About Me

2020/05/29

நான் நானாக

கொரோனா............

நீண்ட விடுமுறை!

எதிர்பாராத வாழ்க்கை மாற்றம்!

எதனையும் எதிர்கொள்ளும் மன தைரியம்!

இவை நமக்குள் வரவான சில விடயங்கள்!

இக்கொரோனாக் காலம் நிதானமாக நம்மை நாமே திரும்பிப் பார்க்க களம் அமைத்துத் தந்துள்ளது. வழமை எனும் ஒரு பொறிக்குள் நம்மைத் திணித்து நாம் வாழ்கின்ற அந்த வாழ்க்கை வட்டத்தை மெல்லக் கலைத்து நிதானத்துடன் மீள நம்மைத் திருப்பிப் பார்க்க வைத்துள்ளது. ஆரோக்கியம் தேடும் இலக்கில் நாம் ஓடிக்கொண்டிருக்கின்றோம். இருந்தும் நம்மை விரட்டுபவை நம்மோடு பயணித்திருந்த நமது பிம்பங்களே !

கடமை ........ கடமை

எனும் சுழியிலிருந்து மெல்ல விலகி நான் இயற்கையோடு இணைந்து கொண்டேன் இந் நாட்களில்....! இயற்கையின் பிரமிப்பில் சிந்தையுருகி கற்பனைகளும் மீளக் கருக்கட்டத் தொடங்க எழுதுகோல் என் கரம் பற்றுகின்றது!

நீண்ட நாட்கள்.........!

என் இயல்பிலிருந்து நான் விலகியிருக்க வேண்டும். மறை எண்ணங்களின் ஆக்கிரமிப்பில் அடங்கிக் கிடந்திருக்க வேண்டும். பலத்தை மறைத்த பலகீனங்களால் நான் தொலைந்திருக்க வேண்டும். சுருங்கிப்போன இயலுமையானது இயலாமைக்குள் மூடப்பட்டிருக்க வேண்டும். மூச்சடைந்து கிடந்தேன் பணிச் சுமையும் விதிச் சுமையும் ஓர் நேர்கோட்டில் பயணித்ததால்  

இந்த நீண்ட விடுமுறை 

ஆசுவாசித்தது என்னை! வெந்நீர் கசிவுகளுக்கு ஒத்தடம் தந்தது. மீளத் திரும்பிப் பார்க்கின்றேன்!

மனசுக்குள் நிம்மதிப் பெருமூச்சு!

காற்றின் மொழி  
அரும்புகளின் வளர்ச்சி
இயற்கையின் சுவை 
பொழுதுகளை மீட்டும் வினோதங்கள்  

என அனைத்தையும் நுகர்ந்தே மனசை நிரப்பிக் கொள்கின்றேன் ரம்மியமாய்!

Jancy Caffoor
 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!