About Me

2014/07/25

முகநூல்த் துளிகள் - 3




தோற்றுப் போகும் கணங்களில்
தொற்றிக் கொள்ளும் கண்ணீர் - நம்
வெற்றிப் பாதைக்காகத் தௌிக்கப்படும்
பன்னீர்!

-----------------------------------------------------------


நேற்றைய பொழுதுகளில்....
உன் தரிசனமின்றி
வெறிச்சோடிப் போன என் பக்கங்கள்

இன்று..

கைகுலுக்கின்றன புன்னகையுடன்
உன் மீள் வரவுக்காய்!
-----------------------------------------------------------


உன் பலமெல்லாம்
என் மீதான அன்பால்....
குழந்தைத்தனமாகின்றது!

உன் .....
குழந்தைத்தனமும்
குறும்புத்தனமும்

நான் ரசிக்கும் கவிதைகள்!
----------------------------------------------------------------------------


வாய்ப்புக்கள்....!

நம் வீட்டு வாசற்படிகளல்ல நமக்காக எப்போதும் காத்திருக்க..
வந்து போகும் முகிற் கூட்டங்கள்!!

வாய்ப்புக்களை நாம் தவற விடும்போது நமது முன்னேற்றங்களும் பின்னோக்கி விடுகின்றன..

எனவே .......

வாய்ப்புக்களை நாம் தவற விட்டாலும்கூட, நல்ல வாய்ப்புக்கள் நம்மைத் தேடி மீண்டும் மீண்டும் வரும்போது, அதனைப் பற்றிப் பிடித்தல் வேண்டும்...

-----------------------------------------------------------------------------


பெண் ஓர் புத்தகம்...
அவளிடம் பல உணர்ச்சிப் பக்கங்கள்!
அவற்றை பரிவுடன் வாசித்து புரிந்து கொள்ளும் ஆண்களாலேயே
பெண் மனதின் அன்பை வெல்ல முடிகின்றது!

----------------------------------------------------------------------------



ஆழ்மனதின் உணர்ச்சிகளை வௌிப்படுத்த வார்த்தைகள் தேவையில்லை. கண்ணீரே போதும்!

------------------------------------------------------------------------------


இதயத்தை திறந்து வைக்கும்போதுதான் பிறரது உண்மையான அன்பை உணர முடிகின்றது..உண்மையான அன்பானது குற்றத்தையும், குறைகளையும் ஆராயாமல் அவற்றைக் களைந்து விடும்...



சுகந்திரம்



என் குருவிக்கூடு
தினமும் கல்லெறியப்படுகின்றது

தும்புகள் சிதறி
இரத்தம் சிந்துவன குருவிகள் மட்டுமல்ல
அடைக்கலம் காத்த என்
நெஞ்சும்தான்!

அடுத்தவர்
கண்ணீர் ஈரம் உணராமலே
விசம் தடவும் சிலர் வார்த்தைகள்

சுய தீர்ப்பாய் மொழிகின்றது
குருவிகளின் உயிரோடு!

அந்தோ

குருவிகள் குற்றுயிராய் - நானோ
அருவியாய் நீரூற்றும்
விழிகளோடு!

விடுதலை
தொலைந்து போன  வாழ்வில்
விடியல் மட்டும் வந்து வந்து
போகின்றது
பிரயோசனமின்றி இரவைக் கரைக்க!


- Jancy Caffoor-
      25.07.2014

காஸா


கண்ணீர்த் தணலில்
பற்றி எரிகின்றது காஸா!
பாலஸ்தீனமோ
பயங்கரவாதத் திகிலில்!

அனல் பறக்கும் சிலிப்பர்
குண்டுகளும்
கறை படிந்த குருதித் துளிகளும்

இங்கு
சரித்திரமெழுதும் எழுத்தாணியாய்
தரித்து நிற்கின்றது
மரண ஓலங்களின் சுருதியில்!

முதியோர்களும்
பாவைகளும்
பால் மணம் மாறா பாலகர்களும்
ஈமானியங்களும்

ஓலமிடும் அழுகுரல்களால்
காஸா
காணாமல் போய்க் கொண்டிருக்கின்றது
சில நாட்களாய்!

