About Me

2020/04/03

கொரோனா........!


மிகச் சிறு நுண்ணங்கியின் பிடியிலின்று இந்த உலகம் சிக்கித் திணறிக் கொண்டிருக்கின்றது. ஊரடங்கு மூலம் நோய்த் தொற்றுக்கான சந்தர்ப்பங்கள் விலக்கி வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

பாடசாலைகள் பல நாட்களாக விடுமுறை. கடமைகளிலிருந்து சற்று ஓய்வு. வீடுகளே...............இப்போ .................பல நாட்களாக நம்மை உள்வாங்கி ஏந்திக் கொண்டிருக்கின்றன. 

வழமையான செயல்கள் முடக்கப்பட்டதில் நம்மை நாமே கொஞ்சம் திரும்பிப் பார்க்கக் கூடியதாக உள்ளது. கடமையின் பொருட்டு சுழன்று கொண்டிருந்த வாழ்க்கை........ இப்போது  கொஞ்சம் வீட்டு வேலைகளிலும் எட்டிப் பார்க்கின்றது.

நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்த வாழ்க்கைக்கு சற்று ஓய்வு கிடைத்துள்ளது. இருந்தும் எல்லோர் மனங்களிலும் கொரோனா பற்றிய அச்சம் எரிந்து கொண்டுதான் இருக்கின்றது. 

03.04.2020

2020/03/25

கொரோனா




கொரோனா
பிரகடனப்படுத்தும் தேசங்களில்..........
பீதி
இறுமாப்புடன் எரிகிறது!
.
நாட்காட்டி..........
விரல் சுட்டுகின்ற போதெல்லாம்
ஒலியலைகள் உமிழ்கின்றன
வீழும் தொற்றுக்களை!
 
வியந்து போன விஞ்ஞானம்
அயர்ந்து நிற்கின்றது......
வெற்றுக் கண்ணறியாத
விந்தையைத் தேடி!
 
நாசியின் கண்கள்
விழிக்க மறுத்து ........
ஒளித்துக் கிடக்கின்றன
முகத்திரைக்குள்!
 
மரணம்  வழியும் தேகமாய்
கொரோனா....
வேரறுக்கின்றது வாழ்க்கையை
மெல்லன அரித்து!
 
ஊரடங்கு நிசப்தத்தில்
ஊமையாய் கனக்கும் பெருமூச்சின் வீச்சில்
ஓலி இழக்கின்றது
ஆன்மாக்கள்!
 
முகத்திரையும் கையுறையும்
முகப்புச் செய்திகளாய்.........
தெருக்களில் கோலம் போடுகின்றன
மருந்துகளைத் தேடி!
 
மனிதம் மறந்த புனிதம்.........
மெல்ல முடிச்சவிழ்கின்றது
உயிரணுக்களின்
இறுதிப் பிணைப்பில்!

.... 25.03.2020.....Jancy Caffoor


2020/01/08

வலி களைந்து வாழ்வதும்

 கசக்கி எறிந்த காகிதமாய் கடந்த காலம் எட்டிப் பார்க்கின்றது. நம்மை விட்டுப் போகின்ற ஒவ்வொரு விடயங்களுமே காலத்தின் மடியில் பெறுமதி அற்றுத் தான் போகின்றன.
கடந்த 2019 ....................

எதுவுமே ஞாபகத்தில் படியாத மடிப்புக்களாய் மனசோடு மண்டிக் கிடக்கின்றன. காலத்தின் இயந்திர ஓட்டத்தில் நான் என் இயல்பான என்னை இழந்தேனோ? வுpயப்புடன் என்னை மீண்டும் திரும்பிப் பார்க்கின்றேன். வாழ்க்கைசார் கடமைப் போராட்டத்தில் மூழ்கி இற்றுப் போன மனதை மெல்ல மெல்ல மீளத் திருப்ப முயற்சிக்கின்றேன் இந்த 2020 இல்!

இனி எல்லாம் கடந்து போகும். பல அனுபவங்களை உச்சத்தில் தொட்டு பாதாளம் வரை வழுக்கி மீள எழுந்து நடை பயின்று இந்த சுவாரஸியமான பயணமே வித்தியாசமான அனுபவம்தான். அடுத்தவரை காயப்படுத்துவோர் வார்த்தைகளையெல்லாம் வலி களைந்து வாழ்வதும் வாழ்வின் முக்கிய எல்லைதானே!

2020/01/02

யாழ் முஸ்லிம்கள்



இஸ்லாம் முஸ்லிம் மக்களின் சமூக வாழ்வின் அடிப்படை. இஸ்லாத்தையும்,  இஸ்லாமிய ஷரியத் முறையையும் அடிப்படையாகக் கொண்டு வாழும் முஸ்லிம்கள் தம்முடைய மொழி,  மத,  பண்பாடு கலாசார  விழுமியங்களைப் பேணிப் பாதுகாத்து வாழ்வதன் மூலமாக தமது தனித்துவத்தை தாம் வாழும் பூமியில் நிலைப்படுத்த முடிகின்றது.

8 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் கலீபாவாக இருந்த அப்துல் மலீக் பின் மர்வின் என்பவரால் நாடு கடத்தப்பட்ட ஹாஸிம் வம்ச வழியினரின் குடியேற்றமே முதலாவது முஸ்லிம் குடியேற்றமாக இலங்கையில்  காணப்படுவதாக  வரலாறு கூறுகின்றது. இவர்கள் யாழ்ப்பாணம்,  மன்னார் உள்ளிட்ட சில இடங்களில் குடியேற்றங்களை அமைத்து தாய்மொழியாக தமிழை தமது வாழ்வோடு பின்னிப் பிணைத்து வாழ்ந்து வந்துள்ளனர். 

