About Me

2019/06/23

தாவணி



வாலிப தேசம் கண்டெடுத்த
வண்ணக்கொடி!

மலை முகடுகளை மறைத்தோடும்
நீர்வீழ்ச்சி!

இளமை ரகஸியங்களை
காற்றிலுதிர்க்கும் உளவாளி!

பருவத்து அலைவரிசைக்காய்
விரும்பப்படும் ஒலிபரப்பு!

பாவடைக் குடைக்காய்
தேர்ந்தெடுக்கப்பட்ட பொன்னாடை!

இடை நெரிக்கப் படையெடுக்கும்
நூற்படை!

குமரப் பருவத்தை அங்கீகரிக்கும்
ஒப்பந்தக் காகிதம்!

கவிதை அறிவாயோ



தேவதை என்றாய் - என்
வாழ்வின் தேள்வதை யறியாமல்!

கண்மணி என்றாய் - தினம்
கண்ணீருக்குள் அழுகும் விம்ப மறியாது!

உதிரும் புன்னகை அழகென்றாய்
என் ரணங்களின் ஆழ மறியாது!

உன் கனவுகள் நானென்றாய்
வெட்டப்படும் பலியாடு நானென்பதை யறியாது!

நிம்மதி நானென்றாய் - நிதம்
நிம்மதி தேடும் ஆத்மா நானென்பதை யறியாது!

எரியூற்றப்படும் எனக்காய்
ஏக்கங்கள் வளர்க்கு முனக்காய்

அனுதாப அலைகள் அனுப்பி விட்டே ன்
 மன்னித்து விடென்னை  மானசீகமாய்......

விடுதலை வேட்கைக்காய் விண்ணப்பித்த
மரணக் கைதியிவள்!

அன்பின் புன்னகை



அன்பின் புன்னகையில்
அடங்கிக் கிடக்கின்ற தென்னுலகம்!

அறியாமைத் தீ யனல்கள்
அணைந்து போகத் துடிக்கின்றன!

இதயவெளிச் சுவரெங்கும் வருடி
முகாமிட்டு கொள்கின்றது காற்றும் தென்றலாய்!

ஈடேற்றத்தின் தலை வருடலால் வாழ்வொன்றும்
கண் முன்னால் விரிகின்றது விசாலமாய்!

உறவின் நறுமணங் கண்டு உருவாகும் மொழியொன்று
 உதடு குவிகின்றது 'அம்மா' வென்றே!

ஊரின் திருஷ்டிக் கஞ்சி முகத்தை யன்னை கரம்
முந்தானைத்  திரையிட்டு மறைத்துக் கொள்கின்றது!

எட்டுத் திக்கெங்கும் என் பெயரொளி வீச
ஏக்கம் சுமந்த உணர்வொன்று தாய்மையாய்
வருடுகின்ற திங்கே!

ஐயமகற்றும் கற்றலின் நிழலாய் கண் முன்
விரிகின்றது தாயின் அறிவகம் ஆழமாய்!

சூரிய தேசத்தின் வெம்மைக் குடை யெல்லாம் சரிந்து
திரையிட்டு கொள்கின்றன பசுமையைப் பூட்ட!

சிப்பிக்குள்ளிருந்த வெண்முத்தும் புன்னகைத்தே
முத்தமிட்டு கொள்கின்றது அன்னை விரல் பற்றி!

காற்றசைக்கா கருங்கல் மெல்ல
இளகிக் கிடக்கின்றன யவர் கருணைப் பார்வை கண்டு!

சுவர்க்கமொன்று சுரங்கம் தந்தே வழிவிடுகின்றது
சுகந்தம் மணக்கும் தாயின் பூவடிக்காய்!

இத்தனைக்கும்............
என் தாய்க்கீடேது இத் தரணியில்!

விஸ்வரூபம்




கலைகள் - இனவாதக்
களைகளாய்  இங்கே!
அலைகின்றன வரவேற்புக் கோஷங்கள்............
அல்லாஹ்வுக் கஞ்சாதோரால்!

விஸ்வரூப எழுத்துக்களே
அரபெழுத்தணி சாயல்களாய்............
சரிதம் தொடர்கின்றன
கமலின் சாகஸங்களை!

தளிர்க் கரங்களில் துப்பாக்கி திணிக்கும்
பழிக் கூட்டங்களாய் எம்மவர்கள்.........
இன அழிப்பார்களின் கைக் கூலிகளாய்
உருதுலக்கப்படுகின்றதோ கலையுலகம்!

மறை ஓதி மாண்பு தரும் - நம்
இறைகூடங்களின் புனிதங்கள்.......
பறைசாட்டப்படுகின்றன தீவிரவாதக்
கறைகளின் பள்ளியறைகளாய்!

சாந்திமார்க்க விழுதுகளில்
காயம் தரும் கோடாரிகளிங்கே........
சாய்க்கின்றன மறை வேத நெறிகளை
மாற்றோரின் குதர்க்க வேட்டைக்காய்!

இறை வசனங்களின் உயிர் மூச்சுக்கள்
சொருகப்படும் சன்னங்களாம்.......
காவு கொள்ளப்படுகின்றது சன்மார்க்கமிங்கே
விஸ்வரூபத்தின் வசை பாடலில்!

இனத்துக்காய் குரல் கொடுப்போன்
போராளியென்றே அறிவிப்போரிங்கே.....
சுட்டு விரல் நீட்டுகின்றனர் அடுத்தவனுக்கு
தீவிரவாதி நீயென்று !

புரட்சிக்காய் புறப்பட்ட கமல் - துப்பாக்கி
ரவைகளின் அரக்கத்தனத்தில் தீனை முடிந்து..........
பரபரப்பாகின்றாரிங்கே - முஸ்லிம்
உம்மாக்களின் குருதி உறிஞ்சி!

விலைக்காய் கலை விற்கும்
சகலாகலாவல்லவனின் வில்லத்தனத்தில்......
இனவாதக் களையொன்று
நம்மையெல்லாம் கடந்து செல்கின்றது
விஸ்வரூபமாய்!

விஸ்வரூப  வில்லத்தனம் - தீனுல்
இஸ்லாம் குதறும் மூடத்தனம்............
திருமறையின் அருள்மொழியை
திமிரோடு உயிரறுக்கும் வில்லங்கம்!

இறை நிராகரிப்போர் கலையிது
இதை நிராகரித்தல் தவறில்லை!- நம்
மறை நிராகரிப்போர் தூவுமிந்த விதை கூட
கறைதான் எம் இனக் குலத்தவருக்கு!