About Me

2014/12/31

2015


2014 வருடத்தின் கடைசி நாட்களில் நாம்...

விடிந்தால் விடியலின் பசுமையில் புதிதாகப் பிறக்கும் 2015.....

நாட்கள் எவ்வளவு வேகமாகப் பறக்கின்றன. கண்மூடித் திறப்பதற்குள் 2014 நிறைவுறும் தருணம்....

2014 ன் காலடிச் சுவட்டினுள் எத்தனை நிகழ்வுகளை நாம் ஒவ்வொருவரும் சந்தித்திருக்கின்றோம்!

அவை இன்பமாக, துன்பமாக, ஏக்கமாக, எதிர்பார்ப்பாக. இலட்சியமாக. வெற்றியாக. தோல்வியாக. முரண்பாடாக நம்மைப் பின்தொடர்ந்திருக்கின்றன...

வாழ்க்கை என்பது அழகான கனவல்ல...முட்களும் மலர்களும் நிறைந்த பயணப்பாதை! அப்பாதைவழிப் பயணத்தில் நாம் கண்டெடுத்த அனுபவங்கள்தான் நம்மைப் பதப்படுத்தி வழிப்படுத்தி பயணத்தின் போக்கை சீர்படுத்துகின்றன என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

இந்த வருடத்தின் கடைசிநாளில்.....

நானும் என்னை ஒருகணம் புரட்டிப் பார்க்கின்றேன். என் வாழ்வில் நடைபெற்ற அனைத்தையும் ஒரு கணம் ஞாபகச்சுழற்சியில் ஓடவிட்டு, நல்லவற்றை மட்டும் ஏந்திக் கொண்டு 2015ல் நடைபயில தயாராகிக் கொண்டு விட்டேன்....மனக் கஷ்டங்கள் தந்த தீயவை மறதிக்குள் கருகிப் போகட்டும்!

இன்ஷா அல்லாஹ்!

மாற்றங்கள்தான் வாழ்க்கை. மாற்றங்களை நாம் ஏற்றுக் கொள்ளும்போதுதான் ஏமாற்றங்களைத் தவிர்க்கின்றோம்..

இந்த 2014ல் என் வெற்றிகளுக்காகப் பிரார்த்தித்தும் மனச் சங்கட காலங்களில் எனக்கு நம்பிக்கையூட்டி வழிப்படுத்திய  அனைத்துள்ளங்களுக்கும் நன்றிகள்...

அஸ்கா....

2015ல் தனது கல்வி வாழ்வைத் தொடங்கவுள்ளாள்...அரும்பொன்று மெல்ல இதழ் விரிக்கும் அந்த அழகும் பசுமையும் நான் ரசிக்க வேண்டும். அல்ஹம்துலில்லாஹ்!

மனநெருக்கடி நிலையில் என் ரணங்களுக்கு ஒத்தடமாகவிருந்த என் தாயையும் இந்த வருடத்தில் மட்டுமல்ல என்றும் மறக்க முடியாது. என் தாயின் ஆரோக்கியத்திற்கும் துஆ கேட்கின்றேன்..

நானும், என்னைச் சுற்றியுள்ள உறவுகள், என்னை நேசிக்கும் நட்புக்கள் யாவரும் இப்புத்தாண்டில் ஈமானிய எண்ணங்களுடன் மனநிம்மதியும், வெற்றிகளும் பெற்று வாழ வேண்டும் எனும் பிரார்த்தனைகளை அல்லாஹூ தஆலாவிடம் சமர்ப்பித்தவளாக...

என் மனசுக்குள் இன்னும் சிறுசிறு துளிகளாய் சிதறிக் கொண்டிருக்கின்ற எண்ணங்கள் நிறைவேற்றப்படுகின்ற தளமாய்  2015 அமையட்டும் எனும் பிரார்த்தனை கலந்த எதிர்பார்ப்புடன் நாளைய விடியலுக்காக காத்துக்கிடக்கின்றேன்!

- Jancy Caffoor-
  30.12.2014

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!