தென்னிந்தியத் துறைமுகப் பட்டினங்களில் வணிகத் தொடர்புகளைப் பேணிய அரேபியர்கள்,  பாரசீகர்கள்,  மொரோக்கர்கள்,  துருக்கியர்கள் போன்றோர் தாய்மொழித் தமிழுக்கு அச்சாணியாக விளங்கியுள்ளார்கள். தமிழ்மொழி பண்பாட்டுக் கோலங்களின் பரவல்களை அவதானிக்கும்போது ஈழத்தில் முதன் முதலாக அரேபியர்கள் குடியேறியது வடபகுதியாக அடையாளம் காட்டப்படுகின்றது. 

கி.மு 2 ஆம் நூற்றாண்டிலிருந்து ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகம்  முத்துக் குளித்தல்  அம்பர் சேகரித்தல்  சங்கு குளித்தல் போன்ற செயற்பாடுகளுடன் தொடர்புபட்டதாக தென்கிழக்காசிய வணிகத்தில் தொடர்புகளை ஏற்படுத்திய அராபிய முஸ்லிம்கள்  14 ஆம் நூற்றாண்டு வரை தமது வணிக மத்திய தலமாக மன்னாரையே பயன்படுத்தினார்கள் என்பதற்கான சான்றுகளை வரலாறு முன்வைக்கின்றது. 

ஒவ்வொரு சமூகத்தின் வாழ்வியல் சூழலும்  சுற்றுப் புறங்களும் அவர்களின் தொன்மையைப் பறைசாட்டுவனவாக இருக்கின்றன. அந்தவகையில் 1477 ஆம் ஆண்டளவில் அரேபியக் கடலோடிகளால் மன்னாரில் நாட்டப்பட்ட பெருக்கு மரங்களின் பரம்பல்,  உடை, மரம்  வெளிச்ச வீடுகளான மினாராக்கள் போன்ற சான்றுகள் போத்துக்கேயருக்கு முந்திய காலகட்டத்திலேயே மன்னார் பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லிம்களின் தொன்மையைக் காட்டி நிற்கின்றது. அதுமாத்திரமன்றி இஸ்லாமியக் கொள்கைகளை முன்வைக்கும் தஃவாப் பணியில் ஈடுபட்ட சமயப் பெரியார்கள் எங்கெங்கே வாழ்ந்து மரணமடைந்தார்களோ  அங்கெல்லாம் அடக்கஸ்தலங்கள்  சியாரம்  தர்ஹா போன்றவை காணப்பட்டன. 

லெப்பை ஆலிம் அப்பா வம்சத்தினர்களின் சமாதிகள் மன்னாரிலும், சுல்தான் அப்துல் காதர் வலியுல்லா அவர்களின் சமாதி மண்கும்பானிலும்,  அவர்களின் தங்கையின் சமாதி நயினாதீவிலும் காணப்பட்டமை கூட முஸ்லிம்களின் தொன்மை இருப்புக்களுக்கான அடையாளங்களாகும்.

 பாரசீகக்குடாத் துறைமுகங்களுடன் வர்த்தகரீதியில் இணைக்கப்பட்டிருந்த மாதோட்டம், மன்னார்த் தீவில் கண்டெடுக்கப்பட்ட 12 ஆம், 14 ஆம் நூற்றாண்டுகளுக்கான மீஸான் கற்கள் என்பனவும் முஸ்லிம்களின் வணிகத்தின் ஏகபோக உரிமையைப் பறைசாட்டுகின்றன. 

யாழ்ப்பாணத்தில் இஸ்லாம் கி.பி 630களில் அறிமுகமாகியதாக சரித்திர ஏடுகள் குறிப்பிடுகின்றன. யாழ்ப்பாணப் பிரதேசத்தில் வாழ்ந்த ஆதிக் குடியேற்றமாகிய முஸ்லிம்கள் தமது சமுதாய சூழ்நிலை  மரபுவழிப் பாரம்பரியம் என்பவற்றைப் பேணியவாறே வாழ்ந்து வந்துள்ளார்கள். 'சோனகன் வடலி' என தாய் உறுதி அழைக்கப்படுகின்ற மரபானது முஸ்லிம்களின் ஆதி இருப்பை பறைசாட்டுகின்றது. யாழ்ப்பாணம்,  கொடிகாமம்,  பருத்தித்துறை,  கிளிநொச்சி,  பள்ளிக்குடா,  நாச்சிக்குடா போன்ற வெளிப் பகுதிகளிலும், நயினாதீவு,  மண்டதீவு,  மண்கும்பான்,  காரைதீவு  போன்ற  கடலோரம் சார்ந்;த கரைகளிலும்,  தமது கலாசாரங்களை மையப்படுத்தி குடியிருப்புக்களை ஏற்படுத்தி வாழ்ந்து வந்தார்கள். 1258 ஆம் ஆண்டளவில் சுல்தான் தக்கியுத்தீன் அப்துல் ரஹ்மான் யாழ்ப்;பாணத்தை கைப்பற்றியதற்காக ஆரியச் சக்கரவர்த்தியால் பரிசாக வழங்கப்பட்ட பிரதேசமே சோனகதெரு என்பது வரலாறாகும்.

