About Me

2014/07/25

முகநூல் துளிகள்



நாம் ஜெயித்துக் கொண்டே இருக்க....
உற்சாக மனம் போதும்..

அப்பொழுதுதான்...

நிழல்களை நிஜமாக்கும் கற்பனை நம் அறிவுடன் சேர்ந்து நம்மை உற்சாகமாய் இயங்க வைக்கும். அவ் உற்சாக விழுதுகள் நம் வெற்றியைத் தாங்கும் தூண்கள்!

---------------------------------------------------------------------------------------

நம்பிக்கை பலருக்கு வெறும் எழுத்துக்களால் ஆன சொல்..

செய்வார் சிலர் ஏனோ தானோவென..
சிலரோ....
விதையிட்டவுடன் விளைச்சல் தேடுவார்!
சிலரோ.....
கடுகுச் செயலுக்கும் மலையெனத் திணறுவார்!

பலருக்கு ........
வாழ்க்கை கசந்து போவதற்குக் காரணம் நம்பிக்கையின்மையே!

உண்மையில்...

நம்பிக்கை என்பது நமது மனதை ஏவச் செய்யும் செயல்!
அதனால் நம்பிக்கை கொண்டோர் தம் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றைத் தீர்ப்பதற்கான வழிகளையும் இலேசில் கண்டுபிடித்து விடுவார்கள்!

நம்பிக்கை நம்மை வாழ வைக்கும் சக்தி!
நம்புவோமாக!

-------------------------------------------------------------------------------


அழ வைக்கும் ஆயிரம் வார்த்தைகள்...
அன்பு செய்யும் வார்த்தைகள் முன்
தோற்று விடுகின்றன !
காற்றில் தன் சினத்தைக் கரைத்து!!

உண்மைதான்....

கண்ணீரையும் கரும்பாய் மாற்றும் சக்தி  இந்த அன்புக்குண்டு!
ஏனெனில்...
இந்த அன்பினை எப்பேதங்களும் தொட்டுப் பார்ப்பதில்லை!

அன்பாய் இருப்போர்...
இன்பத்தின் நீரூற்றில்
என்றுமே கலந்திருப்பார்
தம் வாழ்வில்!

-------------------------------------------------------------------------------------------


ஒருவர்...........

நமக்கு உடன்பாடில்லாத எந்த விடயங்களைக் கூறினாலும் ,முதலில் நாம் அவற்றை மறுத்து விடுகின்றோம்.

ஆனால்........

சற்று கண நேரச் சிந்தனையானது...

நம் மனதை முரண்பாட்டிலும் உடன்பாடு காண தயார்படுத்தி விடுகின்றது!

இதுதான் வாழ்க்கை!

தீயின் வெப்பம் பிரித்து குளிர் போக்கும் மனப்பக்குவம் நம்முள் இருக்கும் வரை, நம் வாழ்வும் சலித்துப் போவதில்லை!

-------------------------------------------------------------------------------------------



வௌிப்படையான பேச்சு உறவின் உறுதிப்பாடுதான்...
ஆனால்.....
அதனால் ஏற்படும் காயங்களையும், முரண்பாடுகளையும் கட்டுப்படுத்தும் சக்தி மௌனத்திற்கே உரியது!

நமக்கு உடன்பாடில்லாதவற்றை நம் உறவுகள், நண்பர்கள் வௌிப்படுத்தும் போது மௌனம்தான் சிறந்த முடிவாக இருக்கின்றது!

-------------------------------------------------------------------------------------------


பயம் என்பது பலவீனத்தின் வருடல்...
துணிவென்பது பலத்தின் விளைவு!

ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் இந்தப் பயமும் துணிவும்தான் மனதின் உச்சரிப்புக்களாகி அவர்களின் செயல்களுக்கு பின்னணியாகி விடுகின்றன!

மனசாட்சியோடு பலத்தைக் குலைக்கும் செயல் வீரன் சரித்திரமாகின்றான்...
பலவீனத்தில் தன்னைக் கரைத்து ஒதுங்கிக் கொள்பவன் காணாமற் போகின்றான்..!

துணிவே துணை..

எனவே நல்லவற்றை துணிந்து செய்யும்போது நம் வாழ்க்கையும் நமக்கு பணிந்து ஆரத்தழுவுகின்றது சந்தோசங்களுடன்!

------------------------------------------------------------------------------


அடுத்தவர் குறைகளைப் பற்றி பேசித் திரிவோர்
தன் நிறைவை ஏனோ மறுத்து விடுகின்றார்கள்!

என்னிலுன்னை




அன்பு கொண்டவன் ஈன்றான்
அழகான அன்பளிப்பொன்று!
ரோசா சாறு பிழிந்த சுடிதாரில்
ராசா அவனன்பு கண்டு.....
ரம்ழானும் உவகையில் தானின்று!

ஆழிச் சார லோசையினில்
வழியொன்று திறக்கின்ற தென் கரையில்!
அழகான வுன் சிரிப்பை
ஔிந்து நின்று ரசிக்கின்றேன்!

மெலிந்து நீதான் போனாலென்ன
வலி தீர்க்கு முன்தன் னன்பு........
பலம்தான் எனக்கும் - உன்
குரல் பிழியும் ரசனை யென்
இராக்களின் பனித்தூறல்தான்!

