About Me

2019/06/04

பெருநாள்


நாட்கள் வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. காலத்தின் ஒவ்வொரு மைல் கல்லையும் நாம் தரிசிக்கும்போது ஏதோ ஒரு கணத்தில் நாம் கடந்துபோன ஞாபகங்கள் நெஞ்சை பிசைந்து வண்ணமிருக்கும். நாளை பெருநாள்!

மாதம் மகத்தான நோன்பிருந்து கொண்டாடும் பெருநாள். ஆனாலும் இந்த வருடம் நெஞ்சக்குழியில் ஏதோ பிசையும் உணர்வு. மகிழ்வோடு பனிக்கும் கண்களிலிருந்து இம்முறை திரட்டிக் கொண்டு கண்ணீர் கசிகிறது.

சம்பிரதாயமான ஒரு சடங்காக இந்தப் பெருநாள் அமைந்து விடுமோ அச்ச வேரின் பற்றுதலில் மனம் திணறிக் கொண்டிருக்கிறது. 
வெறுமை!

மன வெளியை வெறித்தனமாக இறுக்கிக் கொண்டிருக்கிறது. நிம்மதி துறந்த உணர்வுகளின் போராட்டத்தின் வெடிப்பின் கலவையாய் மாறிய மனம் இந்தப் பெருநாளை ஏந்தி நிற்கின்றது.

நல்லிணக்கத்தை மாற்றார் சிதைத்ததில் அச்சமும், நம்பிக்கையீனங்களும் விளைவாகின. களிப்பேந்தும் மனதில் கலி கசிகிறது. சவால்கள் துன்பமாகி, பதற்றம் தொடராகி எம்மைச் சூழ்ந்து நிற்கையில் நம் காலடியில் பெருநாள்!

எம் இருப்பின் வேர்களை அசைக்கையில் வலிக்கிறதுதான். ஆனாலும் அடுத்தவர் தமது விமர்சனங்களால் எம் ஈமானை உரசும்போது  மனம் பலமடைகிறது. இரும்பு இதயங்கள் எம் இளகிய உணர்வுகளை பிசைகையில் ஆக்ரோஷம் களைந்து மனம் பொறுமை காக்கின்றது.

" இறைவா எம் வலி துடைத்து வளம் சேர்ப்பாய் இந் நன்னாளில்!"

- Jancy Caffoor - 
  04.06.2019

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!