1811 ஆம் ஆண்டளவில் யாழ்ப்பாணம் பதுறுத்தீன் புலவரால் பாடப்பட்ட 4000 பாடல்களைக் கொண்ட முதற் தமிழ் காப்பியமான முகியித்தீன் புராணம்  1713 இல் ஒல்லாந்தர் கோட்டையைக் கட்டும் போது அமைக்கப்பட்ட முஸ்லிம் கல்லூரி வீதியில் அமைந்துள்ள ஜூம்ஆ பள்ளிவாசல், 1822 இல் அமைக்கப்பட்ட முஸ்லிம் கல்லூரி வீதி (ராப்ஸ் வீதி), டச்சுக்கோட்டை பண்டகசாலையை நிறுவிய அராபிய வணிகரின் பரம்பரையினர் பயன்படுத்திய கொட்டடி மையவாடி என்பனவும் முஸ்லிம்களின் தொன்மையை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள்தான்.

மன்னாரைப் பொறுத்தவரையில் விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழிலில் முஸ்லிம்கள் நாட்டங் கொண்டிருந்தாலும்கூட  யாழப்பாண முஸ்லிம்கள் மீனவத் தொழிலில் அக்கறை கொள்ளவில்லை. எனினும் திமிலர் எனப்படும் கூலி ஆட்களைப் பயன்படுத்தி மீன்களைப் பிடித்துக் கருவாடாக்கி ஏற்றுமதி செய்தனர். ஆங்கிலேயர் தமது ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்களுக்கு விவசாயக் காணிகளை வழங்கி விவசாயத்தை ஊக்குவிக்காமையினால் வணிகம்சார் தொழிற்பாடுகளை தமது வாழ்வாதாரங்களோடு பிணைத்து வாழ்ந்தார்கள். எனினும் போத்துக்கேயரின் வருகையின் பின்னர் தொழிற் சமுகமாக உருமாறிக் கொண்டார்கள்.

அறிவு வளர்ச்சி குன்றிய சமூகமானது காலவோட்டத்தில் நிலைத்திருக்காமல் நலிவடைந்து விடுகின்றது. மொழிப் பிணைப்பும்,  மதப்பற்றும் மிக உறுதிநிலையில் காணப்பட்டால்தான் அறிவும் வலிமையடைந்து பல சவால்களை வென்று நிலைத்து நிற்கக்கூடிய சமூகக் கட்டமைப்பும் உருவாகும். முஸ்லிம்கள் தமது தனித்துவத்தை நிலைப்படுத்த வேண்டுமானால் தான் சார்ந்தும் தன் சமூகம் சார்ந்தும் கல்விமுறைகளினூடாகச் சிந்திக்க வேண்டும். யாழ்ப்பாண முஸ்லிம் மக்களிடையேயும், 'சமயக்கல்வி பெறுதலே கல்வி' எனும் எண்ணக்கரு நிலவி வந்ததனால் சமயக் கொள்கைகள்  நடைமுறைகளை அறபுமொழியில் போதிக்கும் மௌலவிமார்களே ஆசிரியர்களாகக் கற்பிக்கும் மதரசாக்கள்,  மக்தாப் போன்ற கல்விக்கூடங்கள் உருவாக்கப்பட்டன. மதரஸதுல் மன்புஉல் உலும், மதரஸதுல் மஸ்ற உத்தீன்,  மதரஸதுல் முஹம்மதிய்யா போன்ற ஆரம்ப கல்விக்கூடங்கள் யாழ்ப்பாணத்தில் காணப்பட்டன. காலப்போக்கில் முஸ்லிம் மக்களிடையே ஏற்பட்ட மறுமலர்ச்சி, கல்விச் சிந்தனைகளின் விரிவாக்கம் காரணமாக தமது சமயச் சூழலிலே கல்வி பெறும் வாய்ப்பு ஏற்பட்டது. இதன் பயனாக யாழ் முஸ்லிம்களின் இரு கண்களாக யா/ ஒஸ்மானியாக் கல்லூரி, யா / கதீஜா மகா வித்தியாலயம் என்பன தோற்றம் பெற்றன. 

பல்லினச் சமூகம் வாழும் சமூகக் கட்டமைப்பினுள் கல்வி,  அரசியல்,  பொருளாதாரம் என்பனவற்றில் பலம் குன்றிய சிறுபான்மை இன மக்கள் தமது சுய கௌரவத்தைப் பேணியவாறு பெரும்பான்மை இனத்தவர்களுடன் சம அந்தஸ்தோடும் பூரண உரிமைகளைப் பெற்றும் வாழும்போதே உறுதியான பல்லினச் சமூகக் கட்டமைப்பு ஏற்படுகின்றது. எனினும் துரதிஷ்டவசமாக பெரும்பான்மையினர் தாம் வரையும் சட்ட திட்டங்களாலும், அதிகாரத்தாலும் சிறுபான்மைச் சமூகத்தினரின் சுதந்திரமான செயற்பாடுகளை நசுக்கி அவர்களை தாக்க முற்படும்போது குறித்த ஈர் சமூகங்களுக்கிடையிலான ஒத்திசைவு குலைந்து முரண்பாடுகள் எழுச்சியடைகின்றன. அவலங்களும்,  குருதிப் பாய்ச்சலும்,  கண்ணீர்க் காயங்களுமே பேசு பொருள்களாக மாற்றப்படும்போது சிறுபான்மையினரும் அகதிகளாக தமது இருப்பை நகர்த்;தி வௌ;வேறு பிரதேசங்களில் நிலையூன்றி விடுகின்றார்கள். 

