About Me

2020/06/16

வேண்டாமே முகமூடிகள்

உள்ளொன்றும் புறமொன்றுமாக முகமதைச் செதுக்கி
கள்ளமாக உறிஞ்சிடுவார் அடுத்தவர் புன்னகைகளை
உள்ளத்தின் அழுக்கில் தள்ளாடும் பொய்களால்
துள்ளிடுவார் கபட வேசங்கள் அணிந்தே

புவிக்குள் வேரூன்றி கனிந்திடுவார் சுயநலமாய்
நாவினிக்கும் பேச்சினால் கரைத்திடுவார் துரோகங்களை
மலருக்குள் மறைந்திருக்கும் முட்களின் விரல்களால்
நலம் விசாரித்தே பிடுங்கிடுவார் மூச்சுக்களை

கெடு மதியால் கேடுகள் செய்தே
இடுக்கண் விளைவிப்பார் மனித மனங்களில்
மிடுக்குடன் அவனிக்குள் உலாவும் போலிகள்
தடுக்கி விழட்டும் காணாமல் போகட்டும்

ஜன்ஸி கபூர்   




2020/06/15

இணைய உலா

முகநூல் முகமறியாத நட்பினருடன் கூடி
அக எண்ணங்களை வலிமையாக்கும் தேடி
விரல் அசைவுகளின் இணைய  உலாவில்
நேர நகர்வுகள்   புரிவதில்லை  நமக்கே

ஜன்ஸி கபூர்  

கவிதை பிறந்தது

செந்தமிழ் பிசைந்து தெவிட்டா அமுதுடன்
சிந்தையில் பூத்த எண்ணங்களை வார்த்தே
சந்தக் கவி களிசைத்து மகிழ்ந்தோம்
முத்தமிழ் வளர்த்த நிலாமுற்ற முன்றலில்

இணையம் தந்த இதயம் மகிழ்ந்திட
இணைந்த கவிகளால் மகிழ்வும் பெருகிட
கற்பனையும் யதார்த்தமுமாய் கலவைகள் கரைத்தே
சொற்களும் பதங்களுமாய் அலங்கரித்தன கவிதைகள்

முத்துபேட்டை மாறனார் செதுக்கிய தளமாம்
முகநூலில் கலைநயம்  வளர்த்திட்ட தடமாம்
அகமதின்  எண்ணங்களை பண்புடன் படைத்திட
ஆக்கமும் ஊக்கமும் தெளித்திடும்  வளமாம்

கவிகளோடு பிறந்து கவியாய் வாழ்ந்து
புவி யலைவரிசையின் தமிழ் வாழ்த்தாய்
கலைகள் வளர  கருத்தாகி மலர்ந்த
கலைமகனை வாழ்த்த கவிதை பிறந்ததுவே

ஜன்ஸி கபூர்     - 15.06.2020




அற்புத பறவை




தொலை நிலா உருகும் பொன்னாய்
அலைகள் குவிந் தாடும் களிப்பாய்
ஆழி நனைக்கும் ஒளிக்கீற்றுக்களும் விரிந்தே
செழிக்கும் இரவுப் பூக்களாய் மலர்ந்து

கழுகு விரிக்கும் சிறகின் துடிப்பில்
தழுவிக் கிடக்கும் மதியின் நிழல்
நழுவி யோடும் தடைகள் உடைந்து
விழுதாய் பற்றுமே வாழ்வின் வெற்றியாய்

காரிருள் துளைக்கும் கூரிய பார்வையும்
காற்றை யுடைக்கும் அதீத வேகமும்
தற் றுணிவோடு நகரும் இலக்கும்
அற்புத பறவையாய்  அகிலத்தில் செதுக்குமே

ஜன்ஸி கபூர் - 15.06.2020