About Me

2020/05/29

புரியாத உலகம்



புரியாத உலகம் புதிரான வாழ்க்கை/
அறிவைத் தேடி அழிவைக் கொடுக்கும்/
கானல் பிரித்து விம்பம் தேடும்/
விஞ்ஞான வெடிப்பில் மெஞ்ஞானம் ஒளிரும்/

நுண்ணங்கி ஆட்சி மரணம் பேசும்/
துரோக வலியில் மனசாட்சி விறைக்கும்/
புன்னகைக்குள்ளும் விசப் புழுக்கள் நெளியும்/
புரியாத உலகம் கலிகால வளையம்/

வறுமையும் கண்ணீரும் தொடராகிப் போகும்/
பூக்கள் முகங்களில் பூகம்பம் பூக்கும்/
மதங்களும் வன்முறைகளும் வாழ்வாகிப் போகும்/
புரியாத உலகில்  வசமாகிப் போகின்றோம்/

அழகெல்லாம் பேரழிவாய் சிதைந்து போகும்/
பழகும் மனிதர் அணியாவார் எதிரில்/
இருந்தும் புரியாத உலகில் நிலைத்து/
வாழ்ந்துதான் பார்ப்போமே/

ஜன்ஸி கபூர்  


நான் நானாக

கொரோனா............

நீண்ட விடுமுறை!

எதிர்பாராத வாழ்க்கை மாற்றம்!

எதனையும் எதிர்கொள்ளும் மன தைரியம்!

இவை நமக்குள் வரவான சில விடயங்கள்!

இக்கொரோனாக் காலம் நிதானமாக நம்மை நாமே திரும்பிப் பார்க்க களம் அமைத்துத் தந்துள்ளது. வழமை எனும் ஒரு பொறிக்குள் நம்மைத் திணித்து நாம் வாழ்கின்ற அந்த வாழ்க்கை வட்டத்தை மெல்லக் கலைத்து நிதானத்துடன் மீள நம்மைத் திருப்பிப் பார்க்க வைத்துள்ளது. ஆரோக்கியம் தேடும் இலக்கில் நாம் ஓடிக்கொண்டிருக்கின்றோம். இருந்தும் நம்மை விரட்டுபவை நம்மோடு பயணித்திருந்த நமது பிம்பங்களே !

கடமை ........ கடமை

எனும் சுழியிலிருந்து மெல்ல விலகி நான் இயற்கையோடு இணைந்து கொண்டேன் இந் நாட்களில்....! இயற்கையின் பிரமிப்பில் சிந்தையுருகி கற்பனைகளும் மீளக் கருக்கட்டத் தொடங்க எழுதுகோல் என் கரம் பற்றுகின்றது!

நீண்ட நாட்கள்.........!

என் இயல்பிலிருந்து நான் விலகியிருக்க வேண்டும். மறை எண்ணங்களின் ஆக்கிரமிப்பில் அடங்கிக் கிடந்திருக்க வேண்டும். பலத்தை மறைத்த பலகீனங்களால் நான் தொலைந்திருக்க வேண்டும். சுருங்கிப்போன இயலுமையானது இயலாமைக்குள் மூடப்பட்டிருக்க வேண்டும். மூச்சடைந்து கிடந்தேன் பணிச் சுமையும் விதிச் சுமையும் ஓர் நேர்கோட்டில் பயணித்ததால்  

இந்த நீண்ட விடுமுறை 

ஆசுவாசித்தது என்னை! வெந்நீர் கசிவுகளுக்கு ஒத்தடம் தந்தது. மீளத் திரும்பிப் பார்க்கின்றேன்!

மனசுக்குள் நிம்மதிப் பெருமூச்சு!

காற்றின் மொழி  
அரும்புகளின் வளர்ச்சி
இயற்கையின் சுவை 
பொழுதுகளை மீட்டும் வினோதங்கள்  

என அனைத்தையும் நுகர்ந்தே மனசை நிரப்பிக் கொள்கின்றேன் ரம்மியமாய்!

Jancy Caffoor
 

இயற்கை


இயற்கை இறைவனின் கொடை | Radio Veritas Asia

இயற்கைச் சாளரத்தினூடு மெல்ல அலைகின்றேன்
பிம்பங்களாய் பேரழகு கரைகின்றது அதில்
காற்றில் கசங்கும் மரங்களின் மொழியில்
பசுமைப் புழுதி பாய்ந்தோடுகிறது விழியில்

தரை  மோதி நுரை கக்கும் அலையில்
கரைந்தோடும் வெய்யோன் பொன்னிறக் கதிர்கள்
பாய்ந்தோடி கூதல் கோர்க்கும் நீர்வீழ்ச்சியில்
சாய்ந்தாடும் விழிகள்  கனவுகள் சேர்க்கும்

விண் துளைக்கும் கார் மேகங்கள்
தூறல்களாய் வீழ்கையில் மழை பூக்கும்
இறைவன் வரையும் இயற்கை ஓவியம்
ரசிக்கையில் உணர்வெங்கும் உருவாகும் அற்புதங்களே

Jancy Caffoor 

ஏழையின் குடிசையில் காதல்

வறுமைக் கசங்கலில் சுருங்கிக் கொள்ளும்
ஏழைக்குடிலில் மூட்டங்களாய் ஏக்கங்கள்...
முதுமை அழகு பூச்சொரிகின்றது முத்தங்களால்
வாழ்க்கை  மீள வாசிக்கின்றது இளமையை!

நரை இமையோரம் திரையாய் காதல்
பரிவை வசப்படுத்தி ஒளிரும் தேகம்
கனவுகளின் கருத்தரிப்பில் வாசம் வீசும்
தள்ளாடும் வயதிலும் துணையாய் வாழும்

வறுமை முடிச்ச விழ்க்கவில்லை உறவினை
வாலிப வசந்தங்களை இன்னும் வீழ்த்தவில்லை
அன்பின் மலர்ச்சியில் இணைந்த உறவுகளாய்
இவ்வையம் சுமக்கு மிவர்களை பல்லாண்டு!

Jancy Caffoor