About Me

2012/08/14

சித்திரம் பேசுதடீ


மனிதனது அறிவின் வெளிப்பாடாக அறிவியற் கலைகளும், உணர்வின் வெளிப்பாடாக அழகியற் கலைகளும் தோற்றம் பெற்றுள்ளன. ஓவியம் அல்லது சித்திரம் என்பது அழகியற் கலையாகும்.

ஓவியம் எனக்கு மிகவும் பிடித்தமான கலை. என் தந்தை மிகச்சிறந்த ஓவியர். தனது ஆசிரியர்ப் பயிற்சிசாலையில் அவர் வரைந்து தயாரித்த ஓவிய ஆல்பத்தினைப் புரட்டிப் புரட்டி பார்த்து ரசித்தே, என் பிஞ்சு விரல்கள் அன்றைய நாட்களில் பலதடவைகள் பூரித்திருக்கின்றன. அந்தப் பரம்பரை வழிக்கடத்தலால் எங்கள் குடும்பத்தில் நானும் என் சகோதரிகளும் பாடசாலை நாட்களில் ஓவியத்தில் மிக விருப்புடன் வரைந்துமுள்ளோம். அந்த ஓவிய ஈர்ப்பு அதன் வரலாற்று நகர்வுகளையும் என் வலைப்பூவில் விருப்புடன் பதிக்கின்றதின்று.

உலக வரலாற்றில் கிரேக்கர். எகிப்தியர், உரோமர் , சீனர் , இந்தியர் போன்றே முஸ்லிம்களும் கலைத்துறையில் தம் முத்திரை பதித்துள்ளனர். இஸ்லாம் மனித, மிருக உருவங்கள் வரைவதைத் தடைசெய்வதால், அவர்களின் கவனம் அரபு எழுத்தணிக்கலையில் சிறப்புற்று விளங்கியது.

"அல்லாஹ் அழகானவன். அவன் அழகை விரும்புகின்றான்" எனும் ஹதீஸின் எண்ணக்கரு இக்கவின்கலைக்கு ஆதாரமாகக் காணப்படுகின்றது. அல்குர்ஆனாலும், ஸூன்னாவாலும் தூண்டப்பட்ட இவ் எழுத்தணிக்கலை முஸ்லிம்களின் அழகுணர்ச்சியை மேவிநிற்கின்றது எனும் முகவுரையுடன்
ஓவியத்தின் மீதுள்ள என் ரசிப்பை எழுத்தாக்கி நகரவிடுகின்றேன் நளினத்துடன்!

ஓவியம் என்ற சொல்லானாது " ஓவம்" எனக் குறிப்பிடப்பட்டு, சங்க காலத்தில் செய்யுள்கள் பலவற்றில் இயற்றப்பட்டுள்ளன. இது அக்காலத்தில் ஓவியம் வளர்ச்சியடைந்துள்ளதை நிருபிக்குமொரு சான்றாகும்.

ஓவத் தன்ன வுருகெழு நெடுநகர்
              (பதிற்றுப்பத்து.88 : 28)
ஓவத் தன்ன இடனுடை வரைப்பின்
              (புறநானூறு. 251 1)
வத் தன்ன வினைபுனை நல்லில்
              (அகநானூறு. 98 11)

நற்றிணைப் பாடல் (118:7) ஒன்று ஓவியரை 'ஓவ மாக்கள்' என்கிறது. 

மதுரைக் காஞ்சியோ, ஓவியர்களை பின்வருமாறு கூறுகின்றது எக்காட்சியினையும் தமது ஓவியத்திற்குள் கொண்டு வந்து ஒப்பிட்டுக் காட்டுவர்; ஓவியர்கள், எதனையும்  நுட்பமாக உணர்ந்தவர்கள். ஆழமான நோக்குடையவர் என்று கூறுகிறது. 
இதனால் 
அவர்களைக் 'கண்ணுள் வினைஞர்' என்று பெயரிட்டு அழைக்கிறது அது!

உண்மையில் ஓவியர்கள் தாம் வரையும் ஓவியத்தினூடாக காட்சிகளின் உயிர்ப்புத்தன்மையை நம் கண்ணுக்குள் ஊடுகடத்தி நிறுத்தி வைப்பவர்கள் என்பதை அக்கால மக்கள் ஏற்றுக்கொண்டதன் வெளிப்பாடே  மேற்கூறப்பட்ட செய்யுளின் கருத்தாக அமைகிறது.


