About Me

2012/08/16

வாழ்க பல்லாண்டு




பெண்ணெணப் பிறந்திட்ட போதும்
விண் தொடும் காற்றாயுன் சேவை.......!
ஊரெங்கும் கரமசைத்து வாழ்த்தும் - நீ
பார் போற்றும் வைத்தியக் கலாநிதியென !

பருவ வாழ்வில் மருத்துவம் சுமந்து
அறுவைச் சிகிச்சைக் கூடமேயுன் நிழலாக .- உன்
சிறுபராயத்து வழிகாட்டி நானானதில்
பெருமைதானெனக்குமென் தங்கையே!

உன் மனசோரம் கனவுகள் கோர்த்து
திருமாங்கல்யமுன் நெஞ்சிலேற்றி - கால
வசந்தங்கள் வாழ்த்தும் சொல்ல
வந்ததேயுன்  திருமண நாளும்!

சிறகடிக்கும்  நாட்காட்டியும்
சீக்கிரமாய் நம்மிடையே பறந்தோட..........
வந்ததோ  நாலாண்டும் நொடிப் பொழுதில்
தந்ததேயுன்  வசந்த ஞாபகங்களை!

கார்க் கொன்றல் சாறு பிழிந்தே
என் மனவெளியில் ஈரம் பதிக்க.- உன்
உலராத திருமண உலாவும்
புதிதாய்ப் பூத்தவுன்னினைவுகளும்..........
உணர்வுக்குள் உயிரூட்டிக் குலாவும்
இன்றைய தருணங்களாய்...........
அன்றைய நகர்வுகளை!

உறவுகள்  உயிருரசி மகிழ்விலாட
நறவாயுனக்கு வாழ்க்கைத் துணையும் சேர.....
அறம் செழிக்கும் இல்லறச் சோலையிலின்று
வரவாய் பூத்துக்குலுங்கும் ஈர் செல்வங்கள் !

நேசம் நிரப்பும் உறவுகள் அரவணைப்பும்.........
காதலில் வருடுமுன் கணவன் நெகிழ்வும்
பாசத்தில் வருடும் ஈர் மழலைகளும்
கரகோஷிக்கும்  இன்பங்களாய் என்றுமுன்னுள்!

இறையோன் தந்த இத்திருமண வாழ்வில்
கறை தரும் இடர்தனை என்றுமகற்றி......................
மறை நெறி வழி நின்றேயுன் குடும்பம்
நூறாண்டு வாழ வாழ்த்தும் ...........
உடன்பிறப்பாய் நானின்று!

வலைப்பூவில் நீயின்றமர்கின்றாய் - என்
விலைமதிப்பற்ற அன்பாலென் சோதரீயே..........

என் சகோதரி ஜனொஸ் சதாத் அவர்களின் 4வது ஆண்டு திருமண நாள் ஞாபகங்களை கவிதையால் பகிர்கின்றேன்
( 2012. 08.16) 


       dear ( Doctor ) Janoss Sadath (sister )


"Wishing you all the health and happiness 
in this world on your wedding"










விடைபெறும் ரமழானே !



என் சின்ன வயது நோன்பின் ஞாபகங்களினூடாக , யாழ்ப்பாணம் சோனகதெரு இப்பொழுது என் கண்முன்னால் எட்டிப்பார்க்கின்றது. நோன்பென்றாலே வசந்தத்தை வாசமாக்கி எம்முள் பரவச்செய்து நிற்கும் அந்த நாட்கள்....

சோனகதெருவில் வீதிக்கு வீதி பள்ளிவாசல்களுள்ளன. "ஸஹர்" பொழுதுகளில் பள்ளிவாசல்களிலிருந்து ஒலிபரப்பாகும் இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவையின் விசேட  ஒலிபரப்புக்களும் அறிவிப்புக்களும் இன்னும் மறக்கமுடியாமல் மனசுக்குள் மயங்கிக் கிடக்கின்றன. அது மாத்திரமில்ல இந்தியா நாகூரிலிருந்து வருகின்ற பக்கிரிசாக்கள் ஸஹர் பொழுதில் மேளம் தட்டி எம்மை எழுப்பி நிற்கும் அந்த நிகழ்வுகளும் என் சின்ன வயது நெஞ்சுக்குள் மகிழ்வோடு பதியப்பட்ட தருணங்கள்.............!

நோன்பு ........................!

