About Me

2015/01/04

அல்லாஹ்வின் அருட்கொடை


ரபியுல் அவ்வல் பிறை 12
அவனியெங்கும் பூத்தூறல்
அண்ணல் நபி பூ முகங் காண!

இருளின் வெம்மையில் மானிடா்
மருண்டெழுந்த நேரம்
திருமறையின் வாசகங்கள்
மாநபியின் மாண்பின் சுவாசமாய்!

ஜாஹிலியா  துகிலுரித்த நாட்களில்
அருள் மொழியின் சுவடுகளாய்
ஔிப் பிராவகம்
அரபுத் தேசமதில்!

வஹி
அஹிம்சையின் ஆதாரம்!
அகிலத்தின் வாழ்க்கைக் கையேடு!
இவ்வுலகின் அறியாமை
பிழிந்தழிக்கும் அதிசயம்!

இஸ்லாம்
முஸ்லிம்களின் முகவரிகள்
தீன் அமுதூட்டலில்
இவ் வையகத்தை நிமிர்த்திட
உம்மி நபியின்  உன்னதங்களை
உரைக்கும் உரைகல்!

எம் பெருமானார் அவதரித்த
இந்நாளில்
முழங்கட்டுமெங்கும் அவரற்புதங்கள்!
சந்தனம் கமழும் நம் ஸலாம்
மொழிவில்
எந்தன் நபியின் கண்ணியம் மிளிரட்டும்!

அல்லாஹ்வின் அருட்கொடை
அண்ணல் நபியவர்கள் பிறந்த
இன்னாளில்
நல்லமல்கள் செய்தே
வல்ல அல்லாஹ்வின் அருள் பெறுவோமே!


-Jancy Caffoor -
 01.04.2015

ஆரோ வருகினம்


நேற்று காலையில இருந்தே வாசல்ல காகம் கரைஞ்சிட்டே இருந்தது.

"சூ  சூ"

துரத்தினாலும் போகல. அதப் பார்த்து அஸ்கா கேட்டாள்.

"ஏன் காகம் நம்ம வீட்டப் பார்த்து கரையுதுனு"

நானும் பதில் சொல்லனும் எனும் கடமை உணர்ச்சியில சொன்னேன்

"காகம் கரைஞ்சா யாரும் வீட்டுக்கு வருவாங்களாம்"

யாரோ நான் சின்னப்புள்ளயில சொன்னது இன்னும் ஞாபகத்தில கரைய சொன்னேன்
இந்தக் காலத்து புள்ளங்கள சமாளிக்கிறதே ரொம்பக் கஷ்டம்
பட் பட்டுனு அடுத்தடுத்த கேள்விகள்
யாரு? எப்போ? அப்படினு தொடர்ந்த கேள்வி கடைசிக் கேள்வியோட முடிஞ்சுது இப்படி

"அப்ப யாரும் வராட்டி"

சந்தேகத்தோடு கேட்டாள்.
நானும் சொன்னேன்.

"யாரும் வராட்டி  இனி காகம் கரைஞ்சா யாரும் வரமாட்டாங்க என்று நினைப்போம் சரியா"

நான் சொன்னதைக் கேட்டு மெல்லத்  தலையாட்டினாள்.

பி.கு
-------
இனி யாரும் காகம் கரைந்தால் யாரும் வருவாங்க என்று சொன்னால் நம்பவே மாட்டேன்.நீங்க!

(என்னதான் நாம் விஞ்ஞான உலகத்தில நம்மைப் பதித்தாலும்கூட இப்படியான மூடநம்பிக்கைகள், எதிர்வுகூறல்களை மனசும் நிராகரிக்காமல் நம்பிக் கெட்டுப்போகுது)


-Jancy Caffoor-
 01.04.2015

2014/12/31

பேசும் வரிகள்



நல்ல விசயங்களைச் சொல்லும்போது காது கேட்காத பலர் அர்த்தமற்ற விடயங்களுக்கு ஆவலோடு வாய் பிளந்து நிற்பார்கள். இங்கு உண்மை என்பதை விட சுவாரஸியமான பேச்சாற்றலுக்குத்தான் மதிப்பதிகம்!
சுவாரஸியம் பிறர்
மனதைக் கவரும் ரசம்!
------------------------------------------------------------------------------------------

வேண்டாமென்றேன்
வேண்டுமென்றான்!
வேண்டுமென்றேன்
வேண்டாமென்றான்!!
முரண்பாடுகள் தலைகாட்டும்போதெல்லாம்
சலனப்படும் மனசு - மெல்லத்
தட்டுகின்றது அன்பை!
அன்பின் வீரியத்தில் காலாவதியான பிடிவாதங்கள்
உடன்பாடாகி....
உருகியோடுவது கூட
இயற்கையின் தழுவல்கள்தானே!
--------------------------------------------------------------------------------

நம்பிக்கை மனதில் இருக்கும்வரை
இருட்டுக்கு அஞ்சவில்லை.............
இன்று போனால் என்ன
நாளை விடியல் வருமென்ற நம்பிக்கையில்...
காலங்களைக் கடந்து செல்லத் தயார்!
2015..........
எனக்கு சவாலான ஆண்டு !
பிரார்த்தியுங்கள் என் தன்னம்பிக்கை அதிகரிக்கட்டும்!
போராட்டங்கள் முரசு கொட்டுமென் வாழ்வில்
இத்தரிப்பிடம் ................
ஓரளவாவது அமைதி தரட்டும்!



