About Me

2013/01/18

வெளிநாட்டு அஞ்சல்


என்னதான் இணையத்தின் முற்றத்தில் உலகம் சுருங்கிக் கொண்டாலும் கூட வெளிநாட்டு அஞ்சல்களின் பயணப் பாதைகள் இன்னும் தடைப்படவில்லை.
வான் வழியாகவோ அல்லது கடல் வழியாகவோ அனுப்பப்படும் வெளிநாட்டு அஞ்சல்களில் கடிதம், அஞ்சல் அட்டைகள், வான் கடிதம், பொதிகள் மற்றும் சிறிய பைக்கற்றுக்கள் உள்ளடங்குகின்றன.

வெளிநாட்டுக் கடிதங்களின் ஆகக் கூடிய நிறை 2 கிலோ கிராம் ஆகும். இந்தக் கடிதங்களை நடுத்தர உறையைப் பயன்படுத்தி தபாலிட வேண்டும். அஞ்சல் சேவையின் கீழ் வெளிநாடுகளுக்கு அனுப்பக் கூடிய ஆகக்கூடிய நிறை 30.5 கிலோவாகும்.

வெளிநாடுகள் A,B,C,D,E,F,G,H என 8 வலயங்களாகப்  பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வலய நாடுகளுக்கும் கட்டணங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாட்டு கடிதங்களை பதிவு செய்ய முடியும். அவ்வாறே காப்புறுதி அஞ்சலில் ,அஞ்சல் அலுவலக சட்டதிட்டங்களுக்குட்பட்டு வங்கி வரைவு, காசோலை, நாணயங்கள், பணத்தாள்கள், இரத்தினக்கற்கள், தங்க ஆபரணங்கள், இலாபச் சீட்டுக்கள், என்பவற்றை அனுப்ப முடியும்.

- Jancy Caffoor-

மின்னஞ்சல் @


" ரே டாம்லின்ஸன் " எனும் கம்பியூட்டர் பொறியிலாளரே 1971ம் ஆண்டு இச் சின்னத்தை உபயோகித்து முதன்முதலாக மின்னஞ்சலை அனுப்பினார். கணனி விசைப் பலகையில் எவரின் பெயரையும் குறிக்காத, குழப்பம் விளைவிக்காத சின்னமாக @ ஐ அவர் பயன்படுத்தினார்.

இந்த @ 18ம் நூற்றாண்டில் புழக்கத்தில் வந்தது. அந்த எழுத்து தொடர்பாக பல ஆராய்ச்சிகள் இருந்தாலும் கூட, ஆராய்ச்சியாளர் டெனிஸ் என்பவர் கூறுகின்றார் ப்ரெஞ்ச், ஜேர்மனிய வியாபாரிகள் a எழுத்தை வேகமாக உச்சரிப்பதால் ஏற்பட்ட திரிபு இதுவென்று!

2000ம் ஆண்டில் இது தொடர்பாக கருத்துக் கூறிய இத்தாலி நாட்டவர், 14ம் நூற்றாண்டுக்குரிய வியாபார தஸ்தாவேஜூகளில் இவ்வெழுத்துக் காணப்படுவதாகக் கூறினார். "anfora" எனும் அளவைக் குறிக்க இது பயன்பட்டதாகக் கூறினார். இது arroba என்பதின் மொழிபெயர்ப்பாகும். 1885ல் வியாபார ரீதியிலான "a" அண்டர்வுட்  தட்டச்சு  மெஷினில் சேர்க்கப்பட்டது.

இதனை ஸ்பானியர்கள் "arroba" என்றும், பிரெஞ்சுக்காரர் "arobase"  என்றும் , அமெரிக்கர், பிரிட்டிஷ் காரர்கள் "at-sign"  என்றும், ஜெர்மனியர்" at- Zeichen" என்றும், எஸ்தோனியர் "at- mark" என்றும்,  ஜப்பானியர் "atto maak" என்றும் உச்சரிக்கின்றார்கள்.