13 ஆம் நூற்றாண்டில் நல்லூரில் குடியேறிய முஸ்லிம் மக்கள் மீதும் பண்பாட்டுக் கலாசார சிதைவுகள் ஏற்பட்டதனால் நாவாந்துறையை அண்டிய பிரதேசங்களில் தமது இருப்பை மாற்றிக்; கொண்டார்கள். விரட்டப்பட்ட முஸ்லிம்கள் தம் வாழ்விற்காக தேர்ந்தெடுத்த இடங்களிலெல்லாம் ஐந்து நேரத் தொழுகைக்கான மஸ்ipத்துக்கள் எனப்படும் அழகான இறையில்லங்களை நிறுவிக் கொண்டார்கள். யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்ற பல அழகான இறையில்லங்கள் அவர்களின் தனித்துவமிக்க தொன்மையைப் பறைசாட்டி நிற்கின்றன. வேற்றுமையிலும் ஒற்றுமை நிறைத்து வாழ்வை இரசித்தார்கள். ஆடல்,  பாடல்,  நாடகம் போன்ற கலைகளை வளர்ப்பதிலும்,  களிகம்புப் பாடல்களை இயற்றுவதிலும் சிறந்த இலக்கியவாதிகளாக விளங்கினார்கள்.

போளை சுண்டுதல்,  நொண்டிக் கோடு,  கீச்சுக் கீச்சுத் தம்பளம், பாண்டி,  புலியும் வெள்ளாடும் போன்ற பல விளையாட்டுக்கள் மூலம் பொழுதை மகிழ்ச்சியால் நிறைத்தார்கள். கழிகம்பு வீசுதல்,  சீனடி விளையாட்டு,  புலிவேசம்,  கோலாட்டம் போன்ற கலைநிகழ்வுகள் மூலம் தமது உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள். யாழ்ப்பாண மண் வாசனையுடன் சிறந்த கலை நுணுக்கச் சிற்பி  இலங்கையின் முதல் முஸ்லிம் வழக்கறிஞர்  முதல் முஸ்லிம் மேயர்  அறிஞர்கள்  புலவர்கள் என வாழ்ந்து கொண்டே பலர் பிறருக்கும் வாழ்வைக் கற்றுக் கொடுத்தார்கள்.

அன்றைய ஆரோக்கியமான சமூகங்களுக்கிடையில் இனமுறுகல் ஏற்படவில்லை. முஸ்லிம் சங்கம்,  முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் போன்ற சமூக சேவை இயக்கங்கள்,   சனசமுக நிலையங்கள்,  விளையாட்டுக் கழகங்கள் எனப் பலதரப்பட்ட அமைப்புக்களால் யாழப்பாண முஸ்லிம் சமூகம் தனித்துவத்துடன் வாழும் சமூகமாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது. வேற்றுமையிலும் ஒற்றுமை காணுதல் அவர்களின் உயரிய செல்நெறியாகக் காணப்பட்டது. தன் மகிழ்வில் பிறரையும் நிரப்பிக் கொள்ளும் தனவந்தர்களால் அன்றைய சோனகதெரு மனநிறைவு கண்டது.

ஒரு சமூகத்தின் கண்ணாடியாகக் கலாசாரத்தைக் கருதலாம். ஏனைய இனக் குழுக்களிலிருந்து தம்மை தனித்துவமாக வெளிப்படுத்திக் காட்ட இக்கண்ணாடி உதவுகின்றது. தனித்துவமான மொழிப்பிரயோகம்,  தொப்பி  முக்காட்டுடன் தொடர்புபட்ட கலாசார உடைகள்,  இஸ்லாம் அனுமதித்துள்ள கீழைத்தேய பண்புகளைக் கொண்டுள்ள வட்டிலப்பம்   அடை   பணியாரம்   பிட்டு   தொதல்   வாடா   கொழுக்கட்டை போன்ற விஷேட உணவுகள்  ஆபரணங்கள்   அறபுத் தமிழ்  விருந்தோம்பலில் வெற்றிலைத் தட்டம் பகிர்ந்தளித்தல்   முஸ்லிம் ஆண் சிறார்களுக்கு செய்யப்படுகின்ற விருத்தசேதனம் எனப்படும் கத்னா போன்ற பல பண்புகள் அவர்களின் கலாசாரத்தோடு இறுகிப் பிணைந்திருந்தது. ஈகைத் திருநாள்  தியாகத் திருநாள்  மீலாத் விழா போன்ற விழாக்களுடன்  ஒவ்வொரு வருடமும் ஸபர் மாதம் கடைசிப் புதனான ஒடுக்கத்துப் புதனை ஒரு சமய விழாவாகக் கொண்டாடினார்கள். பண்டிகைகள் உள்ளத்தின் பண்பாட்டுக் கோலங்களாக விளங்கின.

