About Me

2013/04/13

சித்ரா பௌர்ணமி


சித்ரா பௌர்ணமி!
சிரிப்பாள் என் தோட்டத்தில்
அழகாய்  நாளை!

மல்லிகை மொட்டுக்களாய்
விரிந்து கிடக்கும் நட்சத்திரக் குவியலுக்குள்
மயங்கிக் கிடக்கும் மணப்பெண்ணாய் அவள்!

ஒளி நீரூற்றுக்களை என்னுள் விசிறி
அவளென் கன்னம் கிள்ளுகையில்
கிறங்கிப் போவேன்
கவிகளை கிறுக்கியபடி!

பவ்வியமாய் சிரித்து - என்
மனசு கௌவும் அவள் வரும் வரை
இன்னும் பல மணி நேரம் காத்திருக்க வேண்டும்
என்னுடன் சேர்ந்து நீங்களும்!


-Jancy Caffoor -

2013/04/12

வயசுக்கு வந்திட்டேனாம்



நான் வயசுக்கு வந்திட்டேனாம்!

பக்கத்து வீட்டத்தை
பக்குவமாய் நெஞ்சில் அறைந்தே
அம்மாவிடம் என்னை சிறை வைத்த போது
மனசு பதைபதைத்தது!

என் பாவாடைக் கரைகளில்
பூத்திருந்த ரத்தக் கறைகள்
மிரட்டிக் கொண்டிருந்தன
என்னை மற்றோர்களிடமிருந்து தனிமைப்படுத்தி!

வயிற்றுத் தசைகளின் பிரட்டலில்
வாலிப்பான உடலெங்கும் வலியெடுக்க
நடுங்கும் கரங்களுடன் அச்சம் இறுகி
தரையமர்ந்தேன் உணர்வின்றி!

அயலாளர் யார் யாரோ
என்னை எட்டிப் பார்த்தே கிசுகிசுத்தனர்
சடங்கு வைக்கும் வரை அசையாதேயென்று
சிறைப்படுத்தினர் வீட்டோரம்!

"ஏய் பெரிய மனுஷி"
நண்பிகளின் கேலிகளில்.என் வருங்காலச்
சுதந்திரம் நசுங்கிய போது
சுடும் கண்ணீருருகி கன்னம் தெறித்தது!

நேற்று வரை சிட்டாய்ப் பறந்தவென்
இறகறுத்த பருவம்
பறைசாட்டி முரசறைந்தது ஊர் முழுதும்
என் வாலிப இரகஸியங்களை!

ஆண் துணையில்லா எம் கூட்டில்- இனி
வட்டமிடும் வல்லுறுக்கள்
காமத் தீ வார்க்குமென்று
பாவம் அம்மாவும் அஞ்சிக் கிடந்தாள்
மனசுக்குள் முட்களைப் பதியமாக்கி!

தாய்மைக்கு அங்கீகாரமாம்
என் பெண்மை!
பாட்டி பத்தியங் காக்க ஏதேதோ தந்தாள்
வாய்க் கசப்பையும் மறுத்தபடி!


பதினாறின் செழுமையில்
தேகம் பூத்துக் குலுங்கியதில்
அம்மாவின் சேமிப்பும்  கரைய
தாய் மாமன் நாளும் குறித்தான்
தன் மகனுக்காய் என்னை!


"நான் வயசுக்கு வந்திட்டேனாம்"
என்னைச் சுற்றி
ஆரவாரங்களும் கொண்டாட்டங்களும்
குதூகலிக்கின்றன - என்
 கனவோரங்களில் பூத்திருந்த
சாம்பர் மேட்டைக் கவனிக்காமலே!

நேற்று வரை நெருங்கிப் பழகிய
நண்பர்களுக்கு
அண்ணன் மிரட்டல் கொடுக்கிறான்
என் நட்பை தணிக்கையாக்கி!

"பெரிய மனுஷி நானென்ற"
அறிவிப்புப் பதாதைகளுடன்
யாரு மறியாமலே என்னைக்
கரைத்துச் செல்கின்றது
கண்ணீர்த்துளிகள் !

- Jancy Caffoor-
     12.04.2013







தவறுகள் உணரப்படும் போது



ஞாயிற்றுக்கிழமை பொதுவாக எல்லோருக்கும் விடுமுறைதான்...

ஆனால் அனுஜாவுக்கு............

