About Me

2020/06/04

மகிழ்ந்தாடும் மலர்கள்


தென்றல் பூ மேனிகள் போர்த்தும்
கொன்றல்  தூறல் பிழிந் தூற்றும்
ஒளியின் வாசத்தில் மகரந்தம் திறக்கும்
களிப்பில் மனம் துள்ளி யாடும்

வருடும் காற்றில் சுகமாய் சாய்ந்து
நறுமணம் சிந்தும் மலர் இதழ்களில்
சிறகடிக்கும் வண்ணாத்துப்பூச்சி மெல்லத் தழுவி
நறவில் முத்தமிட்டு காதல் செய்யுதோ

இயற்கைத் தூரிகையின் வண்ணச்; சிதறல்கள்
மலர்ச் சோலையின் உயிர் ஓவியங்கள்
மொட்டுக்கள் பக்கத்தில் எட்டிப் பார்க்க
வெட்கத்தில் சிவக்கும் இதழ்களும் பேரழகே

பஞ்சுமேனி வண்ணத்துப்பூச்சியின் கொஞ்சும் விழிகள்
அஞ்சிடாமல் அள்ளிப் பருகும் மகரந்தங்களை
தன் வம்சம் வளர்க்கும் தாய்மையால்
தென்றலில் புன்னகைத்து மகிழ்ந்தாடும் மலர்கள்

ஜன்ஸி கபூர் 


தாயெனும் பெண்மை

 உதிரம் இழைத்து நெய்த கருவை
உயிரில் இணைத்தே வாழும் உறவு/
அன்னைக்கும் பெயர் உண்டாம் அன்பு
என்றைக்கும் நம் நிழலாய் தொடருமது

அன்பைப் பிசைகையில் தித்திப்பும் மகிழ்வும்
தன் துயர் மறைத்து பிள்ளையின் புன்னகையில்
இன்பம் தேடும் அழகிய தாய்மையில்
இறைவனைக் கண்டேனே சிறகடித்துப் பறந்தேனே

காணும் கனாக்களில் பிள்ளையின் நினைவிருத்தி
நோய்க்கு மருந்தாகி உருகி கலங்கி
சேயின் துடிப்பில் தன் அதிர்வுகள் கலந்து
வாழ்தலுடன் வாழ்ந்து காட்டுதலே தாயெனும் பெண்மை

ஜன்ஸி கபூர்

ஆரோக்கியப் பயிற்சி



கிராமிய வாசம் பூசும் பசுஞ்சோலைகள்/
பரிகள் இரையுண்டு மகிழும் நேரம்/
எரிபொருள் மாசில்லா தென்றல் அசைவில்/
சுகமான ஈருளிளிப் பயணம் துணையுடன்/

நெரிசலின்றி நெடுந் தொலைவுப் பாதை/
மாசற்ற காற்றில் கலந்தே மணக்கும்/
அழகின் தரிசனங்களில் விழிகள் நனையும்/
கால்களின் சுழற்சியில் சோம்பல் முறியும்/

ஆரோக்கியப் பயிற்சி மனதுக்கும் குளிர்ச்சி/
வெம்மை பிழியும் மரங்களின் நிழல்கள்/
கொஞ்சிப் பேசும் சுகமான பயணம்/
தினம் ஈருருளி ஓட்டுதல் நலமே/

ஜன்ஸி கபூர்