ஓவியர்களின் எழுதுகோல்கள் தூரிகை எனப்படும். சங்க காலத்தில்  இத்தூரிகையை  நற்றிணைப் பாடலொன்று " துகிலிகை"  என அழைக்கின்றது. இதன் கருத்தாவது , பாதிரி மலரானது அரக்கு மூலமாக இறக்கை ஒட்டப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பதாகும்.

ஓவ மாக்கள் ஒள்ளரக் கூட்டிய
துகிலிகை யன்ன துய்த்தலைப் பாதிரி (நற்றிணை. 118)


ஓவியமானது தூரிகையால் முதலில் இரேகைகளால் வரையப்படும். இவ்வாறு வரையப்படும் வர்ணங்கள் தீட்டப்பட முன்னர் காட்சிப்படுத்தப்படும் இவ்வோவியங்களை சங்ககாலப் பாடல்கள்  "புனையா ஓவியம் " என விளித்துள்ளன.


சங்க காலமென்பது காதலொழுக்கத்தை மேவிய காலமாகும். இக் காலத்தில் காதலனொருவன், தன் காதலை தலைவி ஏற்காவிட்டால்,  அவள் உருவத்தை புனையா ஓவியமாக வரைந்து, அதனை பனை மடலில் செய்யப்பட்ட குதிரையில் அமர்ந்து ஊருக்குக் காட்சிப்படுத்தி முறையிடுவான்

நாமின்று ஓவியங்கள்  வீடுகள், கடைகள், காட்சிசாலைகள் உள்ளிட்ட பல இடங்களில் வைக்கப்பட்டிருப்பதை அவதானிக்கலாம். சங்ககால மக்களும் தாம் வரையும் ஓவியங்களை  வீடுகள், பொது இடங்களிலும், மன்னர்கள் தமது அரண்மணை , அந்தப்புரங்களிலும் காட்சிப்படுத்தினார்கள்.

"சித்திர மாடத்துத் துஞ்சிய மணிமாறன் " என பாண்டியன் மன்னன் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுவதற்குக் காரணம் அவர் தனது தங்குமிடத்தில் நிறைய சித்திரங்களைக் காட்சிப்படுத்தியிருந்தார்.


பாண்டிய மன்னரின் அரண்மனை அந்தப்புரச் சுவர்களிலும் அழகிய மலர்க்கொடிகளினாலான சித்திரங்கள் வரையப்பட்டிருப்பதாக  "நெடுநல்வாடை  -  ( 110  - 114  )  யிலுள்ள செய்யுட்பாக்கள் குறிப்பிடுகின்றன.


17ம் நூற்றாண்டைச் சேர்ந்த மதுரையிலுள்ள சுவரோவியங்கள்

அவ்வாறே சோழர் மன்னரின் அரண்மனைச் சுவரின் வெளிப்புறத்திலும் பல ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. சாலைகளில் செல்லும் தேர்கள் எழுப்பிய புழுதிகள் வெந்நிற அச் சுவர்கள் மீது படிந்து சாம்பலில் புரண்ட யானையொன்றின் தோற்றத்தை ஏற்படுத்தியிருந்ததாக பட்டினப்பாலை  பாக்கள் அழகுற விளக்கின்றன.












சோழர்கால ஓவியங்கள் பாண்டி மாதேவி அமர்ந்திருந்த அந்தப்புரக் கட்டிலுக்கு மேலே இருந்த விதானச் சுவரில் ஓவியங்கள் வரையப் பெற்றிருந்தன. இவற்றில் மேட இராசி முதலிய இராசிகளின் உருவங்கள் இருந்தன. மேலும் பாண்டியரது குல முதல்வனான சந்திரனோடு அவனது காதல் மனைவி உரோகிணி சேர்ந்திருக்கும் காட்சியும் தீட்டப் பட்டிருந்ததென நெடுநல் வாடை கூறுகிறது.


அவ்வாறே மதுரைக்கண்மையிலுள்ள திருப்பரங்குன்றத்திலுள்ள "எழுத்து நிலை மண்டபத்தில்"  ரதி, மன்மதனின் உருவங்கள் வரையப்பட்டுள்ளன என பரிபாடல் விளக்குகின்றது.