இஸ்லாத்தின் உன்னதமான கடமைகளுள் ஒன்று. நாம் இறைவனுடன் ஆன்மீகத் தொடர்பை நோன்பின் மூலம் ஏற்படுத்தி, இறைவனின் அன்பையும் அருளையும் பெற்று அம் மனத்திருப்தியை புனித "ஈதுல் பித்ர்"  எனும் நோன்புப்  பெருநாளில் வெளிப்படுத்துகின்றோம்..

அதிகாலை முதல் சூரியன் மறையும் வரை உண்ணாமல் பருகாமல் மட்டுமல்லாது, இறைவன் தவிர்க்கச் சொன்னதைத் தவிர்த்து அவனின் திருப்தி நாடி, நாம் பிடிக்கும் நோன்பானது, நல்ல பண்புகளையுடைய மனிதர்களை உருவாக்குவதன் மூலம் சமூகத்திற்கும், அதன் அங்கத்தவனாகிய மனிதனுக்கும் பாதுகாப்பளிக்கின்றது. அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் நோன்பை ஓர் கேடயம்" எனக் குறிப்பிட்டார்கள்.

நோன்பானது அல்லாஹ்வுக்கும் அடியானுக்குமிடையிலான ஓர் தொடர்பு............நிய்யத்தை ஒருவர் வாய்மொழிந்த மறுவிநாடியே , இறைவன் தன்னை அவதானித்துக்கொண்டிருக்கின்றான் என உறுதியாய் நம்பி, அன்றைய பொழுதின் நோன்புக்கான வேளைகளில் தன் இச்சைகள், உணவுகள் அனைத்தையும் தன்னிலிருந்து நீக்கிவிடுகின்றான். எனவே நோன்பு உறுதியான நம்பிக்கையின் வெளிப்பாடாய் அமைகின்றது!

நோன்பானது தொடர்ச்சியாக இறையச்சம், திருமறையின் வசனங்கள், நபி (ஸல்) அவர்களின் முன்மாதிரி, சட்டதிட்டங்களைப் பின்பற்றும் பயிற்சியைக் கொடுக்கின்றது. இந்தப் பயிற்சி ஒருமாதம் வரை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டாலும் கூட வாழ்க்கை முழுவதும் நீடிக்கின்ற சிறப்புரையாக அமைகின்றது..

அத்துடன் நோன்பானது அன்புடன் ஒருவர் பசியுணர்ந்து, ஏழை வாழ்வின் துக்கம் பகிர்ந்து ,அவர்கள் உணர்வை உணர்வதன் மூலம், ஏற்கனவே அந்தஸ்து மாயையுடன் விரிக்கப்பட்டிருந்த ஏழை, பணக்காரன் எனும் பேதத்தைக்  களைத்து , சமத்துவத்தைப் போற்றுகின்றது. 

அத்துடன் சகோதர ஒற்றுமையை மேம்படுத்த ஏழைகளுக்குதவும் வழிமுறைகளையும் நோன்பு சொல்லித்தருகின்றது. "ஸகாதுல் பித்ர்" எனப்படும் ஏழைகளுக்கான பித்ராவையும் வழங்க நம்மை வழிப்படுத்தி நிற்கின்றது. நோன்பை விட்டவர்களும், ஏதும் குறையையுணர்ந்தவர்களும் இப் பித்ராவை வழங்க வேண்டும்.

அதுமட்டுமல்ல நோன்பானது, நம் உடலாரோக்கியத்திற்கும் அத்திவாரமாய்த் திகழ்கின்றது. ஒருமாத ஓய்வின் மூலம் உடலுறுப்புக்கள் சீராகத் தொழிற்பட வழியேற்படுகின்றது.

இதனையே நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்
"நீங்கள் நோன்பு நோற்பதன் மூலம் சுகதேகிகளாக மாறிக் கொள்ளுங்கள்"

இஸ்லாம் ஒவ்வொரு தனி மனிதனையும் அவதானத்துடனும், அனுதாபத்துடனும் நோக்குகின்றது. புத்திசுவாதீனமற்றவர்கள், குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள் , முதியோர், கடும் நோயாளிகள் , நீண்ட தூர பிரயாணிகள் என்போர் நோன்பை விடுவதற்கான அனுமதியையும் இஸ்லாம் தந்து நிற்கின்றது.

புனித நோன்பின் மகுடமாகவிருக்கும் நாட்களுள் "லைலதுல் கதிர்" இரவுமொன்றாகும். அல்குர்ஆன் , நபி (ஸல்) அவர்களுக்கு இறக்கப்பட்டது இவ்விரவிலேயே ஆகும்.இது ரமழான் மாதத்தின் கடைசி நாட்களில் வரும் இரவாகும்.

