About Me

2014/09/01

யாழ் இந்து மகளிர் கல்லூரி



ஞாபக டயறி
--------------------
பாடசாலைப் பருவம்...

ஒவ்வொரு மனித வாழ்விலும் மறக்கமுடியாத கூடம். ஏனெனில் அங்குள்ள கட்டிடங்கள் கூட பசுமையை அழகாக எடுத்துக்காட்டும்.

யாழ் இந்து மகளிர் கல்லூரி

எங்கள் வீட்டிலிருந்து அரை மணித்தியாலம் பயணிக்க வேண்டிய தூரம். அப்போது ஏறக்குறைய 3500 மாணவிகள் கற்றுக் கொண்டிருந்தார்கள். பாடசாலை தூரம் என்றாலும்கூட, தந்தை நல்லூர் கல்வித்திணைக்களத்தில் இணைப்புப் பெற்றிருந்ததால் என்னையும் கதீஜா மகா வித்தியாலயத்திலிருந்து அங்கு இடமாற்றினார்கள். 4ம் வகுப்பு முதல் க.பொ.த உயர்தரம் விஞ்ஞானப் பிரிவு வரை என்னைத் தாங்கிய என் பாடசாலையது.

இப்படத்தை சகோதரி ஒருவரின் முகநூலில் பார்த்ததும் அந்நாட்கள் நினைவுக்கு வருகின்றன...கட்டிடங்கள், கற்றுத் தந்தவர்கள், பள்ளித் தோழிகள்...

என வரிசை வரிசையாக கண்முன்னால் ஞாபகங்களைத் தொட்டபடி!

வாசல் கேற்றைத் தாண்டிச் சென்றதும் இடது பக்கமாக பெரிய பிரதான மண்டபம். அப்பாடசாலைக் காணியை வழங்கிய விசாலாட்சி அம்மையார் அவர்களின் புகைப்படத்துடன் காட்சியளிக்கும்கூடம்!

நான் அகில இலங்கை ஹிஜ்ரா கட்டுரைப் போட்டியில் முதலிடம் பெற்றதால் அதிபர் இராமநாதன் அவர்கள் என்னுடன் மிகவும் அன்பாக இருந்தார். அதனால் அடிக்கடி அதிபர் அலுவலகம் எனக்கும் பரிச்சயமானது. 
அதிபர்.....
மிடுக்கான தோற்றம்... 
அவரது சேலைத் தலைப்பை தன் வலது கையில் சுற்றியவாறு கையில் பிரம்புடன் வரும் காட்சியை பார்த்தால் கைகளில் நடுக்கத்துடன் மனதில் பீதியெழ வகுப்புக்குள் ஓடுவோம்..

அப்போது சரஸ்வதி, லக்‌ஷ்மி, ரதி, பார்வதி, அருந்ததி எனும் பெண் தெய்வங்களைக் கொண்ட இல்லங்கள் இருந்தன. விளையாட்டுப் போட்டிகளின்போது நான் என் அருந்ததி இல்லம், மஞ்சள் நிறம். பாடசாலையை விட்டு விலகும்வரை என் இல்லம் ஒன்றாகாவே இருந்தது.

அப்போது யாழ்ப்பாணத்தில் புகையிரதம் தடையின்றி ஓடிய காலம். எமக்கு இரு நேரப் பாடசாலை. மதியம் உணவுக்காக இடைவேளை முடிந்து மணி அடிக்கும் நேரம் சுக்கு பக்கு சப்தத்தில் யாழ்தேவி புகையிரதம் எம் பாடசாலையைத் தாண்டிச் செல்லும்.....

மைதானம் அருகே சிறு பிள்ளையார் கோவில் இருந்தது. நான் ரமழான் மாதங்களில் நோன்பைப் பிடித்தவாறு அக்கோவிலுக்கு அருகே இருக்கும் மர நிழலில் ஓய்வெடுத்துக் கொள்வேன்.

பிரதான மண்டபத்துடன் தொடர்புடையதாக மேல் மாடியில் பெரிய நூலகம் அமைந்திருந்தது, அம்புலி மாமா, நட்சத்திர மாமா படித்த ஞாபகம் என் நெஞ்சுக்குள்!