ஒரு மொழியைக் கற்கும்போது அம்மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களின் கலாசாரமும் கருத்துக்களும் அவர்களை அறியாமலே பிற சமூகத்தினரின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்து விடுகின்றது எனும் யதார்த்தமும் யாழ்ப்பாண முஸ்லிம்களின் வாழ்வியலில் உயிர்த்தது. தமது சமய நம்பிக்கைகளை சிதைக்காமல் தமிழ் மக்களின் விழாக்களுக்கு ஒப்பான சில சடங்குகளையும் இணைத்துக் கொண்டார்கள். முஹர்ரம் மாதத்தில் அபூபக்கர் வீதியிலுள்ள ரிபாயியா தைக்காவிலிருந்து பக்தி பரவசத்துடன் வாலிபர்கள்;  பல்லக்கினை இழுத்து வருதல்  நாரிஸா வண்டி,  தைக்கியாவில் நிகழும்  கொடியேற்றம்  பெருவிழாவாகக் கொண்டாடப்படும் பெண்கள் பராயமடைதல், சடங்கு,  ஆண்கள் தங்க நகையணிதல்,  கதாப்பிரசங்கமாக இடம்பெறுவதைப் போன்று தனி வீடுகளிலோ அல்லது பொது இடங்களிலோ உமருப் புலவரின் சீறாப் புராணம், பதுறுத்தீன் புலவரின் முஹிதீன் புராணம் போன்ற இஸ்லாமிய தமிழ் இலக்கியங்கள் பாடப்படுதல், திருமணச் சடங்கில் பந்தல், மோதிரம்  ஆரத்தி  கூரை  தாலி என சம்பிரதாயங்கள் பேணப்படுதல், பெண் வீட்டார் சீதனம் கொடுத்து திருமணம் முடித்து வைத்தல், குடிமக்கள் எனப்படும் தாழ்த்தப்பட்ட சாதியினர் செய்கின்ற எந்தத் தொழில்களையும் தாமும் செய்யாமை, சில மொழி  உணவு  உடைக் கலப்பு என்பன முஸ்லிம்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்து பிட்டும் தேங்காய்ப்பூவமாக இசைந்து வாழ்ந்தார்கள்.

ஆனால் காலவோட்டத்தில் .......

  யுத்தங்களும் ஆயுதத் தரிப்பும் அவநம்பிக்கைகளும் வடபகுதியில் அசாதாரண சூழ்நிலைகளைத் தோற்றுவித்தன. இயல்புநிலை மறந்து போனது. தாம் விரும்பாமலே குருதி பிழக்கும் போராட்டங்களால் முஸ்லிம் மக்களும் சூழப்பட்டார்கள். தமது தொன்மை தாயக பூமிப்பரப்பில் தமது சுயத்தைப் பேணியவாறு வாழ்ந்த கௌரவமான வாழ்க்கையும் சுதந்திரமும், மகிழ்வும் காணமற் போயின. போராட்டங்களால் வெடித்துப் போன உணர்வுகளில் தீப்பிழம்புகள் கசிந்தன. இருந்தும் தம் சூழலுடன் பொருந்தி வாழும் சகோதர இனமாகிய தமிழ் மக்களுடன் ஒத்தாசையுடன் பொருந்தி வாழ்ந்தார்கள். 

அந்தக் கரிநாள் .....1990......ஒக்தோபர் ....30.....! 

நாட்காட்டியைக் கிழித்துக் கொண்டு வெளிவந்தது. 

அது யாழ் முஸ்லிம்களின் உணர்வுகளில் அழுத்தத்தைப் பிரயோகித்து  பொருளாதாரத்தை முடக்கி  உடல்  உளத்தை  நலிவுபடுத்தி  சொந்த பூமியிலேயே இருப்பறுத்து  அகதியாக்கி  வாழ்வின் வனப்பை சிதைத்த   நாள்.  

1990......ஒக்தோபர்....30......

அதிகாலையில் காற்றைக் கிழித்தொலிக்கும்   ஒலிபெருக்கிதான் தம் மூச்சைப் பிளக்கும் அதிர்வுகள் என அப்பாவி முஸ்லிம்கள் அறிந்திருக்கவில்லை. 

'  துரத்துவார்கள்... துரத்துவார்கள்' 

என காதுகள் ஏந்தியிருந்த சப்தங்கள் வெறும் வதந்தியே என நம்பியிருந்த முஸ்லிம் மக்கள் தாம் இரண்டு மணித்தியாலத்தில் வெளியேற்றப்படுவோம் எனக் கனவிலும் நினைத்திருக்கவேயில்லை.   போராட்ட வீரியம் யாழ்ப்பாண சோனகதெருவின் அனைத்து ஆண் மக்களையும் ஜின்னா மைதானத்தில் திரட்டியது. அந்தக் கணத்தில்கூட தாம் வெளியேற்றப்பட மாட்டோம் என்ற நம்பிக்கையில் கதவுகளை நன்கு இறுக்கி சாத்தி பூட்டி விட்டே சென்றார்கள். காற்றை நனைக்கும் நீர்த் துளிகள் தமது குடும்பங்களின் கண்களில் நிறையும் என யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. தமது தாயக பூமியில் தமது வேரூன்றல் நிலையானதென்ற நப்பாசையில் அக்கூட்டங்களில் தரித்து நின்ற முஸ்லிம் தலைமைகளின் செவிகளில்   தீயினை வார்த்தனர். இன்னும் இரண்டு மணித்தியால காலக்கெடு அவர்களின் பாரம்பரிய இருப்பை அறுக்கும் வாள். அராஜகம்  ஆணவம் கொண்டால் நல் இதயங்கள் இற்று விடுமபோல்;. 

