யாழ்ப்பாணத்தில் தற்போது கொரோனா தடுப்பூசியான சினோபார்ம் கிராம சேவையாளர் மட்டத்தில் தற்போது ஏற்றப்பட்டு வருகின்றது. உண்மையில் இது இம்மக்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகும். பல வருட கால யுத்த வலியில் அல்லல்பட்ட மக்கள் அண்மைக் காலமாக இந்நோயின் பாதிப்பினாலும்; அவதியுறுகின்றார்கள். கடந்த சில நாட்களாக சிறு வயதினருக்கும் இந்நோய்த்தாக்கம் ஏற்பட்டுள்ளமை கவலையளிக்கின்றது.
எனவே வீரியமிக்க கொரோனாத் தொற்றிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள இத்தடுப்பூசி அவசியமாகின்றது. எதிர்வரும் நாட்களில் இத்தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள நானும் ஆவலுடன் காத்திருக்கின்றேன்.
உடலில் நோய் எதிர்க்கின்ற சக்தி குறைவடைகின்றபோதே எந்த நோயும் நம்மை ஆக்கிரமிக்கின்றது. இது ஆளுக்காள் வேறுபடக்கூடியது.
நோய் எதிர்ப்பு சக்தி என்பது யாது?
உடலை நோயிலிருந்து காக்கின்ற தன்மை என சுருக்கமாகக் குறிப்பிடலாம். நோய் எதிர்ப்பு மண்டலம் என்பது கலங்கள், இழையங்கள், உடலுறுப்புக்களால் ஆக்கப்பட்ட நமது உடலைப் பாதுகாக்கின்ற கட்டமைப்பாகும். நமது குருதியிலுள்ள வெண்குருதி சிறுதுணிக்கைகளே நம்மை நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்கின்றன.
ஒரு மைக்ரோ லீற்றர் இரத்தத்தில் 4000 தொடக்கம் 11000 வரையிலான வெண்குருதி சிறுதுணிக்கைகள் காணப்படுகின்றன. இக்கூறுகள் குறைந்தால் உடலில் நோயை எதிர்க்கின்ற தன்மையும் குறைந்து விடுகின்றது.
சரி...... இத்தடுப்பூசியின் தன்மையை இனிப் பார்ப்போம்.
COVID-19 நோயை உருவாக்கும் வைரஸ் SARS-CoV-2 இனைக் கட்டுப்படுத்துவதற்காக இது சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள அரசுக்குச் சொந்தமான சினோபார்ம் என்ற நிறுவனம் மூலமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே இத்தடுப்பூசி பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் அண்மைய ஆய்வுகளின் அடிப்படையில் திரிபடைந்த வைரஸூகளுக்கு எதிராகவும் இது பாதுகாப்பானது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதலைப் பெற்ற 6வது தடுப்பூசி இதுவாகும். 22 இற்கும் மேற்பட்ட நாடுகள் இதனைப் பயன்படுத்தியுள்ளன எனும் தகவலை அறியக்கூடியதாக உள்ளது.
இது 80 சத வீதம் செயற்றிறன்மிக்கதாம். அதாவது இவ்வூசி பெற்றுக் கொண்டோரில் 80 சதவீதமானோருக்கு கொரோனாத் தொற்று ஏற்படாதாம். ஆனாலும் ஏனையோருக்கு தொற்று ஏற்பட்டாலும்கூட அது பாதிப்பின்றிக் காணப்படும்.
'நோய் எதிர்ப்பு ஆற்றல் செயல்பாட்டில் உங்கள் உடலை முழுக்க புதிய வகையான செயல்பாட்டுக்குத் தயார் செய்வதற்காக இரண்டாவது முறையும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பதில் அவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்'' என்று லண்டன் இம்பீரியல் கல்லூரியில் நோய் தொற்று சிகிச்சைத் துறை பேராசிரியர் டேன்னி ஆல்ட்மன் தெரிவித்தார்.
SAGE BIBP தடுப்பூசியை 2 அளவுகளாக (0.5 மில்லி) பயன்படுத்த WHO பரிந்துரைக்கிறது.
எனவே 3 முதல் 4 வாரங்கள் இடைவெளியில் இரண்டு டோஸ்கள் செலுத்தப்பட வேண்டும். முதலாவது டோஸ் ஏற்றப்பட்டு 4 வார இடைவெளியின் பின்னர் இரண்டாவது டோஸ் ஏற்றப்படவேண்டும்.
முதலில் யாருக்கு தடுப்பூசி போட வேண்டும்?
18 வயதுக்கு மேற்பட்ட அதிக ஆபத்து உள்ள சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் வயதானவர்களுக்கு தடுப்பூசிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
- அத்துடன் தொற்றா நோய் உள்ளவர்களுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டால் பாதிப்பு அதிகம். எனவே நீரிழிவு, இருதய நோய், குருதி அமுக்கம் போன்ற தொற்றா நோய் உள்ளவர்கள் கட்டாயம் தடுப்பூசி ஏற்றவேண்டும்.
- எச்.ஐ.வி. தொற்றுள்ளவர்கள் அது கட்டுப்பாட்டில் இருக்கும்போது இந்தத் தடுப்பூசியை ஏற்ற முடியும்.
- பாலூட்டும் தாய்மாருக்கு கட்டுப்பாடில்லை
- மேலும் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைப்பதற்கான மருந்து எடுப்பவர்களும் குருதி உறைதல் பிரச்சினை உள்ளவர்களும் கடும் ஒவ்வாமை உள்ளவர்களும் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று இத்தடுப்பூசியை செலுத்த முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- கொரோனாத் தொற்று உள்ள ஒருவர் இந்தத் தடுப்பூசியை ஏற்ற முடியாது. தொற்று மாறிய பின்னர் அதாவது இரு வாரங்கள் கழித்து அவர்கள் தடுப்பூசியைப் போட முடியும்.
- கர்ப்பம் தரிப்பதற்கு எதிர்பார்ப்பவர்களும் கர்ப்பிணித் தாய்மாரும் இந்தத் தடுப்பூசியை ஏற்றக் கூடாது.
- 38.5ºC க்கு மேல் உடல் வெப்பநிலை உள்ள எவருக்கும் காய்ச்சல் வராத வரை தடுப்பூசியை ஒத்திவைக்க வேண்டும்.
இந்தத் தடுப்பூசி உடலில் சென்று செயற்படத் தொடங்கும்போது தலையிடி, காய்ச்சல், உடம்பு நோ போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும்.
தடுப்பூசி நம்மை பாதுகாக்கின்ற ஒரு அரணே தவிர முழுமையான தீர்வல்ல. எனவே தடுப்பூசி ஏற்றிய பின்னரும்
முகக்கவசம் அணிதல்,
சமூக இடைவெளி பேணுதல்,
கைகளை அடிக்கடி கழுவுதல்
போன்ற செயற்பாடுகளைத் தொடரவேண்டும். ஏனெனில் தடுப்பூசி ஏற்றியவருக்கு கொரோனாத் தொற்றால் பாதிப்பு ஏற்படாதபோதும், அவர் கொரோனாக் காவியாக இருக்கலாம். அவர் ஊடாக தடுப்பூசி ஏற்றாத ஒருவருக்குக் கொரோனாத் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே ஊசி ஏற்றப்படுகின்ற சந்தர்ப்பங்களை அரசு நமக்கு வழங்கினால் நிச்சயம் நாம் அதன் மூலமாக நமது பாதுகாப்பினையும் நம்மைச் சூழவுள்ளோரின் பாதுகாப்பினையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஜன்ஸி கபூர் - 01.06.2021
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!