இதன் உருவருத்தை குரங்கின் வால் என சிலரும், சிலரோ நத்தை என்றும் கூறுகின்றனர்.


- Jancy Caffoor-





தாவணி


வாலிப தேசம் கண்டெடுத்த
வண்ணக்கொடி!

மலை முகடுகளை மறைத்தோடும்
நீர்வீழ்ச்சி!

இளமை ரகஸியங்களை
காற்றிலுதிர்க்கும்  உளவாளி!

பருவத்து அலைவரிசைக்காய்
விரும்பப்படும் ஒலிபரப்பு!

பாவாடைக் குடைக்காய்
தேர்ந்தெடுக்கப்பட்ட பொன்னாடை!

இடை நெரிக்கப் படையெடுக்கும்
நூற்படை!

குமரப் பருவத்தை அங்கீகரிக்கும்
ஒப்பந்தக் காகிதம்!



2013/01/17

திருந்தும் வரை


உன்னைத் திருத்த முடியவில்லை
வருந்துகின்றேன்!
கடிவாளமிடப்படாத வுன் மனசு
பிடிவாதம் பிடிக்கின்றதோ - நம்
முரண்பாட்டில் முகம் நனைக்க!

"காளை நீயே" என்றிருந்த - என்
நாளை..............
சாலையோரப் புழுதிகளால்
ஓலையெழுதினாய் - உன்
வாலிபக் கிறுக்கை எனக்குள் விற்றுவிட!

என்னை அங்கீகரிக்கு முனது
இராசதானிக்காய்..................
முரசு கொட்டியழைக்கின்றாய்
உரிமையுடன்!
பூரிக்கின்றேன் உன்னன்பில்- இருந்தும்
உதிரமுறிஞ்சும் உன் தேடலில்
கதி கலங்கிக் கிடக்கின்றேன்
"கல்லாகி" இறுகி!

மன்னித்து விடென்னை!
உனக்காய்................
செலவளிக்கப்பட்ட  என் மணிப்பொழுதுகள்
இப்பொழுதெல்லாம் நகர்கின்றன- என்
தனிமை வீதிகளில்
உன்னைத் தவிர்த்து!

அடம்பிடிக்காதே பின்தொடர..........
உனக்கான அனுமதி மறுக்கப்படும் - நீ
திருந்தும் வரை!





நிராயுதபாணியாய்


சுருண்டு கிடந்தேன் - என்
கனவுலகில்!
சுள்ளென்று கிள்ளுகின்றாய் அடிக்கடி
உன் நினைவுகளால்!

பனி படரும் இருள் முகிலில்
கனிவாய் உலா வருமுன்
குரற் றொனியில்....................
அடங்கித்தான் கிடக்கின்றேன்
இனிய ஸ்வரமாய்!

இப்பொழுதெல்லாம்..................
என் தினக்குறிப்பின் ஆக்கிரமிப்பில்
அலைந்து கொண்டிருக்குமுன்னை.........
சேமித்துக் கொள்கின்றேன் கவிதைகளாய்!
பத்திரப்படுத்து என் உணர்வுகளை
உன் அன்பகத்துள்!

சிரிக்கின்றாய் எனைக் கடுப்பேற்ற.........
உன்
கருவிழிகளில் குறும்பையும் லேசாய்ப் பிசைந்து!

ஆயுதமேந்தவில்லை- உன்னை
ஆட்கடத்தல் செய்யவுமில்லை!
நிராயுதபாணியாய்
மருகிக் கிடக்கின்றாய் - என்
வாலிப எல்லைகளில் உன் விடுதலை மறுத்து!

நம் முதற் சந்திப்பின் மௌனம்
நிரம்பி வழிகின்றது ஞாபகக் குவளையில்
நாணத்தைச் சிதறியவாறு
நேசப் போதையில் கிறங்கி!

பரிவோடு காதல் குலைத்து
நிதமென்னை அரவணைக்குமுன்னை.........
அறிவிப்புச் செய்யட்டுமா - என்
தாயகமாக!