                                  மன்மதனும் ரதியும்
அரசர்களின் சிந்தையையே வென்ற ஓவியங்கள், சாதாரண நம்மனங்களைச் சுண்டியிழுப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஓவியங்களின் வரலாற்றை விழிகள் மேயும் போது பல சுவாரஸியமான விடயங்களுடன் நாம் ஒருமித்து விடுகின்றோம்.

ஓவியத்தின் உரிமையாளர் ஓவியராவார். ஓவியர் என்பவர் தன் உள்ளத்தில் நிழலாடும் நகர்வுகளை தூரிகை வழியாக உயிர்ப்பிக்கின்ற கலைஞராவார். ஓவியர் தன்னகத்தே கொண்டுள்ள கலைத்துவம் படிந்துள்ள அருந்திறன் கருத்துப்புலப்படுத்தலோடு வெளிப்படுத்தப்படும் போது அவ்வோவியம் உயிர்ப்படைகின்றது. அழகான உயிரோட்டமுள்ள எந்தவொரு  ஓவியமும் என் ரசிப்பைத் தொட்டு நிற்கும்.


ஓவியத்துறையானது 16ம் நுற்றாண்டிலிருந்து இன்றுவரை பரிணாமவளர்ச்சி கண்டுள்ளது. இந்த வளர்ச்சியின் விளைவுகளை நம்முன்னால் நிலை நிறுத்திய ஓவியர்கள் பலர். அவர்களுள் சிலராக ரவீந்திரநாத் தாகூர்,  ரவி வர்மா, மைக்கல் ஏஞ்சலோ, எம்ரான் வான்கோ பிக்காசோ  என்போரை இப்பட்டியலில் இணைத்துள்ளேன்.


                   லியாடோனோ டாவின்சி மொனோலிசா


                             இந்திய ஓவியர் ரவிவர்மாவின் ஓவியம் -
                            அர்ச்சுனனும் சுபத்திரையும் தனித்திருத்தல்


    பிக்காஸோ 


                       மைக்கல் ஏஞ்சலோவின் ஓவியமொன்று

சிகிரியா, அஜந்தா (அழுத்தி இதனைப் பார்க்க ) குகை ஓவியங்கள் இன்றும் ஓவியத்தின் மகிமைகளை உலகிற்குப் பறைசாற்றும் சிறப்புமிகு குகை ஓவியங்களாகும்.பழைமையான குகை ஓவியமானது பிரான்ஸ்- ஸ்பெயின் எல்லையிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ள சான் ஓவியங்களாகும். இங்கு மிருக உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சான் மக்களின் தலைவனான மருத்துவன் மிருகங்களின் உடலில் கூடு விட்டு கூடு பாய்ந்து வலிமை பெற்று அவ்வலிமையால் , தன் குடியானவர்களை காக்கும் செயற்பாடுகளின் பின்னனியில் இவ்வாறான மிருகங்களின் உருவங்களை அவர்கள் விரும்பிப் பொறித்துள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் பல தகவல்களை நமக்கு முன்வைக்கின்றனர்.


                  சீகிரியா குகை ஓவியம் ( இதனை அழுத்திப் பார்க்க)


                                                    அஜந்தா குகைச்சிற்பங்கள்


                        அஜந்தா குகை ஓவியமொன்று

குகையோவியங்களுக்குப் பிறகு ஓவியக்கலை ஆசிய, மற்றும் எகிப்தில் நன்கு வளர்ச்சி பெற்றது.

எகிப்தியர்கள் தமது ஓவியங்களை கணிதசூத்திரத்தைக் கொண்டு வரைந்தார்கள். இவை இருபரிமாண முறையில் வரையப்பட்ட ஓவியங்களாகும். இவர்களின் ஓவியங்களில் தலை,கால் எல்லாம் பக்கவாட்டில் வரையப்பட்டுள்ளது. தசை, விரல்கள் காணப்படாது. பொருட்கள் ஒரே சீரான அளவில் காணப்படும். இதில் உயிரோட்டத்தைக் காணமுடியாது. எல்லோரின் முகங்களும் அந்தஸ்து, பால் வேறுபாடின்றி ஒரே விதமாகவே காணப்படுகின்றன.
எகிப்தியர் ஓவியம்
மூவாயிரம் வருடமாக எகிப்தியர் ஒரே விதமான ஓவியங்கள் , சிற்பத்தையே வரைந்தார்கள். இதனால் இவர்களின் ஓவியத்திலும், மெசப்பதேமியர்களின் ஓவியத்திலும் மலர்ச்சி பெறப்படவில்லை. ஏனெனில் இவர்களின் ஓவியத்தில் கற்பனையே இருந்தது.

