About Me

2020/05/27

நாளையும் வருவேன்

End of a Beautiful Day - Sunsets Wallpaper ID 1226500 - Desktop ...
நான்
காற்றுத் தீயில் உலர்ந்து கொண்டே
இருக்கின்றேன் 
என் சுவாசத்தை விதைத்தபடி!
 
வெயிற் தூசு பனிப் புகையாய்
என் மேனி நசுக்கி .......
வியர்வைச் சீற்றத்தில்
கரைந்து கொண்டே இருக்கின்றது!
 
குந்தி எழும்
கடலலைகளில் கரையும் - என்
காலடித் தடங்களில் மெல்ல
முனகுகின்றது ஈரம்!
 
கூதல் குடை சாய்த்து
மோதும் குளிர்க் காயங்களால் 
மெல்ல குனிகின்றது – என் விழி!
கால் நனைக்கும் நீர் பார்த்து!
 
கடற்கரை மணற் பூவில் -
கோர்த்தெடுத்தெடுத்த பாதச் சுவடுகளை
ஓவியமாய் வரைகையில் - மனசும்
அதில் கரைந்தே போனது!
 
தூரத்தே துரத்தும் இருள்......!
காதோரம் கூப்பிடும் காற்று!
தரையை மெலிதாய் நுகரும்
அலைகளைத் தொட்டுக் கொள்ள
நாளையும் வருவேன்!

- ஜன்ஸி கபூர்  


2020/04/08

கொரொனா.....!


கொரொனா.....!
இந்த நாமத்தை உச்சரித்துக் கொண்டே வலி மிகுந்த நாட்களுடன் நாம் அனைவரும் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். மரண பயத்தையும் புறந்தள்ளியவாறு பலருக்கும் வாழ்க்கைப் பயம் பீறிட்டுப் பாய்கின்றது. அன்றாடம் உழைத்து வாழும் பலருக்கு வறுமைத் தாக்கம் முறுக்கிவிடப்பட்டுள்ள நிலையில் வெறும் ஏக்கப் பெருமூச்சுக்களே முகடுகளைத் தொட்டு நிற்கின்றன. 

  பாடசாலை மாணவர்களின் பல பெற்றோர்கள் அன்றாடம் உழைத்து வாழ்பவர்கள். வறுமைச்சூழலில் வாழ்பவர்கள். தற்போதைய சூழ்நிலையில் சொல்லெணாத் துயரங்களுடன் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் கண்ணீர்த்துளிகளில் சிலவற்றையாவது உலர்த்தி விட மனம் துடிக்கின்றது. இருந்தும் என் கரங்களில் தற்போது வெறுமை....

அத்தகைய வறுமையில் வாடும் பெற்றோர்களுக்கு பாடசாலை சமூகம்சார்பில் உதவிகளை வழங்குவது மனிதாபிமானக் கடமையாகின்றது. இன்றைய சூழ்நிலைகளைக் கருத்திற் கொண்டு அவர்களுக்கு உதவி செய்யக்கூடிய பழைய மாணவிகள் மற்றும் நலன்விரும்பிகள் எம்முடன் இணையுங்கள்.

இதனை வெறும் தகவலாகக் கடந்து செல்லாமல் இரக்கத்துடன் அவர்களுக்கு உதவி செய்ய விரும்புவர்கள் எனது உள்பெட்டியில் இணையுங்கள். உங்கள் உதவிகளை அப்பெற்றோர்களுக்கு சேர்த்து விடுகின்றோம்.

"உரிய நேரங்களில் கிடைக்கின்ற ஒவ்வொரு உதவியும் மிகப் பெரிய பெறுமானமுள்ளவை."

2020/04/03

கொரோனா........!


மிகச் சிறு நுண்ணங்கியின் பிடியிலின்று இந்த உலகம் சிக்கித் திணறிக் கொண்டிருக்கின்றது. ஊரடங்கு மூலம் நோய்த் தொற்றுக்கான சந்தர்ப்பங்கள் விலக்கி வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

பாடசாலைகள் பல நாட்களாக விடுமுறை. கடமைகளிலிருந்து சற்று ஓய்வு. வீடுகளே...............இப்போ .................பல நாட்களாக நம்மை உள்வாங்கி ஏந்திக் கொண்டிருக்கின்றன. 

வழமையான செயல்கள் முடக்கப்பட்டதில் நம்மை நாமே கொஞ்சம் திரும்பிப் பார்க்கக் கூடியதாக உள்ளது. கடமையின் பொருட்டு சுழன்று கொண்டிருந்த வாழ்க்கை........ இப்போது  கொஞ்சம் வீட்டு வேலைகளிலும் எட்டிப் பார்க்கின்றது.

நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்த வாழ்க்கைக்கு சற்று ஓய்வு கிடைத்துள்ளது. இருந்தும் எல்லோர் மனங்களிலும் கொரோனா பற்றிய அச்சம் எரிந்து கொண்டுதான் இருக்கின்றது. 

03.04.2020

2020/03/25

கொரோனா




கொரோனா
பிரகடனப்படுத்தும் தேசங்களில்..........
பீதி
இறுமாப்புடன் எரிகிறது!
.
நாட்காட்டி..........
விரல் சுட்டுகின்ற போதெல்லாம்
ஒலியலைகள் உமிழ்கின்றன
வீழும் தொற்றுக்களை!
 
வியந்து போன விஞ்ஞானம்
அயர்ந்து நிற்கின்றது......
வெற்றுக் கண்ணறியாத
விந்தையைத் தேடி!
 
நாசியின் கண்கள்
விழிக்க மறுத்து ........
ஒளித்துக் கிடக்கின்றன
முகத்திரைக்குள்!
 
மரணம்  வழியும் தேகமாய்
கொரோனா....
வேரறுக்கின்றது வாழ்க்கையை
மெல்லன அரித்து!
 
ஊரடங்கு நிசப்தத்தில்
ஊமையாய் கனக்கும் பெருமூச்சின் வீச்சில்
ஓலி இழக்கின்றது
ஆன்மாக்கள்!
 
முகத்திரையும் கையுறையும்
முகப்புச் செய்திகளாய்.........
தெருக்களில் கோலம் போடுகின்றன
மருந்துகளைத் தேடி!
 
மனிதம் மறந்த புனிதம்.........
மெல்ல முடிச்சவிழ்கின்றது
உயிரணுக்களின்
இறுதிப் பிணைப்பில்!

.... 25.03.2020.....Jancy Caffoor