மனசின் வலிப்புடன் உடலும் லேசாய் அலுத்தது. வீட்டுவேலை எல்லாம் அவள் தலையில் மலை போல குவிந்து கிடந்தது. முன் ஹாலில் அன்றைய வாரப் பத்திரிகையை சுவாரஸ்யமாகப் படித்துக் கொண்டிருந்த கணவனைப் பார்த்து மனது கொதித்தது.

"சே..........இன்னைக்கு ஒரு நாளாவது கொஞ்சம் உதவி செய்யலாம்தானே, நேரத்துக்கு தின்ன மட்டும் வாங்க"

புறுபுறுத்தாள் அனுஜா....

"அநு .................என்ன ஏதோ பேசுற மாதிரி இருக்கு, எனக்கா"

கணவன் கேட்ட போது ஆத்திரத்தில் உதடு துடித்தது. உண்மையை சொல்லப் போக, அவனும் கொஞ்சம் கோபக்காரன் கையை நீட்டினானென்றால், அப்புறம் அக்கம்பக்க மனுஷங்க கிட்ட இந்த வீட்டு மானம் கப்பலேறி போய் விடும்" மௌனம் காத்தாள்.

"அநு" நான் கேட்டதற்கு பதில் இன்னும் வரல............"

அவனும் விடுவதாக இல்லை.

"இவரு பெரிய்ய்ய்ய ஜட்ஜ்.....தீர்ப்புச் சொல்லப் போறாராம்..." 

மீண்டும் முணுமுணுத்தாள்........

"என்னோட தலைவிதிய நெனைச்சு பொழம்புற, உங்கள காதலிச்சு கல்யாணம் முடிச்சதற்குப் பதிலாய விறகுக் கட்டைய முடிச்சிருக்கலாம். கறி சமைக்கவாவது உதவும்"

மனசு கண்ணீருடன் கரைந்திருக்கும் நேரம், வீட்டின் ஹாலிங் பெல் அடித்த போது, கணவன் வெளியே எட்டிப் பார்த்து, உற்சாகமாகக் கூவினான்..

"வாவ்.......மச்சான், என்னடா இந்தப் பக்கம், அநு.அநு......இன்னைக்கு மச்சானுக்கு நம்ம வீட்டிலதான் சாப்பாடு"

நண்பனின் மீதுள்ள பாசம் கட்டளையாக இறுக்க, திணறிப் போனாள். 

"தனியொருத்தியாக வீட்டுவேலை செய்ய முடியாம புலம்பிக் கொண்டு இருக்கிறன், அதுக்குள்ள விருந்தோம்பல்"

எரிச்சல் ஆத்திரமாக மாற, அது அவள் செய்யும் வேலைகளில் பட்டுத் தெறித்தது. சமையல் பாத்திரங்கள் ஓசை எழுப்பின.

"மச்சான், உன் பொண்டாட்டி ரொம்ப சூடா இருக்கிறாள் போல, கொஞ்சம் ஹெல்ப் பண்ணிக் குடுக்கலாம்ல"

நண்பன் ஆதங்கப்பட்ட போது, மெல்லிய சுவாசத்துடன் அவள் கணவன் மறுதலித்தான் .

" அட....போடா....நீ ஒன்னு .....இந்த வீட்டு வேலைங்க எல்லாம் பொம்பிளைங்க சமாச்சாரம்..அப்புறம் நம்ம கணக்கெடுக்க மாட்டாள்களடா...நான் அவளுக்கு இன்னைக்கு பாவம் பார்த்து ஹெல்ப் பண்ணப் போனால், டெய்லி எனக்கு ஏதாவது வேல வைப்பாள்டா....படிச்ச பொண்டாட்டின்னா கொழுப்பு ஜாஸ்திடா....நீ கல்யாணம் முடிச்ச பொறகு விளங்கும் பொண்ணாட்டின்னா எப்படியிருப்பான்னு"

அவன் சொல்லி முடிப்பதற்குள் மகள் சிந்துஜா அழும் சப்தம், அக் ஹோலை நிறைத்தது.

"அநு............ஏன் கொழந்தய அடிக்கிறே" சற்று குரலை இறுக்கினான்..

"உங்க மாதிரித்தான் உங்க பொண்ணும், இங்க வந்து பாருங்க, அடுக்கி வைச்ச எல்லாச் சாமான்களையும் இழுத்து கீழ போட்டு அசிங்கப்படுத்துறாள்"

கணவன் மீதுள்ள ஆத்திரத்தை தனது ஆறு வயது மகளிடம் அனுஜா காட்ட, மகளின் அழுகைச் சத்தம் வீதி வரை பரவியது.............