கடிகாரம் காலை ஏழு மணியைக் கூடத் தொடவில்லை. முஸ்லிம்கள் தம் தாயக பூமியிலிருந்து அறுத்தெறியப்பட்டார்கள். ஒரு தொன்மையான சமூகம் நடுத்தெருவில் நடைப்பிணமாகி நடை பயின்றது. ஆயுதங்களுடன் மறுத்துப் பேசாத அப்பாவிகளான முஸ்லிம்களின் உணர்வுகள் கதறின. சோனகதெரு வீதியெங்கும் பெண்கள், குழந்தைகளின் அழுகைகள் வெடித்தன. தாம் வாழ்ந்த தாயக பூமியிலிருந்து தூக்கியெறிப்பட்ட அந்த நொடியில் அகதி வாழ்வும் உரிமையாக்கப்பட்டது. அவலம் இனி நிரந்தரம்.......முஸ்லிம் தெருக்களிலேயே அமைக்கப்பட்டிருந்த   சோதனைச் சாவடிகள் மூலம் மக்கள் தம்மோடு கொண்டு சென்றிருந்த ஆடை ஆபரணங்கள் பணம் உள்ளிட்ட பல பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. நன்கு திட்டமிட்ட முறையில் முஸ்லிம்களின் அசையும்  அசையாச் சொத்துக்கள் அழிக்கப்பட்டன. 

சில நாட்கள் மனோகரா தியேட்டரில் அடைபட்டு  கேரதீவில் பரிசில்கள் கவிழ்ந்து நீரில்  நனைந்து  சேற்று சகதியில் சில நாட்கள் நகர்ந்து  அந்தரித்து  உறவுகளை இழந்து  பறிகொடுத்து  வறுமைப்பட்டு  வாழ்வின் வனப்பழிந்த அந்த நடைப்பயணங்களை இன்று நினைத்தாலும் கண்களின் மடல்களைக் கிழித்து கண்ணீர்ச் சுரப்பிகள் வெடிக்கின்றன.  அன்று சோனதெருவிற்கு இதயம் இருந்திருந்தால் முஸ்லிம்கள் வடித்த கண்ணீர்க் கனத்தை உலகறியச் செய்திருக்கும்.

முஸ்லிம்கள் வெளியேற விதிக்கப்பட்ட அந்த இரண்டு மணித்தியால காலக்கெடு அவகாசம்..

வலிகள் முட்களாகி தைத்த தருணங்கள் ஆகும்.   தாம் வாழ்ந்த வீடு  தாம் திரிந்த தெருக்களை கைவிட்டுச் சென்ற அந்த அவலம் நிறைந்த தருணங்களை கண்ணீர் மட்டுமே தொட்டு நின்றது.   போர் சார்ந்த அசாதாரண சூழ்நிலையில் தம்மை பலிகொடுத்தும் சொத்திழந்தும் வாழ்ந்து வந்த நிலையிலும்  வடபுல முஸ்லிம்களை அகதியாக்கி அலையவிட்ட அந்த ஒக்தோபர் என்றும் துன்பம் உறிஞ்சிய கரிய நாள்தான். 

கோரமான சோகம் சுமந்து கேரதீவு பரிசில்களில் தம்மை ஏற்றி நடைப்பிணமாக நடைப் பயணத்தில் பல நாட்கள் அலைந்து ஒக்தோபர் ஐந்தாம் திகதியளவில் வவுனியா பூந்தோட்ட முகாமை அடைந்த முஸ்லிம் மக்கள் அன்று சேற்றுப் பாதைகளில் கால் புதைத்து பயணித்த  அவலம் எத்தனை நூற்றாண்டு கழிந்தாலும் அழியாது. நடந்து நடந்து வலுவிழந்த கால்களுக்கெல்லாம் வவுனியா பூந்தோட்ட அகதிமுகாம் பூங்காவனம்தான். அவியாத பருப்பும் கரட்டும் சோறும்கூட அமிர்தம்தான். எங்கு போவது? எப்படி வாழ்வது? இருட்டுக்குள் நின்று தேடும் இந்த விடியல் தொலைபுள்ளிதான்.

தாயகம் துரத்தியடித்தபோது அடுத்தவர் அடைக்கலம் தந்தார்கள் . அரவணைத்தார்கள். ஆறுதல் சொன்னாரகள் . ஆனாலும் இதயத்தின் ஓர் முலையில் வலி. அது பிறப்பிடமில்லையே.. எத்தனை நாள்தான் அடுத்தவர் வீடு. அறியாத முகங்கள்  மொழிப் பிரச்சினை  வாழ்க்கையை  நகர்த்திச் செல்லவிடாமல் முட்டுக்கட்டையிடும் நலிவான பொருளாதாரம், உலர் உணவுக்காக கச்சேரிக்கும்  பலசரக்குக் கடைக்குமிடையில் அலைந்து திரியும் நடைச்சுமை. வேற்று முகம் காட்டும் சில பாடசாலைகள் என அத்தனை சவால்களுக்கும் ஈடுகொடுத்து  ஈடுகொடுத்து வாழ்ந்து .விரைவில் தாயகம் மீளலாம் என்ற நம்பிக்கை வளர்த்து எதிர்பார்ப்புக்கள் நிறைத்து எத்தனை நாட்கள்தான் காத்திருப்பது. 

அரசியல் பலமில்லாத அகதி வாழ்வு வாழ்க்கையைக் கரைத்தது. நம்பிக்கையும் கரைந்தது. பலர் தமது தேவைகளுக்குப் பொருந்தக்கூடியதாக தம்மைத் தாங்கிக் கொண்டிருக்கும் சூழ்நிலைகளோடு பொருந்திக் கொண்டார்கள். உறவுகளைத் தொலைத்து பல திசைகளிலும் பிரிந்து வாழும் அந்த வாழ்வின் வலியை அகராதியில் தேடினால் அது முஸ்லிம்களைச் சுட்டி நிற்கும்.

