மனசு ஏனோ வலியால் துடித்தது.. அவள் பேச்சை அப்பா பாலா கேட்பதாக இல்லை. வெளியே போவதற்கு ஆயத்;தமாக செருப்பை அணிந்து கொண்டிருந்தார். பவானி பின்னால் ஓடி வந்தவளாக,
"இப்ப நீங்க போகத்தான் வேணுமாப்பா, சரியான வெயிலப்பா"
வயது போகப் போக வைராக்கியமும் கூடி விடுகின்றது போலும். மகளின் வார்த்தைகளை காதில் ஏந்தாதவராக வெளியேறினார்
'அம்மா ..............அம்மா'
விசும்பிக் கொண்டிருந்தான் ஆறு வயது மகன் தனுஜன். அவனது பிறந்தநாளைக்காக போன கிழமைதான் அப்பா வாங்கிக் கொடுத்த குட்டிச் சைக்கிள் காலையில் காணாமல் போயிருந்தது. அந்தச் சைக்கிள் மகனின் கனவு என்பதும் அதனை வாங்குவதற்காக அப்பா கஷ்டப்பட்டு பணம் சேர்த்ததும் ஞாபகத்தில் விழ கண்களை கசக்கிக் கொண்டாள். யாரோ களவெடுத்து விட்டார்கள். எடுத்தவர்களுக்கு அது வெறும் பொருள் தான். ஆனால் அவள் மகனுக்கு அதுதானே உயிர். விபத்தில் கணவனை இழந்து வாழ்பவளுக்கு இருக்கும் சொத்து மகனும் அப்பாவும்தானே. வேதனை அதிகரிக்க கண்ணீர் கன்னத்தில் உறைந்தது.
"கடைசியாக வீட்டிற்கு வந்து போன கோபி மீது அப்பாக்கு சந்தேகம் வர, அவனது வீட்டுக்குத்தான் போறார். ஒருவேளை அவன் எடுக்காட்டி பிரச்சனையாகுமே.' பயந்தாள்.
கோபி அடிக்கடி அவர்கள் வீட்டுக்கு வருவான். அக்கா....அக்கா...என்று வளைந்து வீட்டுவேலை யெல்லாம் செய்து கொடுப்பான். தனுஜன சைக்கிளில் வைத்து உருட்டுவான்.
"இந்த குடிகாரப் பயல வீட்டு வாசல்ல எடுக்காதே'
என்று அப்பா அவனைக் காணும் ஒவ்வொரு முறையும் சத்தம் போடுவார். கோபியின் வீடு அடுத்த தெருவில்தான் இருக்கிறது. வெயிலையும் பொருட்படுத்தாமல் அவனது வீட்டுக்குத்தான் பாலா சென்றிருந்தார். கதவைத் தட்டினார். கதவைத் திறந்த கோபியின் மனைவி கலவரத்துடன் அவரைப் பார்த்தாள்.
சப்தம் கேட்டு உள்ளேயிருந்த கோபியும் வெளியே ஓடி வந்தான். தந்திரமாக தனுஜனின் குட்டிச் சைக்கிளை வீட்டுக்கு கொண்டு வந்ததை மோப்பம் பிடித்து விட்டாரோ எனும் பீதியில் அவன் முகமெல்லாம் பேயறைந்த பீதியில் கறுத்தது.
அவனைக் கண்டதும் எதுவும் சொல்லாமல் அருகில் கிடந்த கதிரையொன்றை தானே இழுத்துப் போட்டவராக பாலா உட்கார்ந்தார்.
"ஐயா திடீரென்று வீட்டுப் பக்கம்'
எதுவும் தெரியாதவன்போல் கோபி; வார்த்தைகளை இழுத்தான்.
"உன்னப் பாக்கத்தான்"
என்றவாறு எல்லாப் பக்கமும் நோட்டமிட்டார். வீட்டுத்தோட்டத்தின் ஓர் மூலையில் அவர் பேரனின் குட்டிச்;சைக்கிள் தெரிந்தது.
"அதைக் கண்டதும் அவர் கண்கள் விரிய உற்சாகத்துடன் நிமிர்ந்து உட்கார்ந்தார்'
ஒரு சில கணங்கள்தான் அந்த உற்சாகம் கரைய, கோபத்துடன் பாய்ந்து அவனது பெனியனைப் பிடித்து உலுக்கினார்'.
'உன்ன பொலிஸில புடிச்சுக் குடுக்கிறன். என்ட பேரன்ட சைக்கிள களவெடுத்தியா' கத்தினார்.
'ஐயா மன்னிச்சிடுங்கய்யா. தெரியாம கஷ்டத்தில எடுத்திட்டார்'
அருகில் அவனது மனைவி கெஞ்சி அழுதாள்.
"குடிகாரப் பயல். குடிக்கத்தான் களவு எடுத்திருக்கிறான்.. தர்ம அடி கிடைச்சாத்தான் திருந்துவான்"
அவர் கோபம் குறையவில்லை. தலையைக் குனிந்து கொண்டிருந்த கோபியோ மௌனமாக நின்று கொண்டிருந்தான்.
நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. கோபி மனைவியின் கண்ணீர் பாலாவின் தீர்மானத்தை மாற்றவும் கோபியை எச்சரித்தவாறே பேரனின் குட்டிச் சைக்கிளுடன் வெளியேறினார்.
ஜன்ஸி கபூர்
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!