About Me

2020/07/24

உணர்வால் ஒன்றுபடுவோம்


தாய்பூமி தாங்கிடும் விரல்களின் சத்தியத்தால்
தளிர்த்திடும் ஒற்றுமையும் தங்கக் கரங்களால்
தன்னார்வக் கூட்டணியில் மனமும் இணைந்தால்
தரணியும் துலங்கிடுமே தன்னிகரில்லா உழைப்பினாலே

தேடிடுவார் வளங்களை தேயாதே இயற்கையுமே
தேன்சுவை   மொழியெடுத்தால் வளர்த்திடலாம் சிந்தையை
தேகத்தின் வலிமையினால் உழைப்பும்   செல்வமே
தேக ஆரோக்கியம் என்றும் அடையாளமாம்

ஒன்றுபட்டே வெல்லலாம் மனங்களை அன்பினாலே
ஓங்கிடும் பலத்தினில் ஒளியேற்றலாம் மனையினில்
ஒருமித்த கருத்தெடுத்தே களைந்திடலாம் முரண்பாடுகளும்
ஒத்திசையும் குணத்தாலே ஆளலாம் எத்திசையும்

கூடியே அகற்றலாம் பேதங்களும் ஒழிய
கூடாதோர் நட்பையும் வீழ்த்திடலாம் வெளியே
கூட்டணியாய் திரண்டேதான் காட்டிடலாம் பலத்தை
கூடிடலாம் திருநாளில் பண்பாடும் வளர

ஜன்ஸி கபூர்     
 
   

2020/07/23

விடியாத பொழுது

விடியாத பொழுதெல்லாம் விதியின் சூழ்ச்சியோ/
துடிக்கின்றனர் மாந்தரும் இழிகுணம் கண்டே/
கடிவாளமில்லா ஆசைகளும் வெடித்திடுமே பேராசைகளாய்/
மனசு முணர்ந்திடும் திருப்தியற்ற வாழ்வுதனை/

சுரண்டும் கரங்கள் உயர்த்திடும் கோபுரங்களை/
வரட்டும் ஏழ்மைக்குள்ளும் துகிலுரிக்கும் கையூட்டுக்காய்/
ஈரமில்லா நெஞ்சுக்குள்ளும் திரளும் சுயநலத்தால்/
மரத்திடும் மனிதமே மற்றோரெல்லாம் இருட்டிலே/

திட்டமிடா வாழ்வும் கடனேற்றும் மலையளவு/
வாட்டத்தின் வலிமைக்குள்ளும் உதிர்ந்திடும் வனப்புமே/
தட்டிக்கேட்கார் உழைப் புறுஞ்சுவோர் அநீதியை/
வட்டமிடும் பொழுதெல்லாம் விடியலும் மறக்குமே/

விரலளவே முட்டட்டும் நமக்குள்ளே எதிர்பார்ப்பும்/
வீணாகாமல் பொழுதெல்லாம் நலமாகட்டும் இனிதாகவே/
வாழ்வும் தன்னியல்போடு பொருந்திப் போனால்/
விடியாத பொழுதெல்லாம் விடிவெள்ளிகள் ஆளட்டும்/

ஜன்ஸி கபூர்  

இறவாத வரம்

பகுத்தறிவு மாந்தர்க்கு இறவாத வரமே
வகுத்திடலாம் நெறிதனை வாழ்வும் மேன்மையுற
தன்னையு மறிந்திடலாம் கற்காத அறிவுடனே
தரணியோ டிசைந்திடலாம் நல்வாழ்வும் பெற்றே

ஜன்ஸி கபூர் 


குச்சுவீட்டுத் திண்ணையோரம்


குச்சுவீட்டுத் திண்ணையோரம் ஆசை/
மச்சானும் காத்திருக்கேன் நெடு நேரம்/
அச்சமேனே அஞ்சு நிமிசம் பேசிடலாம்/
பச்சப் புள்ளையே புரிஞ்சுக்கடி மனசத்தான்/

வளைஞ்சோடும் நதியோரம் நீ நடக்கையிலே/
வளையல் சத்தம் கலகலக்குதடி காதோரம்/
வைரமே உருக்கிறியே என் மனசத்தான்/
வைகைக் காற்றே கிள்ளாதே நினைவைத்தான்/

மை தீட்டும் விழியாலே மயக்குறே/
தை மாசம் வாறேன்டி வீட்டோரம்/
கை வீசி நடக்கையில மனசள்ளுறியே/
வையடி சீக்கிரம் கல்யாணத் தேதியத்தான்/

மொய்க்கிறே வண்டாட்டும் மனதைக் கிள்ளித்தான்/
பொய்யாக சினந்துகிட்டே சிவக்கிறே அழகாக/
சாய்ந்தாடும் மலரே உன்னிதழ் அமுதாக/
காய்ந்த பூமியின் தேவதை நீதானடி/

ஆலமர விழுதிலே ஊஞ்சலும் ஆடுவோமா/
ஆசை நெலவும் ரசித்திடப் பாடுவோமா/
ஆனந்தத் தித்திப்பிலே உசிரும் இசைந்தாட/
ஆருயிரே காத்திருக்கிறேன் உனக்காக/

ஜன்ஸி கபூர்