About Me

2015/02/24

மறை வழியில் கல்வி



கல்வியின் மூலமாக பெற்றுக் கொள்ளப்படும் அறிவே மனித வாழ்வை வழி நடத்திச் செல்லும் காட்டியாகும். இவ்வறிவின் சிறப்பைக் கூறும் சில ஹதீஸ்களின் பொன் வரிகள் சில -

'ஒருவர் ஓர் அறிவைத் தேடி ஒரு பாதையில் சென்றால், அல்லாஹ் அதனைக் கொண்டு அவருக்கு சுவனம் செல்லும் ஒரு பாதையை இலகுபடுத்திக் கொடுக்கின்றான்.' (முஸ்லிம்)

''நிச்சயமாக அறிவைத் தேடிச் செல்பவனுக்கு, மலக்குகள் அவன் செய்யும் அவ்வேலையில் திருப்தியடைந்து தமது இறக்கைகளை விரிக்கின்றனர். அறிஞனுக்காக, நீரில் உள்ள மீன்கள் உட்பட, வானம் மற்றும் பூமியில் உள்ள அனைத்தும் பாவ மன்னிப்புக் கோருகின்றன. ஓர் 'ஆபித்' (வணக்கவாளிக்கு) முன்னால், ஓர் அறிஞனின் சிறப்பு, நட்சத்திரங்களுடன் ஒப்பிடும்போது சந்திரனுக்குள்ள சிறப்பைப் போன்றதாகும். மேலும், அறிஞர்கள் நபிமார்களின் வாரிசுகளாவர். நபிமார்கள் தங்க நாணயத்தையோ அல்லது வெள்ளி நாணயத்தையோ வாரிசாக விட்டுச் செல்லவில்லை. அவர்கள் வாரிசாக விட்டுச் சென்றதெல்லாம் அறிவையேயாகும். அதனைப் பெற்றுக் கொண்டவர் பெரும் பேற்றைப் பெற்றுக் கொண்டவராவர்.'' (அபூ த h வு த்  அஹ்மத்)

--------------------------------------------------------
குர்ஆன் என்னும் பெயர்

வானவர் ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலம், நபியவர்களுக்கு வல்லவன் அருளிய இந்த நன்மறைக்கு எத்தனையோ பெயர்கள் இருந்த போதிலும், இந்த மாமறையிலே பல இடங்களிலும்  குறிப்பிடப்படும் “குர்ஆன்” என்ற பெயரே சிறப்பு பெயராக விளங்கி வருகிறது

“குர்ஆன்” என்ற அரபிச் சொல்லுக்கு “ஓதப்பட்டது”, “ஓதக்கூடியது”, ஓதவேண்டியது என்று பொருள்படும். அண்ணல் நபி அவர்களுக்கு ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலமாக “ஓதப்பட்ட” இவ்வேதம், மனித சமுதாயம் தன் மேன்மையைக் கருதி “ஓதவேண்டியது” என்ற பொருளையே தன் பெயராகக் கொண்டிருப்பதும், இவ்வேதமே இவ்வுலகில் அதிகமான மக்களால் “ஓதப்படுவதும்” சிந்தித்து நயக்கத்தக்கதாக இருக்கிறது.

-------------------------------------------------------
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

ஒருவர் படுக்கைக்குச் சென்று தூங்கியப் பின், ஷைத்தான் அவர் தலைமாட்டில் 3 முடிச்சுகள் போட்டு, ஒவ்வொரு முடிச்சிலும் நீர் உம்மிடத்தில் தூங்கிக் கொண்டிரும்,உமக்கு இன்னும் இரவு இருக்கிறது, நன்றாகத் தூங்கும் என்று உளறுகிறான். அந்த அடியார் தூக்கத்திலிருந்து எழுந்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால், முதல் முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. பிறகு படுக்கையிலிருந்து உளு செய்தபின், இரண்டாவது முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. தொழுது விடுவாரேயானால், மூன்றாவது முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. எனவே அவர் அதிகாலையில் நல்ல மனத்துடன் சுறுசுறுப்போடு இருக்கிறார். இல்லை என்றால் கெட்ட எண்ணங்களோடு சோம்பல் கொண்டவராக இருக்கிறார்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழி)
நூல்கள் : புகாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், நஸயீ