 "லைலதுல் கதிர் ரமழான் மாதத்தின் இறுதிப்பத்தில் ஒற்றையான இரவுகளில் இந் நாளை எதிர்பாருங்கள் "

என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.

ஆனால் என் சிறுபராயமுதலின்று வரை நோன்பின் இருபத்தேழாம் நாளன்றே லைலதுல் கதிர் இரவாகக் கொள்ளப்பட்டதாக எனக்கு ஞாபகம்..

(இந்த நாட்கணிப்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளதை நான் இணையத்தில் வாசித்துள்ளேன். இது சரியா, தவறா என நான் வாதவிடவில்லையிங்கு..... ஆனால் என் வாழ்வில் கடந்து சென்ற நாட்களில் 27ம் நாளை லைலதுல் கதிராக தியானித்தது ஞாபகம். )

சிறுபராயத்தில் அன்றைய தினவிரவில் கைகளுக்கு மருதாணியிட்டும் உறக்கம் கலைத்து , நல்லமல்கள் புரிந்ததும் இன்றுபோல் உலர்ச்சியின்றி ஞாபகத்திரையிலோடுகின்றது...

மனிதனொருவனின் முழு வாழ்விற்கும் தேவையான நன்மைகளை அல்லாஹ் இந்த இரவினிலேயே இறக்கி வைத்துள்ளான்.


" மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். அகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு என்றால் ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. அதில் மலக்குகளும் ஆன்மாவும் (ஜிப்ரீல்) தம் இறைவனின் கட்டளைப்படி சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். அந்த சந்தியானது விடியற்காலை வரை இருக்கும்." (97:1-5)


எனவே நமக்கு அதிகம் நன்மை தரும் இந்த இரவை நன்மையான செயல்களுடன் கழிக்க வேண்டும். குர்ஆன் ஓதுதல், தொழுதல் போன்றவை நம்மை இறைவன்பால் நெருங்க வைக்கும்.

இத்தகைய சிறப்புமிகு ரமழான் மாத நோன்பு நிறைவுற்ற பின் ஷவ்வல் மாத தலைப்பிறை தென்படும். அன்றைய தினம் ஈதுல் பித்ர் நோன்புப்பெருநாள் நம்முள்ளத்தை நீராட்டிச் செல்கின்றது.

நாம் செய்கின்ற ஒவ்வொரு நற்செயல்களும் நம்மை மறுமைக்குள் உள்ள நிம்மதியான அழகுமிகு வாழ்க்கைக்குள் இட்டுச் செல்கின்றது. ரமழான் மாதம் இன்னும் ஓரிரு நாட்களில் எம்மை விட்டுச்செல்லவுள்ளது.  இத்தருணத்தில் எம் தவறுகளுக்கும் இறைவனிடம் கெஞ்சி பாவ மன்னிப்பையும் பெற்றுக் கொள்வதுடன் ,அவனருளையும் ஏந்திக்கொள்வோமாக!

இதனை வாசிக்கும் என் முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு எனது நோன்புப்பெருநாள் வாழ்த்துக்கள்

                                       ஈத் முபாரக்



2012/08/15

விஷமிகள்


முகநூல் தொலைநூல்.......!
தொலைநூல் தொல்லைநூல்   !!

கலைப் பயணத்தில் தடைக்கற்களாய்
சில களைகள்  வழிபார்த்திருக்க..........
தறுதலைகளை அழித்தெடுக்கும் நேரமிது
அறந்தோய்ந்த வாளுக்கேயினி பேச்சு!

திருமறையைப் புறந்தள்ளி - பிறர்
வருத்துமிந்த கறுப்பர்கள் .............
அறம் பிடுங்கும் அரக்கர்கள்தான்
வேரறுத்தலே தகுமாகும் !

ஜொலி தேடி நிதம் நிதமே- பிறர்
வேலிதாண்டும் வெள்ளாடுகளை..,,,,
அழித்திடல் மனித தர்மமென்பேன்
பழுதடையா பெண்ணியம் காத்திடவே!

இளிப்பார் வெறிகொண்டு - முகம்
சுளித்திட்டால் பெண்ணவள் ..........
பழி சொல்லியே ஆர்ப்பரிப்பார்
குள்ளநரியாய் உருமாறி !