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தாயக பூமியில் அனுபவித்த போர் வலிக்கு நிவாரணமோ இந்த அவலம் நிறைந்த அகதி வாழ்வு. இரு தசாப்தங்களுக்கும் மேலாக இழுத்தடிக்கப்பட்ட இந்த அகதி அவலத்தில் பல உயிர்கள் மண்ணறை வாழ்விற்குள் தம்மை அடக்கிக் கொண்டார்கள். இளமையில் நரை திரண்டு வறுமைச் சுமையில் சோபையிழந்த ஆரோக்கியமற்ற சமூகமாக நம் சமூகம் உரு மாறினார்கள். தனிக் குடும்பங்கள் பல குடும்பங்களாகப் பெருகி தேவைகளுக்கான போராட்டங்கள் வெடித்தன. எள்ளளவான வாழ்வாதார உதவிகள் இம்மக்களின் ஏக்கம் தீர்க்க போதியதாக இருக்கவில்லை. தமது தாயக பூமியில் தலைநிமிர்ந்து வாழ்ந்த பல முகங்கள் அடுத்தவரிடம் வாழ்வாதாரங்களுக்காக கையேந்தின. எனினும் கெடுதலிலும் நன்மையிருப்பதைப் போன்று சோனகதெருவின் நாற் சுவருக்குள் வாழ்ந்த பல முகங்கள் நாட்டின் பல பகுதிகளின் காட்சிகளுக்கும் சொந்தமானது. வறுமையை வெல்லும் வைராக்கியத்தில் பல இளையவர்கள் கல்விக்குள் தம்மை நன்கு உட்படுத்தி கற்றோராக வெளியேறத் தொடங்கினார்கள்.  

இரு தசாப்தங்களிற்கும் மேற்பட்ட காலம் ..... 

  காலப்போக்கில் முஸ்லிம் மக்களின் தேவைகளும் பெருகின. சலித்துப் போன அகதி வாழ்விலிருந்து மீண்டெழ காலம் நிர்ப்பந்தித்தது. தாமாகவே தமது தாய பூமியை விட்டொதுங்கினார்கள். தமது பாரம்பரிய காணி,  வீடு நிலங்களை குறைந்த விலைகளுக்கு தமிழ் மக்களுக்கு விற்றார்கள். தாம் வாழ்ந்த இடங்களிலேயே தமது நிரந்த குடியேற்றங்களை அமைத்துக் கொண்டார்கள்.   போராட்ட நிஜ வாழ்வின் ஓர் பகுதியாக தமது பிறப்பிட வாழ்வின் ஞாபகங்களைப் பொருத்திக் கொண்டார்கள்.
 
2010 ஆம் ஆண்டு வடபுல யுத்தம் முடிவுறுத்தப்பட்டதும்  அங்கு நிலப் புலச் சொத்துக்களை வைத்திருந்த முஸ்லிம் மக்கள் மெல்ல மெல்ல மீள்குடியேற்றப்பட்டார்கள். மீள்குடியேறினார்கள். யானைப் பசிக்கு சோளப் பொறியாம்..... போராடி வாழ்வாதாரங்களைப் பெறும் துன்பியல் நிலைக்கு முகங்கொடுத்தார்கள். கொடுக்கின்றார்கள். பிள்ளைகளின் கல்வி  தொழில்  வாழ்வியல்சார் தேவைகள் என்பன ஏற்படுத்திய அழுத்தம் காரணமாக மந்த கதியில் மீள்குடியேற்றம் நிகழ்ந்து கொண்டிருந்தது...கொண்டிருக்கின்றது. மீள்குடியேற்றம் சார்பான அபிவிருத்தியின் விளைவாக இறைகூடங்கள் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளன. முஸ்லிம்களின் இரு கண்களாக விளங்கிய யா/ஒஸ்மானியாக் கல்லூரி, யா/கதீஜா பெண்கள் கல்லூரி மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சோனக தெருவில் பாலர் பாடசாலைகளும் அஹதிய்யாக்களும் மக்தாப்களும் அறிவூட்டிக் கொண்டிருக்கின்றன. 

பழைய இரும்பு வியாபாரங்கள், கூலித் தொழில்கள்,  சில தனவந்தர்களின் வியாபார நிலையங்கள் என்பன மீள்குடியேற்றப்பட்ட யாழ்ப்பாண மக்களின் பொருளாதாரம் சேர்க்கும் வளங்களாக   காணப்படுகின்றன. பாடசாலைகள் இயங்குகின்றன. ஆனால் கற்றலில் நாட்டம் குறைந்த மாணவர் சமுதாயம் இடப்பெயர்வின் விளைவுகளாகக் காணப்படுகின்றனர். வாழ்வாதரங்களை நம்பி வாழும் பலரே இன்றைய மீள்குடியேற்றவாசிகள். யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட மாகாண முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் என்னும் பேசு பொருளில் அரசியல் காய் நகர்த்தப்படுகின்றதே தவிர இன்னும் முழுமையான மீள்குடியேற்றத்திற்கான  நடவடிக்கைகள் முழு மூச்சாக செயற்படுத்தப்படவில்லை. மெது மெதுவாக முஸ்லிம் பெயர்களைத் தாங்கிக் கொண்டிருக்கும் சோனக தெரு வீதியின் தனித்தன்மை கூகுள் வரைபடத்திலிருந்து நீங்கிக் கொண்டிருக்கின்றன. பல கற்றவர்களைக் கொண்ட யாழ் சமூகத்தில் தற்போது தரித்து நிற்பவர்கள் சொற்பமே. இன்று அதிகமானோர் மீள்குடியேறியுள்ள முஸ்லிம் குடியிருப்புப் பகுதியாக பொம்மைவெளியும் அதனைச் சூழ்ந்துள்ள பகுதிகளுமே காணப்படுகின்றன. தாயகப் பற்றை மறந்து வழ்வாதார உதவிகளுக்காக மாத்திரம் வாழும் குடியிருப்புக்களாக முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் நிகழுமாயின் அது வெறும் கண்துடைப்பே.! 