- Jancy Caffoor-
  24.02.2015

பரீட்சைச் சுமை



இயற்கையோடு இணைந்து ஆரம்பக்கல்வியை அனுபவங்களாகப் பெற வேண்டிய பிள்ளைகளுக்கு பரீட்சைச் சுமையொன்று முதன்முதலாக ஐந்தாம் தரத்தில் புகுத்தப்படுகின்றது. பரீட்சை நெருங்கும்வரை ஒரே படிப்பு படிப்பு.......படிப்பு! பிள்ளைப் பருவத்தில் கிடைக்க வேண்டிய எல்லா இயல்புகளும் விளையாட்டுக்கள் உட்பட மறுக்கப்படுகின்றது. பெற்றோர்களும் தம்பிள்ளைகளின் ஐந்தரத்திற்கு கொடுக்கும் "அதி முக்கியத்துவத்தையும் கவனிப்பையும் ஏனைய வகுப்புக்கள் கற்கும் போது குறைத்து விடுகின்றார்கள்.

இப்பரீட்சை நிதியுதவி வழங்குவதற்காகவோ அல்லது பிரபல்யமான பாடசாலைகளுக்குச் செல்லவோ நடத்தப்படுகின்றது. பெரும்பாலும் பரீட்சையில் அதிகளவான சித்தி பெறுவது அரச ஊழியர்களின் அல்லது வசதி படைத்த பெற்றோர்களின் பிள்ளைகளே இவர்களுக்கு பிரபல்ய பாடசாலைகள் மட்டுமே கிடைக்கும்.

ஆனால் அரிதாக வறுமையோடு போராடிக் கொண்டு சித்தி பெற்ற மாணவர்கள் இந் நிதியால் பயனடைவதும் மறுப்பதிற்கில்லை. எப்படியோ இவ் ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சை நடத்துவது தொடர்பாக அரச மட்டத்தில் அடிக்கடி வாத, பிரதிவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்கள் இப்பரீட்சை 2016ம் ஆண்டிலிருந்து நடாத்தப்படாதென இன்று (19.12.2013) அறிவித்துள்ளார்.

- Jancy Caffoor-
  24.02.2015

ஜீன் ஜாக்ஸ் ரூஸோ (1712-1778)


கல்வியென்பது பல தத்துவங்களினடிப்படையில் முன்வைக்கப்படும் ஒரு ஒப்பந்தம். கல்வி பற்றிய சிந்தனைப்படுத்தலில் முக்கியமான ஒருவராக ஜீன் ஜாக்ஸ் ரூஸோ (1712-1778) போற்றப்படுகின்றார். இவர் தலைசிறந்த இயற்கை வாதியாகவும் சிந்தனைப் புரட்சியாளராகவும் விளங்கியவர் என்றும் விளங்கிக் கொண்டிருப்பவர்.

பிள்ளைகளின் சூழலில் பாதிதான் பாடசாலையில் கழிகின்றது. மிகுதி வீட்டில்தான். பெற்றோர் பிள்ளை பற்றிய உளவியலை அறியாதவர்களாக இருக்கும்போது பிள்ளையின் இயல்பான கற்றலை விளங்கிக் கொள்ளாதவர்களாக இருக்கின்றார்கள்.

இதோ ரூஸோவின் சில கருத்துக்கள்

பிள்ளைகள் இயற்கையின் போக்கில் வளர அனுமதிக்கப்பட வேண்டும், அவர்கள் இயற்கையோடு இணைந்து இயற்கையின் நியதிகளின் படி வாழ அனுமதிக்கப்பட வேண்டும்.

குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதை விட கல்வி பெறுவதற்கான நிலைக்கு அவர்களை ஆயத்தப்படுத்த வேண்டும். அதற்காக பிள்ளைகளிடம் பிரச்சினைகளைக் கூறுங்கள் அவர்களே அதற்கான தீர்வுகளைக் காணட்டும் என்றார்.

பிள்ளை வேறு, வளந்தோர் வேறு என்று விளக்கிய ரூஸோ இயற்கை சூழல், மனிதர்கள், பொருட்கள் போன்ற மூன்று ஊடகங்களினூடாகவும் பிள்ளைகள் கல்வியைப் பெறுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பிள்ளை தானாகவே கற்றல் - கற்பித்தலின்போது கற்றல் சாதனங்களினைப் பயன்படுத்தி பெறும் அனுபவம்சார் கல்விக்கு வலியுறுத்தும் ரூஸோவின் தத்துவத்தை நடைமுறைப்படுத்தும் பாடசாலைகளில் பிள்ளைகளின் விருப்பு வெறுப்பு மற்றும் திறமைக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது எனலாம்.

