About Me

2020/06/29

இன்ப அதிர்ச்சி - நுண் கதை

அன்று அவள் பெயருக்கு வந்திருந்த தபாலை விரித்துப் படித்தாள் சுகன்யா. ஆச்சரியத்தில் விழிகள் விரிந்து துடித்தன.

' அம்மோய்'  எனக்கு நேர்முகப் பரீட்சைக்கு கடிதம் வந்திருக்குது.

அவளின்  உற்சாகம் அம்மாவுக்குள்ளும் மகிழ்ச்சியை ஊற்றியது. தான் ஆசிரியராக வர வேண்டுமென்ற அவளின் கனவு நிறைவேறியதை எண்ணி அந்தத் தாயுள்ளம் மகளை வாரி அணைத்தது.

'மகள்................ நல்ல உடுப்பு வேணுமல்லா போட்டுக்கொண்டு போக'

அம்மா தனது கவலையை வெளிப்படுத்தினார்.

'அம்மா............உங்ககிட்ட இருக்கிற சாறில ஒன்னு தாங்கம்மா. அது போதும்.'

தன்னடக்கத்துடன் கூறிய மகளை பெருமிதத்துடன் பார்த்தார் தாய். வறுமையிலும் வாழப் பழகிய தனது மகள் தனக்குக் கிடைத்த பொக்கிசமாகவே தெரிந்தாள்.

'அம்மா லாட்டரி டிக்கற்'

லாட்டரி சீட்டுக்காரன் அவர்கள் வீட்டுக்கதவைத் தட்டினான். எப்போதாவது ஒரு நாள்  இவர்கள் வீட்டுக்கு பக்கம் எட்டிப் பார்ப்பான். எவ்வளவு கஷ்டத்திலும் நம்பிக்கையுடன் இருபது ரூபா சுரண்டல் லாட்டரி சீட்டினை வாங்குவார்கள். இன்றும் இருபது ரூபாவுக்கு வாங்கிச் சுரண்டினாள் சுகன்யா. 
ஒரே ஒரு நொடி.......கண்கள் மலர்ச்சியுடன்.................. அம்மாவைப் பார்த்தாள்.

'அம்மா ...ஆயிரம் ரூபா பரிசு கிடைத்திருக்கு'

அவள் வார்த்தைகள் அறுந்து கண்கள் நனைந்தன. அவளுக்கு கிடைக்கவுள்ள தொழில் ஓன்றுக்காக இறைவன் கொடுத்திருக்கும் பரிசாகவே அப்பணத்தை நினைத்தாள்.

ஒவ்வொரு துன்பத்திற்கும் தீர்வாக இன்பம் காத்திருக்கும். ஆனால் அதை நாம் கண்டறிவதற்குள் பல போராட்டங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது.

ஜன்ஸி கபூர்

- 29.06.2020

 

Comments


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!