எகிப்தியர்களை அடியொற்றி ஓவியத்தினுள் நுழைந்தவர்கள் கிரேக்கர்கள் ஆவார்கள். இவர்கள் தமது  கண்களால் உள்வாங்கியதை தம் ஆத்மாவுக்குள் செருகி உயிரோட்டமுள்ளதாகவும், ஒளிமயமானதாகவுமுள்ள ஓவியங்களை வரைந்தார்கள். அங்க  அசைவுகளும், தசை, நரம்பமைப்புக்களும் துல்லியமாகத் தெரியும் விதத்தில்  நுட்பமாக அவதானித்து வரையப்பட்டது. இயற்கையாக உள்ளதை உள்ளபடியே தந்தவர்கள் இக்கிரேக்கர்களே.. !



ஓவியத்திற்கான விதி, எடை, சமனிலை என்பவற்றை நிர்ணயித்து அழகான ஓவியங்கள் பிறப்பெடுக்க கிரேக்கர்கள் ஆற்றிய பங்களிப்புக்கள் அளப்பரியது. இவர்களது ஓவியங்கள் முப்பரிமாணத்தைக் காட்டி நின்றன. இங்கு நரம்பு, தசையமைப்புக்கள் வெளிப்படுத்தப்படுவதால் உயிர்ப்புத்தன்மையை நாம் காணலாம்



                                     கிரேக்க ஓவியம்
யதார்த்த வாழ்வியலின் செயற்பாடுகள், இயற்கைக் காட்சிகள், வரலாற்றுச் சம்பவங்கள், உயிரினங்கள், இறைவனின் அற்புதப் படைப்புக்கள், திருவிழாக்காட்சிகள், சமய நிகழ்வுகள், கடவுளின் உருவம், அரச வாழ்வியலின் பிரதிபலிப்புக்கள் போன்ற பலவற்றுடன் தொடர்புபட்டே பெரும்பாலும் ஓவியங்கள் வரையப்படுகின்றன.        வரையப்பட்டுள்ளன.


இவ் ஓவியங்களில் மக்களின் கலை, கலாசார, பின்னணிகளும், சமூக நலன்பாடுகளும் , அரசியலீடுபாடுகளும் வெளிப்படுத்தப்படுகின்றன.


                                                    ராஜஸ்தானியப் பெண்கள்
ஓவியமானது நமது வாழ்வின்  நிகழ்வுகள், தேவைகளை பிரதிபலிப்பவையாக அமையும் போதே காலத்தையும் வென்று நிற்கின்றன. நவீனத்துவம் ஓவியத்திலும் புகுத்தப்படுகின்றது. ஆனால் அவை தலைமுறையினரை நெறிப்படுத்தக்கூடியதாக அமைதல் வேண்டும். இல்லாவிடில் காலக்கண்ணாடி அதனை நிராகரித்து விடும். அந்த நவீனத்துவ சிந்தனை நமக்குள் கேலி எண்ணத்தை ஏற்படுத்தி விடும்.


                           ரிமெக்ஸ் செய்யப்பட்டுள்ள மொனோலிசா

 ஓர் ஓவியத்தின் உயிர்ப்புக்கு அவற்றின் வண்ணக்கலவையின் பொருத்தப்பாடே காரணமாக அமைகின்றதெனலாம். ஆரம்ப காலங்களில் இயற்கை வர்ணங்களாகத் தாவரச்சாறுகளைப் பயன்படுத்தி வந்தாலும், இன்றைய நெருக்கடி வாழ்வுக்குள் சிக்குண்டதன் பிரதிபலிப்பாக இயற்கை வர்ணங்கள் தயாரிப்பிற்கான நேரமின்மையாலும், நீண்டகாலம் வர்ணங்கள் மங்காமலிருப்பதற்காகவும் கடைகளில் விற்பனை செய்யப்படும் இரசாயன வர்ணங்களே பயன்படுத்தப்படுகின்றன.