இறைவா...
குறையில்லா எங்கள் அன்பு- இக்
குவனியில் குதுகலிக்க
அருள் தந்து விடு......

அன்பனுக்காய்



அன்பு!

என்
ஒவ்வொரு இரவுகளிலும்
உன் னன்பு காற்றில் நசிந்து
சுவாசமாய் விட்டுச் செல்கின்றது!

அன்பால்
நீ
கொடுத்த எண்ணங்கள்
தினமும்
என்னைச் செதுக்கிக் கொண்டிருக்கின்றன!

அன்பை
மாத்திரமே போதிக்கு முன்
வழிப் பயணத்தில் - என்
காலடித் தடங்கள்
சங்கமித்துக் கிடக்கின்றன!

அன்பு
நம்முள்
காதலாய்
நட்பாய்
பாசமாய்
வாழ்கின்றது!

ஒரு
குழந்தையாய்
குமரியாய்
மனைவியாய்
தாயாய்

உன்னைச் சுமக்கும் என்
ஒவ்வொரு பொழுதுகளும்
கரைந்தே போகின்றது - நம்
அன்பில்!

காதலுக்கு வயதில்லை
சொல்லித் தந்தாய் அழகாய்!

அதனாற்றான் என்னவோ- இப்
பிரபஞ்ச மேடை
காத்திருக்கின்றது
நம்மைச் சுமக்க - அதன்
எல்லைப்புள்ளி வரை!

- Jancy Caffoor-
      24.07.2014







2013/06/19

தந்தைக்கோர் கடிதம்


தந்தையே
உங்களுக்கான என் முதல் கவிதையிது!

நீங்கள்!

என் மன விடியலின்
மறக்கப்படாத சூரியன்!

என் இலக்கியப் பயணத்தின்
முன்னோடிச் சுவடு!

வெம்மையாய்
தென்றலாய்
குழந்தையாய்

உங்களுக்குள்
எத்தனை பண்பு முகங்கள்!

தந்தையே

உங்கள் பிடிவாதமும் இறுக்கமும்
முன் கோபங்களும்
என்னை அழ வைத்தாலும் கூட

நீங்கள் ஓவியராக
நடிகராக
எழுத்தாளராக
பாடகராக
பொறியியலாளராக
வைத்தியராக
அதிபராக
எல்லாம் தெரிந்தவராக

உங்கள் அறிவாற்றல் கண்டு
பிரமித்த பல கணங்கள் - இன்னும்
நெஞ்சின் பதிவுகளாகிக் கனக்கின்றன!

மழலைப் பருவத்தில்
உங்கள் தோளேற்றி பாட்டிசைத்து
 தூங்கவைத்த அந்தக் கணங்கள்
இன்னும் ஏக்கத்தில் கசிகின்றன!

என் வாழ்க்கைச் சாலையில்
நீங்கள் பரப்பிச் சென்ற அனுபவங்கள்தான்
இன்று
இணையம் வரை  - என்
முகவரியாகி நிற்கின்றது!

என் கையெழுத்து அழகாம்!
சூழவுள்ளோர் புகழுரைக்கையில்
தந்தையே
நானறிவேன்
என் எழுத்துக்களின் ஆதாரம்  உங்கள்
நிறமூர்த்தங்கள்தானே!

நீங்கள்
வித்தியாசமான தந்தை
கண்டிப்பான தந்தை
இருந்தும்
உங்கள் நெகிழ்வுகளிலெல்லாம்
பனித்துளிகளாய் படர்ந்து கிடக்கின்றது பாசம்!

என் ஒவ்வொரு நகர்வையும்
கண்காணிக்கும் உங்கள் பார்வைகள்
என் வாழ்வைப் பாதுகாக்கும்
 சட்டவேலிகள்!

கல்வி
உங்கள் வழிகாட்டலில் நான் பெற்ற வரம்!
தைரியம்
நீங்கள் எனக்கூட்டிய ஊட்டம்!
தன்னம்பிக்கை
உங்கள் அனுபவங்களால் கிடைத்த வெகுமதி!

வாப்பா!
அழகான மொழிதான் அன்பை உணர்கையில்!
தந்தை
சிந்தைக்கு பூட்டப்பட்ட பாதுகாப்புத்தான்!

பெண்ணடிமைத்தனத்தில் உருளாமல்
"ஜான்சி ராணியாய்" நான் வாழ
நீங்கள் காணும்  கனவுகள்
இப்பொழுதுதான் மெல்ல விரிகின்றன
என் நிஜப்படுத்தலில்!

நாட்கள் உதிர்கின்றன
தேகமும் நோய்க்குள் கரைகின்றன
வாப்பா
உங்கள் ஆரோக்கியம் தளிர்த்திட
பிரார்த்திக்கின்றேன் வல்லோனிடம்!

போலியான இவ்வுலகில்
வேலியாய் பொய்மைகள்!
இருந்தும்
பெற்றவர்கள் உங்கள் உண்மையன்பில்
என்றும்
நெகிழ்ந்து கிடக்கும் பாச மகளாய் நான்!

- Jancy Caffoor-
      19.06.2014