- Ms. Jancy Caffoor -
      31.12.2014

நிலாக்கள்




வீடு என்பது வெறும் சிமெந்தும் கற்களும் குவித்துக் கட்டப்பட்ட உயிரற்ற இடமல்ல..உயிர் ஜீவன்கள் நடமாடும் இல்லம். அதிலும் வீடுகளில் சின்னப்பிள்ளைகள் இருந்துவிட்டால் அமைதி, வெறுமையங்கு காணமல் போய்விடும். நாம் நம்மைப் பற்றிச் சிந்திப்பதற்கே அங்கு நேரமில்லை.. அவர்களின் செல்லக் குழப்படிகள் நம்மை சில நேரம் ஆத்திரமூட்டினாலும்கூட, நமது கோபத்தை மறந்தவர்களாக அப்பிஞ்சுகள் நம்மைத் தேடி வந்து கொஞ்சு மழலையில் தமது அன்பை வௌிப்படுத்தும்போது நாமும் எல்லாவற்றையும் மறந்துதான் போகின்றோம்.

சின்ன நிலாக்கள்
அழகான அன்பின் ஸ்பரிசம்....

அனுபவிக்கும்போது ஆயிரம் விண்மீன்கள்

சிறகடித்திறங்கும் நம் மில்லத்தில் ஔி கொடுக்க!

- Jancy Caffoor-
  30.12.2014

2015


2014 வருடத்தின் கடைசி நாட்களில் நாம்...

விடிந்தால் விடியலின் பசுமையில் புதிதாகப் பிறக்கும் 2015.....

நாட்கள் எவ்வளவு வேகமாகப் பறக்கின்றன. கண்மூடித் திறப்பதற்குள் 2014 நிறைவுறும் தருணம்....

2014 ன் காலடிச் சுவட்டினுள் எத்தனை நிகழ்வுகளை நாம் ஒவ்வொருவரும் சந்தித்திருக்கின்றோம்!

அவை இன்பமாக, துன்பமாக, ஏக்கமாக, எதிர்பார்ப்பாக. இலட்சியமாக. வெற்றியாக. தோல்வியாக. முரண்பாடாக நம்மைப் பின்தொடர்ந்திருக்கின்றன...

வாழ்க்கை என்பது அழகான கனவல்ல...முட்களும் மலர்களும் நிறைந்த பயணப்பாதை! அப்பாதைவழிப் பயணத்தில் நாம் கண்டெடுத்த அனுபவங்கள்தான் நம்மைப் பதப்படுத்தி வழிப்படுத்தி பயணத்தின் போக்கை சீர்படுத்துகின்றன என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

இந்த வருடத்தின் கடைசிநாளில்.....

நானும் என்னை ஒருகணம் புரட்டிப் பார்க்கின்றேன். என் வாழ்வில் நடைபெற்ற அனைத்தையும் ஒரு கணம் ஞாபகச்சுழற்சியில் ஓடவிட்டு, நல்லவற்றை மட்டும் ஏந்திக் கொண்டு 2015ல் நடைபயில தயாராகிக் கொண்டு விட்டேன்....மனக் கஷ்டங்கள் தந்த தீயவை மறதிக்குள் கருகிப் போகட்டும்!

இன்ஷா அல்லாஹ்!

மாற்றங்கள்தான் வாழ்க்கை. மாற்றங்களை நாம் ஏற்றுக் கொள்ளும்போதுதான் ஏமாற்றங்களைத் தவிர்க்கின்றோம்..

இந்த 2014ல் என் வெற்றிகளுக்காகப் பிரார்த்தித்தும் மனச் சங்கட காலங்களில் எனக்கு நம்பிக்கையூட்டி வழிப்படுத்திய  அனைத்துள்ளங்களுக்கும் நன்றிகள்...

அஸ்கா....

2015ல் தனது கல்வி வாழ்வைத் தொடங்கவுள்ளாள்...அரும்பொன்று மெல்ல இதழ் விரிக்கும் அந்த அழகும் பசுமையும் நான் ரசிக்க வேண்டும். அல்ஹம்துலில்லாஹ்!

மனநெருக்கடி நிலையில் என் ரணங்களுக்கு ஒத்தடமாகவிருந்த என் தாயையும் இந்த வருடத்தில் மட்டுமல்ல என்றும் மறக்க முடியாது. என் தாயின் ஆரோக்கியத்திற்கும் துஆ கேட்கின்றேன்..

நானும், என்னைச் சுற்றியுள்ள உறவுகள், என்னை நேசிக்கும் நட்புக்கள் யாவரும் இப்புத்தாண்டில் ஈமானிய எண்ணங்களுடன் மனநிம்மதியும், வெற்றிகளும் பெற்று வாழ வேண்டும் எனும் பிரார்த்தனைகளை அல்லாஹூ தஆலாவிடம் சமர்ப்பித்தவளாக...

என் மனசுக்குள் இன்னும் சிறுசிறு துளிகளாய் சிதறிக் கொண்டிருக்கின்ற எண்ணங்கள் நிறைவேற்றப்படுகின்ற தளமாய்  2015 அமையட்டும் எனும் பிரார்த்தனை கலந்த எதிர்பார்ப்புடன் நாளைய விடியலுக்காக காத்துக்கிடக்கின்றேன்!

- Jancy Caffoor-
  30.12.2014