2019/06/05
Sahrish
தினமும்
குறும்பை பிழிந்து ஊற்றுகிறாள்
இருளில் - என்
தனிமைக்குள் தன் சிரிப்பை உதிர்த்தே
வண்ணக் கலவையாகிறாள்
என்னுள்!
தன் மலர்க்கரம் வலை வீசி
என் தோளில் மாலையாகின்றாள்
அன்பு வாசம் தூவி - என்
அன்புத் தூணில் சாய்கிறாள்!
முல்லை பற்கள் உதிர்ந்த
ஏழு எட்டாத அழகு நிலவவள்!
கலகலவென கதை பேசி
காற்றுக்கும் சுவாசம் வீ சுவாள்!
சிறகடிக்கும் சின்ன சிட்டு - என்
உறவுக்கு உயிர் தந்த லட்டு !
அவள் சின்ன குறும்பு சஹ்ரிஸ் !
.
- Jancy Caffoor-
05.06.2019
நன்றி பகிர்வு
தீ ஜுவாலை அனலுக்கு மத்தியிலும் அல்ஹம்துலில்லாஹ்......!
அழகான பெருநாள் மலர்ந்துள்ளது. இருந்தும் வாப்பா எம்மை நீ விட்டு நீங்கி மூன்று வருடங்கள்! கண்கள் கருக்கட்டுகின்றது கண்ணீரைப் பிசைந்து
பிரிவு நீளும் போதுதான் நினைவுகளும் ஆழமாக ஊடுறுவி நிற்கின்றது போலும். மனதில் வாப்பாவும் பெருநாள் ஞாபகங்களினூடாக இன்றும் பயணிக்கின்றார் என்னோடு!
பெருநாளை உயிர்ப்பிக்கும் அன்புள்ளங்களின் வாழ்த்துக்கள் இன்றும் என் மனதில் ஈரம் சேர்க்கின்றது. இந்த வருடம் என் பள்ளி நட்புக்களின் தோழமை வாழ்த்துக்களையும் சுமந்து பயணிக்கின்றேன். வாழ்த்து வாசத்தினூடு அன்பு பகிர்ந்த அனைவருக்கும் நன்றிகள்.
- Jancy Caffoor-
06.04.2019
2019/06/04
வலிமை
சூழ்நிலைகள் நம்மை
அரவணைக்கும்போது நாமும் அதற்கேற்றாற் போல் வளைந்து கொள்கின்றோம். இயல்போடு
பிசைந்து செல்லும் வாழ்வில் சிறு தடைகள் போதும் நம்மைப் புரட்டிப் போட!
ஏனெனில்!
எண்ணங்களின் அசைவில் நகர்ந்து கொண்டிருக்கின்ற நம் மனங்களில் சிறு தடங்கல்
ஏற்படும்போது நமது பயணங்களும் இயல்போட்டங்களிலிருந்து தளர்ந்து விடுகிறது.
வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் அழகிய எதிர்பார்ப்பில் தரிசித்து
நிற்கின்றது. ஆனாலும் நாம் எதிர்பாராத தடைகள் காரணமாக மனம் பின்னோக்கி ஏமாற்றத்தின்
பிடிக்குள் சிக்கி விடுகின்றோம். பலம் பலகீனமாக மாறும்போது நம்பிக்கைகளும்
தோற்றுவிடுகின்றது.
இருந்தும்!
ஒவ்வொரு தடையும் சவால்களின் மறு வடிவம் என மனசு அங்கீகரிக்கும்போது முட்களுக்கிடையே பயணிக்கும் மனோ வலிமை பிறக்கிறது நம்முள்!
- Jancy Caffoor-
06.04.2019
பெருநாள்
நாட்கள் வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. காலத்தின் ஒவ்வொரு மைல் கல்லையும் நாம் தரிசிக்கும்போது ஏதோ ஒரு கணத்தில் நாம் கடந்துபோன ஞாபகங்கள் நெஞ்சை பிசைந்து வண்ணமிருக்கும். நாளை பெருநாள்!
மாதம் மகத்தான நோன்பிருந்து கொண்டாடும் பெருநாள். ஆனாலும் இந்த வருடம் நெஞ்சக்குழியில் ஏதோ பிசையும் உணர்வு. மகிழ்வோடு பனிக்கும் கண்களிலிருந்து இம்முறை திரட்டிக் கொண்டு கண்ணீர் கசிகிறது.
சம்பிரதாயமான ஒரு சடங்காக இந்தப் பெருநாள் அமைந்து விடுமோ அச்ச வேரின் பற்றுதலில் மனம் திணறிக் கொண்டிருக்கிறது.
மன வெளியை வெறித்தனமாக இறுக்கிக் கொண்டிருக்கிறது. நிம்மதி துறந்த உணர்வுகளின் போராட்டத்தின் வெடிப்பின் கலவையாய் மாறிய மனம் இந்தப் பெருநாளை ஏந்தி நிற்கின்றது.
நல்லிணக்கத்தை மாற்றார் சிதைத்ததில் அச்சமும், நம்பிக்கையீனங்களும் விளைவாகின. களிப்பேந்தும் மனதில் கலி கசிகிறது. சவால்கள் துன்பமாகி, பதற்றம் தொடராகி எம்மைச் சூழ்ந்து நிற்கையில் நம் காலடியில் பெருநாள்!
எம் இருப்பின் வேர்களை அசைக்கையில் வலிக்கிறதுதான். ஆனாலும் அடுத்தவர் தமது விமர்சனங்களால் எம் ஈமானை உரசும்போது மனம் பலமடைகிறது. இரும்பு இதயங்கள் எம் இளகிய உணர்வுகளை பிசைகையில் ஆக்ரோஷம் களைந்து மனம் பொறுமை காக்கின்றது.
" இறைவா எம் வலி துடைத்து வளம் சேர்ப்பாய் இந் நன்னாளில்!"
04.06.2019
Subscribe to:
Posts (Atom)