About Me

2020/05/28

மல்லிகை

மல்லிகை இதழ்கள் காற்றிலே உரசி
தள்ளாடி நிற்கையில் வாசம் பரவுதே!
இருளுக்குள் விருந்தோம்பும் உன்னத குணத்தால்
சிறகடிக்கும் வண்டும் பேருவகை கொள்ளுதே!

ஜன்ஸி கபூர் -
 

முயற்சிக்கில்லை தோல்வி

பூக்கள் மோதினால் பூமிக்கேது காயங்கள்!
முயற்சிக்கில்லை தோல்விதான் முன்னேறுகின்றேன்!
சாதிக்க  தடைகளேது சரிவிருந்தால் ஏற்றமுண்டு!
சரிவே படிக்கற்களாம் உயர்கின்றேன் முகடெட்ட!!
.
இலக்குக்கு உயிர் கொடுத்தே உயர்கின்றேன்
இருளும் ஒளிப்பிழம்பாய் உருகி வழிகாட்ட!
புதிதாய் பூக்கும் மனதோரங்களில்
வலிமை சிரிக்கின்றது சுவாரஸியமாய்!
.
துளிகளின் தொடரலையில் சுவாரஸ்யம்தான
களிப்பேற்றி பயணிக்கின்றேன் ஆவலுடன்!!
கற்களும் முட்களும் குதறும் வலியிலும்
வழி காணும் பயணமிது!!

- Jancy Caffoor 

2020/05/27

நாளையும் வருவேன்

End of a Beautiful Day - Sunsets Wallpaper ID 1226500 - Desktop ...
நான்
காற்றுத் தீயில் உலர்ந்து கொண்டே
இருக்கின்றேன் 
என் சுவாசத்தை விதைத்தபடி!
 
வெயிற் தூசு பனிப் புகையாய்
என் மேனி நசுக்கி .......
வியர்வைச் சீற்றத்தில்
கரைந்து கொண்டே இருக்கின்றது!
 
குந்தி எழும்
கடலலைகளில் கரையும் - என்
காலடித் தடங்களில் மெல்ல
முனகுகின்றது ஈரம்!
 
கூதல் குடை சாய்த்து
மோதும் குளிர்க் காயங்களால் 
மெல்ல குனிகின்றது – என் விழி!
கால் நனைக்கும் நீர் பார்த்து!
 
கடற்கரை மணற் பூவில் -
கோர்த்தெடுத்தெடுத்த பாதச் சுவடுகளை
ஓவியமாய் வரைகையில் - மனசும்
அதில் கரைந்தே போனது!
 
தூரத்தே துரத்தும் இருள்......!
காதோரம் கூப்பிடும் காற்று!
தரையை மெலிதாய் நுகரும்
அலைகளைத் தொட்டுக் கொள்ள
நாளையும் வருவேன்!

- ஜன்ஸி கபூர்  


2020/04/08

கொரொனா.....!


கொரொனா.....!
இந்த நாமத்தை உச்சரித்துக் கொண்டே வலி மிகுந்த நாட்களுடன் நாம் அனைவரும் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். மரண பயத்தையும் புறந்தள்ளியவாறு பலருக்கும் வாழ்க்கைப் பயம் பீறிட்டுப் பாய்கின்றது. அன்றாடம் உழைத்து வாழும் பலருக்கு வறுமைத் தாக்கம் முறுக்கிவிடப்பட்டுள்ள நிலையில் வெறும் ஏக்கப் பெருமூச்சுக்களே முகடுகளைத் தொட்டு நிற்கின்றன. 

  பாடசாலை மாணவர்களின் பல பெற்றோர்கள் அன்றாடம் உழைத்து வாழ்பவர்கள். வறுமைச்சூழலில் வாழ்பவர்கள். தற்போதைய சூழ்நிலையில் சொல்லெணாத் துயரங்களுடன் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் கண்ணீர்த்துளிகளில் சிலவற்றையாவது உலர்த்தி விட மனம் துடிக்கின்றது. இருந்தும் என் கரங்களில் தற்போது வெறுமை....

அத்தகைய வறுமையில் வாடும் பெற்றோர்களுக்கு பாடசாலை சமூகம்சார்பில் உதவிகளை வழங்குவது மனிதாபிமானக் கடமையாகின்றது. இன்றைய சூழ்நிலைகளைக் கருத்திற் கொண்டு அவர்களுக்கு உதவி செய்யக்கூடிய பழைய மாணவிகள் மற்றும் நலன்விரும்பிகள் எம்முடன் இணையுங்கள்.

இதனை வெறும் தகவலாகக் கடந்து செல்லாமல் இரக்கத்துடன் அவர்களுக்கு உதவி செய்ய விரும்புவர்கள் எனது உள்பெட்டியில் இணையுங்கள். உங்கள் உதவிகளை அப்பெற்றோர்களுக்கு சேர்த்து விடுகின்றோம்.

"உரிய நேரங்களில் கிடைக்கின்ற ஒவ்வொரு உதவியும் மிகப் பெரிய பெறுமானமுள்ளவை."