நான் வயசுக்கு வந்திட்டேனாம்!
பக்கத்து வீட்டத்தை
பக்குவமாய் நெஞ்சில் அறைந்தே
அம்மாவிடம் என்னை சிறை வைத்த போது
மனசு பதைபதைத்தது!
என் பாவாடைக் கரைகளில்
பூத்திருந்த ரத்தக் கறைகள்
மிரட்டிக் கொண்டிருந்தன
என்னை மற்றோர்களிடமிருந்து தனிமைப்படுத்தி!
வயிற்றுத் தசைகளின் பிரட்டலில்
வாலிப்பான உடலெங்கும் வலியெடுக்க
நடுங்கும் கரங்களுடன் அச்சம் இறுகி
தரையமர்ந்தேன் உணர்வின்றி!
அயலாளர் யார் யாரோ
என்னை எட்டிப் பார்த்தே கிசுகிசுத்தனர்
சடங்கு வைக்கும் வரை அசையாதேயென்று
சிறைப்படுத்தினர் வீட்டோரம்!
"ஏய் பெரிய மனுஷி"
நண்பிகளின் கேலிகளில்.என் வருங்காலச்
சுதந்திரம் நசுங்கிய போது
சுடும் கண்ணீருருகி கன்னம் தெறித்தது!
நேற்று வரை சிட்டாய்ப் பறந்தவென்
இறகறுத்த பருவம்
பறைசாட்டி முரசறைந்தது ஊர் முழுதும்
என் வாலிப இரகஸியங்களை!
ஆண் துணையில்லா எம் கூட்டில்- இனி
வட்டமிடும் வல்லுறுக்கள்
காமத் தீ வார்க்குமென்று
பாவம் அம்மாவும் அஞ்சிக் கிடந்தாள்
மனசுக்குள் முட்களைப் பதியமாக்கி!
தாய்மைக்கு அங்கீகாரமாம்
என் பெண்மை!
பாட்டி பத்தியங் காக்க ஏதேதோ தந்தாள்
வாய்க் கசப்பையும் மறுத்தபடி!
பதினாறின் செழுமையில்
தேகம் பூத்துக் குலுங்கியதில்
அம்மாவின் சேமிப்பும் கரைய
தாய் மாமன் நாளும் குறித்தான்
தன் மகனுக்காய் என்னை!
"நான் வயசுக்கு வந்திட்டேனாம்"
என்னைச் சுற்றி
ஆரவாரங்களும் கொண்டாட்டங்களும்
குதூகலிக்கின்றன - என்
கனவோரங்களில் பூத்திருந்த
சாம்பர் மேட்டைக் கவனிக்காமலே!
நேற்று வரை நெருங்கிப் பழகிய
நண்பர்களுக்கு
அண்ணன் மிரட்டல் கொடுக்கிறான்
என் நட்பை தணிக்கையாக்கி!
"பெரிய மனுஷி நானென்ற"
அறிவிப்புப் பதாதைகளுடன்
யாரு மறியாமலே என்னைக்
கரைத்துச் செல்கின்றது
கண்ணீர்த்துளிகள் !
- Jancy Caffoor-
12.04.2013
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!