபாரத்தின் முன்னோடி நிலையை இவர் அன்றே உருவாக்கியுள்ளார்.

1999 ஆம் ஆண்டில் பில்கேட்ஸூக்குப் பிறகு 100 பில்லியன் டாலருக்கும் அதிகமாக வருமானம் பெறுகின்ற முதல் மனிதராக பெசோஸ் விளங்குகின்றார்.

   


வாஷிங்டன் போஸ்ட் 

மற்றும் 

ப்ளு ஆரிஜின் எனப்படுகின்ற விண்வெளி நிறுவனம் 

   10,000-year கடிகாரம் 

என்பன இவரது அடையாளங்கள் என்றால் மிகையில்லை. 

சிறந்த திட்டமிடலுடன் கூடிய முயற்சி யாவும் வெற்றியின் நிழலிலே அழகாக மிளிர்கின்றது.

ஜன்ஸி கபூர் -31.05.2021    


சந்தனப் பிழம்பு

இருளை உடைத்துக் கொண்டு

இமயம் தொடுகின்ற  சந்தனப் பிழம்பு 

கண்ணிற்கும் குளிர்ச்சிதானே!


- ஜன்ஸி கபூர் -

        31.05.2021