- Jancy Caffoor-
  24.02.2015

நிஜத்தின் நிழல்கள்


கல்வியைத் தேடுபவனாலேயே வாழ்க்கையையும் கற்றுக் கொள்ள முடிகின்றது. கற்ற கல்வியின் அளவீடுதான் பரீட்சை. பரீட்சை எனும் போது வயது பேதமின்றி எல்லோருக்கும் ஒரு பயம், முயற்சி, டென்ஷன் வருவது இயல்பு. அதிக சிரத்தையுடன்  கல்வியைக் கற்பவன் உயர்புள்ளிகளைப் பெறுவதில் தவறுவதில்லை.

ஆனால் 

பெரும்பாலான மாணவர்கள் எவ்விதமான முன்னாயத்தமுமின்றி திறமையான மாணவர்களிடம் காப்பியடிக்க தயாரானவர்களாகவும், வெற்றுப் பேப்பர்களை ஒப்படைக்கத் தயாரானவர்களாகவும் பரீட்சைக்கு செல்வதைப் பார்த்து வேதனை கலந்த வெட்கம்.

இவர்கள் கல்வியைப் பற்றி உணர ஆரம்பிக்கும்போது கல்வி  இவர்களை விட்டு விலகிப் போயிருக்கும் என்பது மட்டும் உண்மை!
-----------------------------------------

பாடசாலை வாழ்க்கையை யாராலும் மறக்க முடியாது. ஆனால் அதன் இனிமையை உணர்வது பாடசாலையை விட்டு விலகிச் செல்லும்போதுதான்.
மீட்கப்படும் ஞாபகங்கள் சில நேரம் சந்தோசத்திலும், சில நேரம் ஏக்கத்திலும் சில நேரம் கண்ணீரும் கலைந்து நிற்கும். ஏனெனில் பள்ளி வரும் தொட்டு நிற்கும் நட்பு அப்படிப்பட்டது....
-------------------------------------------
பாடசாலை என்பது ஒழுக்கமுள்ள சமுதாயத்தின் தோற்றுவாய்க்கான தளம். சகல பாடசாலைகளும் இதனைத்தான் கல்வி இலக்காகக் கொண்டு தமது செயற்பாடுகளை வகுக்கின்றன. ஆனால் துரதிஷ்டமாக சில ஒட்டைகள் விழுந்து விழுமியம் தளர்ந்த முரண்பாட்டுக் கூட்டங்களும் வௌியேறி விடுகின்றன. பாடசாலை வௌி மதில்கள் அழகாக பெயின்ட் பூசப்பட்டிருக்கும்போது அவற்றில் தமது பெயர்களையோ ஏதாவது செய்திகளையோ கிறுக்கி விட்டுச் செல்வது இந்தக் கூட்டம்தான். விளம்பரம் ஒட்டாதீர்கள் எனும் அறிவித்தல்களைக் கூடப் புறக்கணிப்பவர்களாக இவர்கள்.
-------------------------------------------
பாடசாலை என்பது அங்கு கற்கும் அனைத்து மாணவர்களும் பாதுகாக்க வேண்டிய நிறுவனம். அதன் வளங்கள் அவர்களின் கற்றலுக்காக பயன்படுத்தப்படும் சொத்து. ஆனால் சில மாணவர்கள் வளர்ந்த மாணவர்கள் பாதுகாக்க வேண்டிய இச்சொத்துக்களை சேதப்படுத்துவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. விளையாடும்போது யன்னல் கண்ணாடிகளை உடைப்பது, கதிரை, மேசைகளில் டிபெக்ஸால் கீறி நாசப்படுத்துவது, பெயின்ட் அடித்த சுவரில் தமது கால்களை உதைத்து அசுத்தப்படுத்துவது, கதிரை, மேசைகளை உடைப்பது இவையெல்லாம் ஆண் மாணவர்களிற் சிலர் செய்யும் சாதனைகள்.
-------------------------------------------

ஒரு பாடசாலையின் வளர்ச்சியின் தூண்கள் அதன் ஆசிரியர்கள்தான். இளைய ஆசிரியர்களிடம் வேகம் காணப்பட்டாலும் கூட அனுபவம் காணப்படுவது அதிக சேவைக்காலத்தைக் கொண்ட ஆசிரியர்களிடம். ஆனால் துரதிஷ்டவசமாக சேவைமூப்புக் கொண்ட ஆசிரியர்கள் பொதுவாக பாடசாலைகளிலிருந்து ஓரங்கட்டப்படுவது நடைமுறையாகக் காணப்படுகின்றது. இளைய ஆசிரியர் சமுதாயத்தின் கைகளில் பொறுப்புக்கள் வழங்கப்படுவது நல்ல விடயமே இருப்பினும் முதியவர்களை அலட்சியப்படுத்தி வழங்கப்படும் மலர்மாலைகள் சற்று சிந்திக்கத்தக்கது.
------------------------------------------