பயங்கரவாதம் அனல் கக்கும்
அல்லாஹ்வின் வீட்டைக் காக்க
உம்மத்துக்கள்
மௌத்துக்களால்
உரமாகிக் கொண்டிருக்கின்றனர்!

யா ரப்பே...!

தணலாய் கொதிக்கின்றது - இப்
பசுமைபூமி!
விடிவு தேடி
விட்டில்களாய் நசுங்கிப் போன - எம்

காஸா உறவுகளோ
ஷகீதாகி
உன் வசமாக!

காலம் ஓடிக் கொண்டுதானிருக்கின்றது
நாமோ
கண்ணீருடன் அருள் வேண்டி
நிற்கின்றோம் - அம்
மக்களின் துயர் துடைக்க!

எல்லாம் வல்ல அல்லாஹ்வே!
மனதில் ஈரம் கசிய - எம்
துஆக்கள் உன்னிடத்திலே
தரித்து நிற்கின்றன

அனலோடு
அல்லல் கண்ட அம்மக்களுக்கு
கண்ணியமான சுவர்க்கம் தந்து விடு!
மறுமையாவது வாசமாகட்டும்!

- Jancy Caffoor-
      25.07.2014

முகநூல் துளிகள் - 2




ஆழ்ந்த அன்பும் பிரியக்கூடும்
ஆறடிக்குள் அடங்கும் மெய்க்கூட்டில்!

பிரிவென்பது......
பரிவில்லாத மனதின் ஆரவாரிப்பு!
------------------------------------------------------------------------------

கசப்பான கடந்த காலம் என்பது கசக்கப்பட்ட காகிதம் - அவை
மறதிக் கூடைக்குள் விழ வேண்டிய குப்பைகள்!
தூசு தட்டி சுகம் விசாரித்தால் - அவை
லேசான மனதை இரும்பாக்கி விடும்!

இரும்பு துருப்பிடித்தால்..
அருமையான உறவுகளும் தொலைந்து போகும்!

----------------------------------------------------------------------------

சிறகு விரிக்கும் வண்ணத்தி
சிறைப்படும் பூவில்தான்...
சுவையான மகரந்தம்!

வாழ்விலும்....
உறவுகளின் சிறையில்
சுமையான சுகங்கள்!

கோபமும் பாசமும்...
விட்டுக்கொடுப்பும் வீம்பும்...
பொறுமையும் பிரிவும்

அவற்றுள் சில உணர்வுத்துளிகள்!

-------------------------------------------------------------------------


நீர்க்குமிழி வாழ்க்கையைத் தேடிப் போகும்போதுதான் கானல் நீராய் ஆசைகளும் எதிர்பார்ப்புக்களும் எட்டிப் பார்க்கின்றன. ஏக்கங்களுடன் அவற்றை தொட்டுவிடத் துடிக்கின்றோம்...

அந்தோ.....

என்ன பரிதாபம்...

உடைந்து விடுவது வாழ்க்கையல்ல...அந்த வாழ்க்கையை நேசிக்கும் மனதுதான்.....

காலம் சிலருக்கு வசந்தங்களை அன்பளிப்பாக்குகின்றது. சிலருக்கோ வெறும் துன்பங்களை மட்டுமே!

ஆனால்....

வாழத்தான் வேண்டும்..துயர முடிவு தெரிந்தாலும் கூட முன்னேற சிறுதுளியாவது தன்னம்பிக்கை இருந்தால் போதும்!

-------------------------------------------------------------------------

கேட்டுப் பெறுவதல்ல உண்மை அன்பு
தானாய் கிடைப்பது!
மனம் வருந்தச் செய்வதல்ல உண்மை அன்பு
மன வருத்தங்களைக் குறைப்பது!
காலம் சிதைப்பதல்ல உண்மை அன்பு
காணா விட்டாலும் தேடித் துடிப்பது!
வாழ்க்கை வெறுக்கச் செய்வதல்ல உண்மை அன்பு
அழிந்து போகும் அன்பை மீட்டித் தருவது!