பிரதான மண்டபத்துடன் தொடர்புடையதாகக் காணப்பட்ட 4 விஞ்ஞான ஆய்வுகூடங்கள்  உயிரியல், தாவரவியல், இரசாயனவியல், பௌதிகவியலுக்காக தாங்கிக் கொண்டன. 3 பிரிவுகளைக் கொண்ட எங்கள் உயர்தர விஞ்ஞானப் பிரிவின் வகுப்புக் கட்டிடச் சுவருக்குள் ஔிந்திருக்கும் எங்கள் லொள்ளுகளும் பகிடிகளும் இன்றும் காதுகளுக்குள் கசிந்தவாறே இருக்கின்றன.

அப்போதே எனக்கும் இலக்கிய ஈடுபாடு இருந்ததால் விஞ்ஞான மன்றத்தின் செயலாளராகவும் செயற்பட்டேன். அதுமாத்திரமல்ல சாரணியத்திலும் மாலை நேரப் பயிற்சி மனதுக்கு இதமானது.

மாணவ விடுதி அருகே பெரிய விவசாயத் தோட்டம், நாங்கள் விவசாயம் கற்றதால் சிவகுருநாதன் மிஸ் அதில் விளையும் மரக்கறி, பழங்களை எங்களுக்கே விற்பார். பெரிய கொய்யாப்பழம், திராட்சைப் பழங்கள் நான் அடிக்கடி ருசித்தவை.

வகுப்புகளுக்குள் நுழைய முன்னர் சைக்கிள் தரிப்பிடம் இருக்கும். நீல நிற சொப்பர் சைக்கிள் எனது அடையாளம். பாடசாலை நிறைவுற்றதும் சைக்கிள்களை ஒன்றன்பின் ஒன்றாக உருட்டிச் சென்ற அந்நாட்கள்...ஒழுக்கம் கற்றுத்தந்த சுவடுகள்!

இவை என் கால்கள் பதிந்த சில இடங்கள்தான்...

இராமநாதன் அதிபர், நாகரத்தினம் அதிபர், துரைராஜா விலங்கியல் மிஸ், குணரத்னம் விஞ்ஞான மிஸ், , முத்துலிங்கம் கணித மிஸ், ரதி விளையாட்டு மிஸ், ஐயூப் விவசாய மிஸ், இராமநாதன் தாவரவியல் மிஸ், பரமநாதன் மிஸ், குணராசா மிஸ் , சித்திரம் கணகசாபாவதி மிஸ் எனும் அந்த நீண்ட பட்டியல் தொடர்கின்றது..இவர்களுள் பலர் இன்று உயிருடன் இல்லை.

இவர்களைப் போலவே பள்ளித் தோழமைகளும் என் நினைவில்..

ஜிற்னீஸ், அன்பரசி, மஞ்சுளா, சசிகலா, விஜி, சாந்தா, கீதா, புஷ்பலதா, யசோதா, சுஜாதா, ஜெய கௌரி, கவிதா, லோகநாயகி, இளமதி, உஷா காந்தி, சந்திரிகா  எனும் மறக்க முடியா முகங்களாய்! இவர்களுள் என் நெருங்கிய தோழியாய் அதிக காலம் என் குடும்பத்துடனும் தொடர்புகளைப் பேணியவர் ஜிற்னீஸ்..

இவர்களுள் சிலர் வீட்டுத தலைவிகளாகவும், சிலர் உயர் அரச அதிகாரிகளாகவும், வேறு அரச ஊழியர்களாகவும் இருக்கின்றார்கள். யாழ்ப்பாணத்தை விட்டு இடம்பெயர்ந்ததுடன் இவர்களின் பெயர்களைத் தவிர வேறெதும் தெரியாத நட்பாய் நான்!

ஒவ்வொரு எமது பெருநாள் நாட்களில் என் நண்பிகள் வீட்டுக்கு விருந்துக்கு வருவார்கள். அவ்வாறே அவர்களது தீபாவளி, பொங்கல் நாட்களுக்கு மறக்காமல் எனக்கும் வாழ்த்தட்டைகள் அனுப்புவார்கள்.

இவர்களுடன் என் பாடசாலை வழித் துணையாய் சைக்கிளில் வரும் றினோசா, றிஸ்வியா.....