சமூகத்தினுள் நுழையும் ஓர் பிரஜையை நற்பண்புள்ளவனாக மாற்றும் பணியில், இலக்குகள் தீர்மானிக்கப்பட்டு கல்வி வழங்கும் பணியை பாடசாலைகள் மேற்கொண்டு வருகின்றன. எனினும் பெற்றோர், சமூகத்தினர் ஒத்துழைப்பின்றி பாடசாலைகள் தனித்து இக்குறிக்கோளை நிறைவேற்ற முடியாது.

ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு பெற்றோர் கொடுக்கும் ஊக்கம், அவர்கள் வகுப்பேற ஏற குறைந்து கொண்டே செல்கின்றது. மாணவர்களை வெறுமனே பாடசாலைக்கு அனுப்பாது அவர்கள் எந்தளவில் கற்றலில் ஈடுபாடு காட்டுகின்றார்கள் என்பதை கண்காணித்து வழிகாட்டும் பெற்றோர்களின் பிள்ளைகளே கரிசனத்துடன் கற்க ஆரம்பிக்கின்றார்கள்.

எனவே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கற்கும் ஆர்வம், ஊக்கத்தை மேற்பார்வை செய்து வழிகாட்டுவது கடமையாகும்.

- Jancy Caffoor-
  24.02.2015




குறும்பு - பாடசாலை நினைவு


நான் ஏ.எல். படிக்கிற நேரம் (12ம் வகுப்பு)
--------------------------------------
இடம்-  யாழ்ப்பாண இந்து மகளிர் கல்லூரி
வகுப்பு - கல்வி பொது தராதர உயர் தரம் விஞ்ஞானம் 

ஒரு நாள் Zoology Teacher வகுப்புக்கு வந்தார். அவர்  எப்பவும் மூக்குக் கண்ணாடி போட்டிருப்பார்.   கண்டிப்பான ரீச்சர்.

 ஆனால் நோட்ஸ் நிறையத் தருவதால் ரியூசன் கிளாஸ் போகின்ற  சில பேருக்கு அம் மிஸ்ஸின் பாடத்தை மிஸ் பண்ணத்தான் ஆசை. பயத்தில அரை குறையாக எழுவதைப்போல பாவனை செய்வார்கள். ஆனால் ரியூசன் வாசலை மிதிக்காத என்னப் போல சில பேரின் வற்புறுத்தலில் மிஸ் நிறைய நோட்ஸ் தருவார் .

இப்படியான மனநிலையில், ஒரு நாள் ஒரு குறித்த சப்ஜெக்ட்ல  மிஸ் மந்திலி எக்ஸாம் (மாத அலகுப் பரீட்சை)  தந்தார். நாங்களும் விடை எழுதிக் கொடுத்தோம். மறுநாள் எங்க விடைப் பேப்பரைத் திருத்திய மிஸ்ஸூக்கு மூக்குமேல கோபம் வந்திட்டுது.

உடனே வகுப்புக்கு வந்தார். சிலபேரின் பெயரை வாசித்து எக்ஸாம் கொப்பியை அவர்கள் மூஞ்ஜில வீசிட்டார்.

"ஸ்கூல்ல தார எக்ஸாமுக்கு நான் தார நோட்ஸ படிச்சிட்டுத்தான் விடை எழுதணுமே தவிர, ரியூசன் நோட்ஸ இங்க கொண்டு வந்து விடையா எழுதக்கூடாதுண்ணு எத்தனை தடவை சொன்னேன். "

மிஸ் சத்தம் போட்டாங்க. நாங்க கப்சிப்.

அப்படி எழுதின அத்தனை பேருக்கும் முட்டை மாக்ஸ்தான் (பூச்சியம்) கிடைத்தது. அசடு வழிய உட்கார்ந்திருந்த நண்பிகளை அனுதாபத்துடன் பார்க்கத்தான் முடிந்தது.

இப்ப அந்த ரீச்சர் இருக்கிறாவோ தெரியல. ஆனால். மனசுககுள்ள அந்த முகம் இன்னும் இறுக்கமா படிந்திருக்குது.


- Jancy Caffoor-
    24.02.2015