 சாம்பர் மேட்டிலிருந்து இம்மக்கள் மீள எழுதல் என்பது வலியும் சவாலுமிக்கதுமானதாகும். இருந்தும் சொற்ப தொகையினராவது மீள்குடியேறியதால் இன்று இறையில்லங்களின் பாங்கொலியோசை முஸ்லிம்களின் இருப்பை பறைசாட்டுகின்றது. இழந்து போன சோனகதெருவின் பிரகாசம் இன்னமும் தோன்றவில்லை. எனினும் மெது மெதுவாக ஓர் தொலைபுள்ளியில் வரலாறு சொல்லக் கூடிய மையப் புள்ளியில் முஸ்லிம் மக்கள் தம்மைப் பொருத்திக் கொள்வார்கள் என்பது நிதர்சனம்.

இரு தசாப்தங்களுக்கும் மேலாக சிதைக்கப்பட்ட மனைகள் பல இன்னும் நிவாரணங்களின்றி கிடக்கின்றன. தொடர் போர்,  இடப்பெயர்வு என்பன ஏற்படுத்திய மன அழுத்தங்களால் பலர் உளநலக் குறையோடு போராடிக் கொண்டிருக்கின்றார்கள். சவால்மிக்க மீள்குடியேற்றம் சந்திக்கும் இன்னொரு பிரச்சினையாக கலாசார சீரழிவுகளுடன் கூடிய போதைவஸ்து பாவனை காணப்படுகின்றது. இங்கு இருக்கின்ற சொற்பமானோர்களுக்கிடையில் காணப்படும் அரசியல் பிணக்குகள் கூட மீள்குடியேற்றச் செயற்பாடுகளை மந்தப்படுத்துகின்றது. உறுதியான அரசியல் பலம் ஏற்படாதவரை திடமான சமூக ஒழுங்கமைப்பும் ஏற்படப்போவதி;ல்லை. மக்களின் பலகீனங்களை தமது பலமாக்கி அரசியல் நிகழ்த்தப்படுமானால் அது ஆரோக்கியமான மீள்குடியேற்றத்திற்கு இட்டுச் செல்லாது. தாயக பூமியை மறந்து தமது தற்போதைய இருப்பிடத்திற்கேற்ப வசதியான புதிய வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் மீண்டும் வசதியும் வளமும் குறைந்த மீள்குடியேற்ற வாழ்க்கைக்குத் திரும்புவார்களா என்பதும் கேள்விக் குறியே! 

  தமது பிறப்பிட வதிவிடங்களிலிருந்து குடியிருப்புக்களை நகர்த்திச் சென்றவர்கள் எல்லோரும் மீண்டும் தமது தாயக பூமிக்கு தம்மை நகர்த்தாதவரை சோனகதெருவின் மீள்குடியேற்றம் வெறும் வார்த்தைகளோடு மாத்திரமே கலந்திருக்கும். சிதறிச் சென்றவர்களை மீள ஓர் புள்ளியில் இங்கு மையப்படுத்த வேண்டுமானால் ஒத்திசைவுடன் கூடிய சமூக சிந்தனை ,கல்வி, அரசியல் பலம் தொழில்சார் அபிவிருத்தி  பண்பாடு சார் விழுமியங்கள் பேணக்கூடிய வாழ்க்கைமுறை ஏற்படுத்தப்படல் வேண்டும்.

இறையில்லங்களையும்  கல்விக் கூடங்களையும்  வாழ வைத்த மனைகளையும் காத்தவாறும்   சின்னப்பள்ளிவாசல் மையவாடியில் நிரந்தரத் துயில் கொள்ளும் நம் முன்னோர்களைக் காத்தவாறும் சவால்மிக்க இந்த மீள்குடியேற்றச் செயற்பாட்டை யாழ்ப்பாணத்தில் முன்னெடுப்பது   ஆரோக்கியமான ஓரு சமூகப்பணியாகும். இறையாசியுடன் சவால்களை சாதனைகளாக மாற்றும் நம் முயற்சிகளின் பயனாக எதிர்காலத்தில் நமது பசுமையான சோனகதெரு மீள உருவாக்கப்படுமென்பதே இங்கு வாழும் ஒவ்வொரு மக்களின் அவாவும் எதிர்பார்ப்புமாகும். நிகழ்காலத்தில் கிடைக்கும் ஒவ்வொரு அனுபவங்களும் எதிர்காலத்திற்கான பாடங்களாகும் எனும் எண்ணக்கருவோடு நமது மீள்குடியேற்றப் பயணத்தை வெற்றிகரமாக்குவோம்.  'இனச்சுத்திகரிப்பால் அன்று அறுக்கப்பட்ட நமது இருப்புக்கள் மீண்டும் விதையாகி விருட்சமாகும் காலம் தொலைவில் இல்லை. 

Jancy Caffoor
Jaffna