முகநூல் தொலைநூல்.......!
தொலைநூல் தொல்லைநூல் !!
கலைப் பயணத்தில் தடைக்கற்களாய்
சில களைகள் வழிபார்த்திருக்க..........
தறுதலைகளை அழித்தெடுக்கும் நேரமிது
அறந்தோய்ந்த வாளுக்கேயினி பேச்சு!
திருமறையைப் புறந்தள்ளி - பிறர்
வருத்துமிந்த கறுப்பர்கள் .............
அறம் பிடுங்கும் அரக்கர்கள்தான்
வேரறுத்தலே தகுமாகும் !
ஜொலி தேடி நிதம் நிதமே- பிறர்
வேலிதாண்டும் வெள்ளாடுகளை..,,,,
அழித்திடல் மனித தர்மமென்பேன்
பழுதடையா பெண்ணியம் காத்திடவே!
இளிப்பார் வெறிகொண்டு - முகம்
சுளித்திட்டால் பெண்ணவள் ..........
பழி சொல்லியே ஆர்ப்பரிப்பார்
குள்ளநரியாய் உருமாறி !
வாழவின்னும் வக்கில்லைதான்
தொழிலேதும் தேடவில்லைதான்......
ஆழிக்கடல் பேரலையாய் ஆவதென்ன........
எழிலாம் தாய்மையைச் சிதைப்பதென்ன!
போலி முகமூடிதனையணிந்தே...........
கேலி செய்வார் பெண்மைதனை மிதித்தே!
கோழையாய் மிரண்டோட மாட்டேன் -என்
அழையா விருந்தாளி உமைக் கண்டே!
விசம் பிடுங்க வன்முறை தேவையில்லை
கசப்பில்லா அஹிம்சையொன்றே போதுமெனக்கு!
வேசமிடும் கோஷங்களும் தேவையில்லை
சாபமிடும் சத்தியங்கள் போதுமெனக்கு!
கத்தரித்தால் மீளத் தளிர்க்குமென்று
சத்தமின்றி முகநூல் "புளக்" கிலிட்டால்................
நித்தமெம்மை இம்சித்தே வெறி தணிக்கும்
சித்தமில்லாக் காவாலிகளிவர்கள்!
சாது மிரண்டால் காடு கொள்ளாதென
சூதுமிகு இவரறியார்.........தம்மை..
ரத்தமின்றி தலையறுக்கத் தாமே
கத்தி தரும் காட்டேறிகளிவர்கள்!
எச்சரிக்கைகள் தேவையில்லை- இந்த
எச்சில் விழுங்கும் பிசாசுகளிற்கே!
தாய்மைக்குள்ளும் காமந்தேடுமிவர்கள்
காய்ந்த மணற்குன்றுகள்
தம் விளையாட்டுப் புத்திதனை
விபரீதமாய் நகர்த்தும் போக்கிரியிவர்கள்...........
சட்டவேலிக்குள்ளும் நுழைந்திடாத
எட்டப்ப துரோகிகள்!
வீடு தேடி வந்தென்............
விரல் சுற்றும் நாகங்களே !
நெஞ்சுரங்கொண்டும் நகம் பிடுங்கும் நான்
மகுடியல்ல ...........இடி!
இருபது கழியவில்லையின்னும்
இளைப்பாற பிறர் நிழலாம் !
பழி சொல்லியே பழகிட்டார்- அடுத்தவர்
விழிக்கண்ணீர் சுவைத்திடவே!
கழி தின்னுமிந்தக் கழுகுகள்
நாளை யிறை சந்நிதானத்தில் ......
கவலையோடு தரித்து நிற்பார்
நீர்த்திவலையாய்க் கண்ணீர் சுரந்து!
அழுதிட மாட்டேன் ......ஆரும்
வாழ விடாமல் தடுத்திட்டால்.......
அழித்திடுவேன் போராளியாகி - என்
அழகான தேசம் மீட்கவே!
பெயரின் வீரம் கொண்டு .............
புறப்பட்டேன் வளிக்காற்றாய் !
காவு கொள்வேனந்தக் காளான்களை
சாவு மணியும் என் கரந்தனில்!
எழுச்சியென் பேனாவிலுண்டு........
எழிலென் மனசிலுண்டு !
விழலில் சிந்துமந்த நீர்ச்சுணையை
கழுவியே விரட்டுவேன் - அந்த
வல்லோன் துணையுடனே!
ஜன்ஸி கபூர்
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!