அவர்களது குடும்ப விவகாரம் உச்சக் கட்டமடையும் நிலையில், நண்பனோ நாசூக்காக வெளியேறினான்...

"சொறீடா மச்சான், நான் வந்த நேரம் சரியில்லைன்னு நெனைக்கிறன். இன்னுமொரு நாளைக்கு வாரேன்டா"

வெளியேறினான்..

அப்பொழுதும் அனுஜாவின் ஆத்திரம் அடங்கவில்லை. கைகள் பலமடைந்ததைப் போன்ற உணர்வில், மகளின் முதுகில் கைவிரல்கள் வேகமாகப் பதியத் தொடங்கின.

"அம்மா......................"

குழந்தை விடாமல் உரத்து அழுதாள் ........................கதறினாள்...

மகள் மீதுள்ள அன்பும், நண்பனின் வெளியேற்றமும் மனைவி மீது கோபத்தை தாராளமாக இறைக்க, விருட்டென்று உள் நுழைந்து அனுஜாவின் கன்னத்தில் பலமான அறைகளை இறக்கினான்

"இது வீடா.....இல்ல சுடுகாடா......எப்ப பார்த்தாலும் புலம்பல்"

அவன் மேலும் அவளை அடிக்க முனைந்த போது மகள் தடுத்தவாறே கதறினாள்...

"அப்பா.....வேணாம்பா.....அம்மாவ அடிக்காதீங்கப்பா.........அம்மா பாவம்"

தன் வேதனை, வலியை விட பெத்தவள் துன்பப்படுவாளென்று கதறும் தன் மகளை மார்போடணைத்தவாறு அனுஜா கண்ணீர் சிந்தினாள்...

"சொறீடா...செல்லம், அம்மா இனி உன்னை அடிக்க மாட்டன்"

தன் குழந்தையை ஆரத் தழுவி முத்தமிட்டு அணைத்த அனுஜா நிமிர்ந்த போது கணவன் எதிரே நின்றான். அவசரமாய் அவன் மீது குத்திட்டு நின்ற தனது பார்வையை வேறு திசையை நோக்கி நகர்த்த முற்பட்ட போதும்,

அவன் பாய்ந்து வந்து அனுஜாவையும், மகளையும் ஆரத் தழுவினான்......

"சொறீடி செல்லம், நானும் உனக்கு அவசரப்பட்டு அடித்திருக்கக் கூடாது"

அவனது குரலும் தழுதழுத்தது. மகளறியாமல் மனைவியின் கன்னத்தை தனது முத்தத்தை இரகஸியமாகப் பதிக்கத் தொடங்கினான் அவன்..

(குடும்பம் என்றால் இப்படித்தாங்க......அடிச்சுக்குவாங்க, அப்புறம் கட்டிப் பிடிச்சுக்குவாங்க...என்ன நான் சொல்லுறது சரிதானே........கோபம் வாறது தப்பில்லீங்க, கோபம் வந்தாத்தான் அவன் மனுஷன். ஆனா அந்த கோபம் குறைஞ்ச பிறகு தன் தவற உணராம இருக்கிறாங்க பாருங்க அதுதான் தவறு)

பிர் அவுன்



தொல் பொருள் ஆய்விற்காக எகிப்திலிருந்து பிரான்ஸிற்கு கொண்டு செல்லப்பட்ட பிர் அவுனின் உடல்
------------------------------------------------------
பிர் அவுன் எவ்வாறு இறந்தான் என்பதைக் கண்டுபிடிப்பதே ஆய்வின் நோக்கம். இவனின் உடலில் காணப்பட்ட  உப்புப் படிவுகள் இவன் கடலில் மூழ்கி இறந்ததை சான்று பகிர்கின்றன. அதுமாத்திரமின்றி இவனின் கடலினுள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளமையும், பின்னர் வெளியே எடுக்கப்பட்டமையும் ஆச்சரியமான விடயமென ஆய்வுகளுக்காக தலைமை வகிக்கும் சத்திரசிகிச்சைக் குழு தலைவர்  Prof:Maurice Bucaille குறிப்பிடுகின்றார்.
இவ் ஆய்வின் முடிவில் Prof:Maurice Bucaille இஸ்லாத்தை தழுவிக் கொண்டார்.

( எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே)

- Ms.A.C.Jancy -