முற்காலத்தில் சுவர்களில் வரையப்பட்ட ஓவியங்கள் தற்காலத்தில் பெரும்பாலும் கடதாசிகளிலேயே வரையப்படுகின்றன. ஓவியம் வரையும் கடதாசி சாணம் நனைத்த நீரில் தோய்த்து வரையப்படும் போது சுவர்களில் வரையப்படும் தோற்றத்தை அளிக்கின்றது எனக்கூறப்படுகின்றது.

எந்தவொரு சிறப்பான செயலொன்றை நாம் முன்வைக்க வேண்டுமாயின் அதற்கான உரிய பயிற்சியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.


ஓவியம் வரையும் ஆர்வம் பெரும்பாலும் சிறுவர்களிடத்தில் அதிகமாக காணப்படுகின்றது. இதனாலேயே அவர்களின் மனங்களில் மகிழ்ச்சியை நிரப்புவதற்காக கார்ட்டூன் சித்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அரசியல் எண்ணக்கருக்கள் கேலிச்சித்திரங்களாக வெளிப்படுத்தப்படும் போது அவற்றை நாம் நமது மூளையைப் பயன்படுத்தி கருத்துக்களை ஆராயவும் வேண்டியுள்ளது.

நாம் பார்ப்பதை வரைவதை விட, பார்த்ததை மனதுள் உள்வாங்கி அவற்றை வரையும் போதே அவ்வோவியங்களும் பேச ஆரம்பிக்கின்றன. எனவே ஓவியம் வரைவதாயின் நாம் நமது மனக்கண்ணில் வரைய வேண்டிய சித்திரத்தை நிலை நிறுத்த வேண்டும். ஒரு காட்சியை அவ்வாறே நகலெடுப்பதும், அதனை வரைவதும் ஓவியர்களின் உத்தியாகக் கருதப்படுகின்றது. தான் கண்டு ரசித்தவற்றை, அதே ரசனையுடன் வாசகர்களுக்கு வழங்குவதில் பெரும் சவால்கள் ஓவியர்களுக்கு ஏற்படும். அச் சவால்களை அவர்கள் வெற்றிகரமாக எதிர்கொள்ளும் போது நமக்குள் சிறப்பான ஓவியங்கள் கிடைக்கின்றன.


நான் முன்பு "இண்டியன் இங்க் " எனப்படும் வர்ணத்தை , நிப் பேனாவால் நனைத்து வரைந்த ஓவியங்கள் என் கண்முன்னால் நிழலாடுகின்றன இத் தருணத்தில் !

கருத்து வெளிப்பாடுகளாகவோ, அலங்காரமாகவோ ஓவியத்தை வரையலாம். பொருத்தமான கடதாசி, உரிய இலக்கம் கொண்ட தூரிகை பொருத்தமான வர்ணங்கள் மற்றும் துடைப்பதற்கான துணி, பென்சில் அல்லது நிப் பேனா உள்ளிட்ட எழுதுகருவிகளுடன் நாம் நமது சித்திரப்பயணத்தைத் தொடரலாம்.


முதலில் அகக்கண்ணில் நிறுத்தப்பட்ட உருவத்தை பென்சிலில் அல்லது நிப் பேனாவால்  நேர்த்தியாக அதாவது ஒருசீராக வரையவேண்டும். உருவம் வரைந்த பின்னர் பொருத்தமான வர்ணங்களை உபயோகித்து அதன் வெளிப்புறக் கோடுகளை வரைய வேண்டும் (Out line). அதன் பின்னரே பிரஷ்ஷை உரிய விதத்தில் வர்ணங்களில் நனைத்து, அவ் வர்ணங்களை ஓவியத்தின் உட்பகுதிகளில் சீராக நிரப்ப வேண்டும். ஏனைய பகுதிகளில் வரணங்கள் தவறுதலாகப் பட்டுவிட்டால் அதனை துணி மூலம் அகற்றலாம். அவ்வாறே தூரிகையையும் நன்றாக நீரில் கழுவியே பயன்படுத்த வேண்டும். சிறப்பான ஓவியங்களாயின் அதற்குரிய சட்டகமிட்டு (பிரேம்) வீடுகளில் காட்சிப்படுத்தலாம். அல்லது விற்பனை செய்யலாம்.