வாழவின்னும் வக்கில்லைதான்
தொழிலேதும் தேடவில்லைதான்......
ஆழிக்கடல் பேரலையாய் ஆவதென்ன........
எழிலாம் தாய்மையைச் சிதைப்பதென்ன!

போலி முகமூடிதனையணிந்தே...........
கேலி செய்வார் பெண்மைதனை மிதித்தே!
கோழையாய் மிரண்டோட மாட்டேன் -என்
அழையா விருந்தாளி உமைக் கண்டே!

விசம் பிடுங்க வன்முறை தேவையில்லை
கசப்பில்லா அஹிம்சையொன்றே போதுமெனக்கு!
வேசமிடும் கோஷங்களும் தேவையில்லை
சாபமிடும் சத்தியங்கள் போதுமெனக்கு!

கத்தரித்தால் மீளத் தளிர்க்குமென்று
சத்தமின்றி முகநூல் "புளக்" கிலிட்டால்................
நித்தமெம்மை இம்சித்தே வெறி தணிக்கும்
சித்தமில்லாக்  காவாலிகளிவர்கள்!

சாது மிரண்டால் காடு கொள்ளாதென
சூதுமிகு இவரறியார்.........தம்மை..
ரத்தமின்றி தலையறுக்கத் தாமே
கத்தி தரும் காட்டேறிகளிவர்கள்!

எச்சரிக்கைகள் தேவையில்லை- இந்த
எச்சில் விழுங்கும் பிசாசுகளிற்கே!
தாய்மைக்குள்ளும் காமந்தேடுமிவர்கள்
காய்ந்த மணற்குன்றுகள்

தம் விளையாட்டுப் புத்திதனை
விபரீதமாய் நகர்த்தும் போக்கிரியிவர்கள்...........
சட்டவேலிக்குள்ளும் நுழைந்திடாத
எட்டப்ப துரோகிகள்!

வீடு தேடி வந்தென்............
விரல் சுற்றும் நாகங்களே !
நெஞ்சுரங்கொண்டும் நகம் பிடுங்கும் நான்
 மகுடியல்ல ...........இடி!

இருபது கழியவில்லையின்னும்
இளைப்பாற  பிறர்  நிழலாம் !
பழி சொல்லியே பழகிட்டார்- அடுத்தவர்
விழிக்கண்ணீர் சுவைத்திடவே!

கழி தின்னுமிந்தக் கழுகுகள்
நாளை யிறை சந்நிதானத்தில் ......
கவலையோடு தரித்து நிற்பார்
நீர்த்திவலையாய்க் கண்ணீர் சுரந்து!

அழுதிட மாட்டேன் ......ஆரும்
வாழ விடாமல் தடுத்திட்டால்.......
அழித்திடுவேன் போராளியாகி - என்
அழகான  தேசம் மீட்கவே!

பெயரின் வீரம் கொண்டு .............
புறப்பட்டேன்  வளிக்காற்றாய்  !
காவு கொள்வேனந்தக் காளான்களை
சாவு மணியும் என் கரந்தனில்!

எழுச்சியென் பேனாவிலுண்டு........
எழிலென் மனசிலுண்டு !
விழலில் சிந்துமந்த நீர்ச்சுணையை
கழுவியே விரட்டுவேன் - அந்த
வல்லோன் துணையுடனே!

ஜன்ஸி கபூர் 

2012/08/14

அஜந்தா இணைப்பு


இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் அஜந்தா எனும் ஊரில் உள்ள குகையில் இயற்கை முறையில் வரையப்பட்ட ஓவியங்களே அஜந்தா ஓவியமெனப்படுகின்றது.

இவை கி.மு 200 முதல் கி.பி 650 வரையிலான காலப்பகுதியில் வரையப்பட்ட பௌத்த மதக் கொள்கையை முதன்மைப்படுத்தி வரையப்பட்ட ஓவியங்களாகும்.

குகையின் மீது களிமண்ணும் சாணியும் கலந்து கலவை பூசப்பட்டு அதன் மேல் சுண்ணாம்புச் சாந்து பூசப்பட்டு இறுக்கப்பட்ட பரப்பில் பல வண்ணக் கூழாங்கற்களை அரைத்து உருவாக்கப்பட்ட நிறங்களைக் கொண்டு வரையப்பட்டவையாகும். இவை தாவர வர்ணங்களல்ல என்பதால் மங்காதிருக்கின்றன. எனினும் இங்குள்ள 5 குகையோவியங்கள் மங்கியுள்ளன.

முன்பக்கத்திற்குச் செல்ல

- Ms. Jancy Caffoor -