இப்பசுமைகளுடன் அப்பாடசாலை காலத்தில் சந்தித்த யுத்த பீதிகளும் கண்முன்னால் விழுகின்றன...

இப்பாடசாலைக் காலத்தில்தான் யாழ்ப்பாணத்தில் யுத்த மோதல்கள் அதிகமாக இடம்பெற்றதால். எமது கற்றலும் அச்சத்துடன் கழிய ஆரம்பித்தது. இயக்கங்களுக்கிடையில் மோதல்களும் அதிகரித்து அதிகமான மனித வேட்டைகளும் இடம்பெற்று அவை மக்கள் பார்வைக்காக வீதிகளில் தொங்க விடப்பட்டன.

எனவே என் நண்பிகளுடன் தொடர்புபட்ட நிகழ்வுகளாக சாமத்திய வீடு, மரண வீடு என்பவற்றிலும் எங்கள் கால்கள் பதியத் தொடங்கின..

மேலே ஹெலி சுழன்று சுழன்று துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்துக் கொண்டிருக்கும் நேரம் நாங்கள், பாதையில் மறைந்து, விரைந்து துஆ பிரார்த்தனைகளுடன் வீட்டுக்கு ஒடி வந்த அந்நாட்களும் லேசாய் ஞாபகத்தில் கசிகின்றன...

என் பள்ளித் தோழிகளை மீண்டும் சந்திப்பேனா.......?
வினா மட்டும் நெஞ்சுக்குள் தொக்கி நிற்கின்றது!

2014/08/31

வர்ணக்கலவை



என் தனிமையைப் பொசுக்குகின்றேன்..
தாவி வருகின்ற நிமிடத்துளிகளில்....
வர்ணக்கலவையாய்
கரைந்தே கிடக்கின்றன வுன்
நினைவுகள்!

---------------------------------------------------------------------------------



ஆண் பிள்ளைகள் தவறு செய்யும்போதெல்லாம் தட்டிக் கேட்காத தாய்மார்கள் தம் பிள்ளைகளின் தன்னிச்சையான போக்கிற்கு தாமே வழியமைத்துக் கொடுக்கின்றார்கள்...!

நினைவுகள்


தூரங்கள்
துரத்திக் கொண்டுதான் இருக்கின்றன
அதனால்தானோ
இன்னும்- எங்கள்
விரல்கள் தொட்டுக் கொள்ளவில்லை
உரிமையுடன்!

சூரியத்தீயாய்
நீ
வந்துபோனாலும் கூட
குளிர்நிலாவாய்தான்
நான்
காத்துக் கொண்டிருக்கின்றேன்!

ஐயத்தில்
நீ
அடிக்கடி உறையும் போதெல்லாம்
அச்சத்தின் தொடுபுள்ளியில் நான்
விழுந்து கிடக்கின்றேன்!

நீ
என்னை
மறுத்து போனாலும்கூட
மறந்திட வுன்னை - என்
நினைவுகள் முயல்வதில்லை!

அடுத்தவர் பார்வையில்
திருத்திக் கொள்ள விரும்பா
தவறுகளாய் - நம்
அன்பும் இருக்கட்டும்!

அதனால்தான்

திரும்பிப் போக விரும்பாத பாதையாய்
விரும்பிக் கிடக்கின்றேனுன்
இருண்ட நிழலுக்குள்!


- Jancy Caffoor-
 31.08.2014

அழகு.....



விடா முயற்சி
பிடிவாதம்
அழகு
மென்மை
புன்னகை
அன்பு
கவலை களறியா வாழ்க்கை

இவை குழந்தைகளின் வார்ப்புக்கள்!
உள்ளத்தின் ஊன் கரைத்தால்
இவை யாவும் தாராளமாய் எமக்கும் கிடைக்கும்!
-------------------------------------------------------------------------------------

பெரும்பாலும்...
விட்டுக்கொடுப்புத்தான்
உறவுகளை முறித்து விடாத ஆதாரம்!

ஆனாலும்

அவசரமான வாழ்க்கைக் கோலத்தில்
பலர்
அதனை பின்பற்றாமல் இருப்பதனால்
முறிந்து விடுகின்றது
அன்பின் நம்பிக்கை!


- Jancy Caffoor -