ஓர் சினிமா வெற்றி பெற வேண்டுமாயின் அதில் காட்சியமைப்புக்கள் சிறப்பாகக் காணப்படல் வேண்டும். இதற்கும் ஒவியத்திற்குமிடையிலான தொடர்பு அவசியமாகப்படுகின்றது. எனவே திரைப்படம் சார்ந்த தொழினுட்ப வளர்ச்சி, ஆன்மீகம், அரசியல், வாழ்க்கைத்தரம், புகைப்படம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் ஓவியம் தன் முத்திரையைப் பதித்துள்ளது. சினிமா நடிகர் சிவகுமார் அவர்களின் பல சிறப்பான ஓவியங்களை நான் ரசித்துள்ளேன். அவ்வாறே எனது பாடசாலை நண்பி ஆசிரியை சிசிலியா பெட்டர்ஸன் அவர்களின் ஓவியங்களையும் நான் ரசித்துள்ளேன்.


ஓவியமானது மனநிறைவுடன் கூடிய பொழுதுபோக்கு மாத்திரமல்ல, வருமானத்தையும் நமக்குப் பெற்றுத் தரக்கூடிய துறையாகவும் விளங்குகின்றது.

 நமது கரங்களால் ஓவியம் வரைந்து அது மற்றவர்களையும் மகிழ்ச்சிப்படுத்தினால் அந்த இன்பத்திற்கு எல்லைகள் வகுக்கமுடியாது.


இன்று நாம் காணும் இந்த ஓவியத்துறையானது பல தசாப்தங்களில் பல்வேறு பரிமாணங்களைத் தாண்டி வந்துள்ளன. பல வரலாறுகளைக் கொண்டுள்ளன. கண்களால் ஓவியங்களைப் பார்க்கும் போது நம்மனக்கவலைகளை உறிஞ்சி நம்மை மகிழ்ச்சிப்படுத்தும் சக்தி இவ் ஓவியத்திற்கு இருக்கின்றது
நான் ரசித்த சில ஓவியங்களை நீங்களும் ரசித்திருப்பீர்கள்  மகிழ்ச்சியே !


இதில் என் கைவண்ணமுள்ளது. விரும்பினால் இதனை அழுத்திப் பாருங்கள்.

- Ms. Jancy Caffoor -

12 comments:

  1. அருமையான பதிவு ! ஓவியத்தின் ஜீவன் காண்போர்கண்களில் உள்ளது..! காட்ச்சிப்படுத்திய ஓவியங்களுக்கு நன்றி இன்னும் பல அரிய ஓவியங்களை களிமண்சுவட்டில் வரைந்து வைத்த தொன்மைக்கு சான்றுண்டு..!

    மதம் , தேசியம் கடந்து நேசிக்கும் கலைகளில் இசைக்கு அடுத்து ஓவியங்களுக்கும் இடமுண்டு !

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி கார்த்திக் ராஜா

      Delete
  2. ஓவியம் பற்றிய அருமையான தகவல்.
    அழகிய ஓவியங்களையும் தந்துள்ளீர்கள்.

    வதிரி.சி.ரவீந்திரன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரவீந்திரன் Sir

      Delete
  3. i fouund 2 mistakes. 1. thats not picaso painting 2.not greek painting. that is greek sclpture.

    ReplyDelete
    Replies
    1. தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி

      Delete
  4. வணக்கம்
    ஓவியம் பற்றி மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் தங்களின் பக்கம் வருவது முதல்முறை இனி என்வருகை தொடரும்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரூபன்.வரவேற்கின்றேன்...

      Delete
  5. ஆருமையான ஓவியங்கள் எடுத்தியம்பிய விபரங்களும் நன்றே! நன்றி வணக்கம் !

    ReplyDelete
  6. வணக்கம்


    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்


    அறிமுப்படுத்தியவர்-காவியகவி


    பார்வையிட முகவரி இதோ-வலைச்சரம்


    அறிமுகம்செய்த திகதி-22.07.2014



    -நன்றி-

    -அன்புடன்-

    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வுடன் நன்றி பகிர்கின்றேன்

      Delete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!