About Me

2020/06/29

இன்ப அதிர்ச்சி - நுண் கதை

அன்று அவள் பெயருக்கு வந்திருந்த தபாலை விரித்துப் படித்தாள் சுகன்யா. ஆச்சரியத்தில் விழிகள் விரிந்து துடித்தன.

' அம்மோய்'  எனக்கு நேர்முகப் பரீட்சைக்கு கடிதம் வந்திருக்குது.

அவளின்  உற்சாகம் அம்மாவுக்குள்ளும் மகிழ்ச்சியை ஊற்றியது. தான் ஆசிரியராக வர வேண்டுமென்ற அவளின் கனவு நிறைவேறியதை எண்ணி அந்தத் தாயுள்ளம் மகளை வாரி அணைத்தது.

'மகள்................ நல்ல உடுப்பு வேணுமல்லா போட்டுக்கொண்டு போக'

அம்மா தனது கவலையை வெளிப்படுத்தினார்.

'அம்மா............உங்ககிட்ட இருக்கிற சாறில ஒன்னு தாங்கம்மா. அது போதும்.'

தன்னடக்கத்துடன் கூறிய மகளை பெருமிதத்துடன் பார்த்தார் தாய். வறுமையிலும் வாழப் பழகிய தனது மகள் தனக்குக் கிடைத்த பொக்கிசமாகவே தெரிந்தாள்.

'அம்மா லாட்டரி டிக்கற்'

லாட்டரி சீட்டுக்காரன் அவர்கள் வீட்டுக்கதவைத் தட்டினான். எப்போதாவது ஒரு நாள்  இவர்கள் வீட்டுக்கு பக்கம் எட்டிப் பார்ப்பான். எவ்வளவு கஷ்டத்திலும் நம்பிக்கையுடன் இருபது ரூபா சுரண்டல் லாட்டரி சீட்டினை வாங்குவார்கள். இன்றும் இருபது ரூபாவுக்கு வாங்கிச் சுரண்டினாள் சுகன்யா. 
ஒரே ஒரு நொடி.......கண்கள் மலர்ச்சியுடன்.................. அம்மாவைப் பார்த்தாள்.

'அம்மா ...ஆயிரம் ரூபா பரிசு கிடைத்திருக்கு'

அவள் வார்த்தைகள் அறுந்து கண்கள் நனைந்தன. அவளுக்கு கிடைக்கவுள்ள தொழில் ஓன்றுக்காக இறைவன் கொடுத்திருக்கும் பரிசாகவே அப்பணத்தை நினைத்தாள்.

ஒவ்வொரு துன்பத்திற்கும் தீர்வாக இன்பம் காத்திருக்கும். ஆனால் அதை நாம் கண்டறிவதற்குள் பல போராட்டங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது.

ஜன்ஸி கபூர்

- 29.06.2020

 

Comments


நானிலம் வாழ்த்தும்

 நல்லெண்ணம் நகை அணிந்தோர் அகம்/
வெல்லுமே மனங்களை அன்பால் ஈர்த்தே/
வல்லோனாய் அறத்தில் வாழ்தலே சிறப்பு/
நல்லோரை நானிலம் நாளும் வாழ்த்துமே

ஜன்ஸி கபூர்  


2020/06/28

நாளைய எதிர்காலம்

வெஞ்சினம் அண்டா வெள்ளை மனதால்/
வெற்றிக் குழைக்கும் வெஞ்சுடர் இளையோர்/
வெளிநாடும் மெச்சும் ஆற்றல் கண்டே/
வெற்றுக்கல்வி நாடார் அனுபவமாய் வாழ்ந்திடுவார்/

தடைகளை உடைத்திட தயங்கா கரங்களும்/
தன்னம்பிக்கையுடன் எழுமே தற்றுணிவும் வரமே/
தன்னலம் துறந்து தலைவராய் தொண்டாற்றும்/
தனித்துவச் சிற்பிகளாய் தரணி ஆள்வார்/

சர்வாதிகாரம் தீண்டா சத்திய மாந்தராய்/
சதியும் விரட்டி சகுனிகள் வீழ்த்தி/
சட்டங்கள் காத்தே சந்ததி;கள் வாழ்த்த/
சரித்திரம் படைப்பார் சகியாய் இளைஞர்/

நற்றமிழின் அமிர்தம் நானிலமே சுவைக்க/
நயப்பார் காவியங்கள் நற்கனவுகளும் மெய்ப்பட/
நற்பண்புகள் மூச்சோடு நலமாகிச்  சிரிக்க/
நாளைய மன்னராய் எதிர்காலம் சிறப்பார்/

ஜன்ஸி கபூர் 

காணாமல் போன சைக்கிள் (தந்திரக்கதைகள்)

மனசு ஏனோ வலியால் துடித்தது.. அவள் பேச்சை அப்பா பாலா கேட்பதாக இல்லை. வெளியே போவதற்கு ஆயத்;தமாக செருப்பை அணிந்து கொண்டிருந்தார். பவானி பின்னால் ஓடி வந்தவளாக,
"இப்ப நீங்க போகத்தான் வேணுமாப்பா, சரியான வெயிலப்பா"
வயது போகப் போக வைராக்கியமும் கூடி விடுகின்றது போலும். மகளின் வார்த்தைகளை காதில் ஏந்தாதவராக வெளியேறினார்
'அம்மா ..............அம்மா'
விசும்பிக் கொண்டிருந்தான் ஆறு வயது மகன் தனுஜன். அவனது பிறந்தநாளைக்காக போன கிழமைதான் அப்பா வாங்கிக் கொடுத்த குட்டிச் சைக்கிள் காலையில் காணாமல் போயிருந்தது. அந்தச் சைக்கிள் மகனின் கனவு என்பதும் அதனை வாங்குவதற்காக அப்பா கஷ்டப்பட்டு பணம் சேர்த்ததும் ஞாபகத்தில் விழ கண்களை கசக்கிக் கொண்டாள். யாரோ களவெடுத்து விட்டார்கள். எடுத்தவர்களுக்கு அது வெறும் பொருள் தான். ஆனால் அவள் மகனுக்கு அதுதானே உயிர். விபத்தில் கணவனை இழந்து வாழ்பவளுக்கு இருக்கும் சொத்து மகனும் அப்பாவும்தானே. வேதனை அதிகரிக்க கண்ணீர் கன்னத்தில் உறைந்தது.
"கடைசியாக வீட்டிற்கு வந்து போன கோபி மீது அப்பாக்கு சந்தேகம் வர, அவனது வீட்டுக்குத்தான் போறார். ஒருவேளை அவன் எடுக்காட்டி பிரச்சனையாகுமே.' பயந்தாள்.
கோபி அடிக்கடி அவர்கள் வீட்டுக்கு வருவான். அக்கா....அக்கா...என்று வளைந்து வீட்டுவேலை யெல்லாம் செய்து கொடுப்பான். தனுஜன சைக்கிளில் வைத்து உருட்டுவான்.
"இந்த குடிகாரப் பயல வீட்டு வாசல்ல எடுக்காதே'
என்று அப்பா அவனைக் காணும் ஒவ்வொரு முறையும் சத்தம் போடுவார். கோபியின் வீடு அடுத்த தெருவில்தான் இருக்கிறது. வெயிலையும் பொருட்படுத்தாமல் அவனது வீட்டுக்குத்தான் பாலா சென்றிருந்தார். கதவைத் தட்டினார். கதவைத் திறந்த கோபியின் மனைவி கலவரத்துடன் அவரைப் பார்த்தாள்.
சப்தம் கேட்டு உள்ளேயிருந்த கோபியும் வெளியே ஓடி வந்தான். தந்திரமாக தனுஜனின் குட்டிச் சைக்கிளை வீட்டுக்கு கொண்டு வந்ததை மோப்பம் பிடித்து விட்டாரோ எனும் பீதியில் அவன் முகமெல்லாம் பேயறைந்த பீதியில் கறுத்தது.
அவனைக் கண்டதும் எதுவும் சொல்லாமல் அருகில் கிடந்த கதிரையொன்றை தானே இழுத்துப் போட்டவராக பாலா உட்கார்ந்தார்.
"ஐயா திடீரென்று வீட்டுப் பக்கம்'
எதுவும் தெரியாதவன்போல் கோபி; வார்த்தைகளை இழுத்தான்.
"உன்னப் பாக்கத்தான்"
என்றவாறு எல்லாப் பக்கமும் நோட்டமிட்டார். வீட்டுத்தோட்டத்தின் ஓர் மூலையில் அவர் பேரனின் குட்டிச்;சைக்கிள் தெரிந்தது.
"அதைக் கண்டதும் அவர் கண்கள் விரிய உற்சாகத்துடன் நிமிர்ந்து உட்கார்ந்தார்'
ஒரு சில கணங்கள்தான் அந்த உற்சாகம் கரைய, கோபத்துடன் பாய்ந்து அவனது பெனியனைப் பிடித்து உலுக்கினார்'.
'உன்ன பொலிஸில புடிச்சுக் குடுக்கிறன். என்ட பேரன்ட சைக்கிள களவெடுத்தியா' கத்தினார்.
'ஐயா மன்னிச்சிடுங்கய்யா. தெரியாம கஷ்டத்தில எடுத்திட்டார்'
அருகில் அவனது மனைவி கெஞ்சி அழுதாள்.
"குடிகாரப் பயல். குடிக்கத்தான் களவு எடுத்திருக்கிறான்.. தர்ம அடி கிடைச்சாத்தான் திருந்துவான்"
அவர் கோபம் குறையவில்லை. தலையைக் குனிந்து கொண்டிருந்த கோபியோ மௌனமாக நின்று கொண்டிருந்தான்.
நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. கோபி மனைவியின் கண்ணீர் பாலாவின் தீர்மானத்தை மாற்றவும் கோபியை எச்சரித்தவாறே பேரனின் குட்டிச் சைக்கிளுடன் வெளியேறினார்.
ஜன்ஸி கபூர்