About Me

2020/07/25

தமிழ் வணக்கம்

 

கனிந்தாய் என்னுள் உணர்வாய்/
கருத்தின் சுவையாய் உயிர்த்தாய்/
கனிவால் மனதை நிறைத்தாய்/
கலந்தாய் வாழ்வின் ஒளியாய்/
இனித்தாய் மொழிக்குள் தாயாய்/
இசைந்தாய் இசைக்குள் ஒலியாய்/
இனிதாய் பிறந்தாய் தமிழாய்/
இமயமே உனையே வணங்குகிறேன்
/

ஜன்ஸி கபூர்  


குறளுக்கு கவிபாடு

குறள் :- 15

கொடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கேஃ
எடுப்பதூம் எல்லாம் மழை

வரண்ட மேகங்கள் வந்திங்கு போக
வாழ்வும் பஞ்சத்தில் மோதித் தவிக்கும்
வறுமை நீக்கி கெட்டார்க்கும் துணையாய்
வந்து பொழியுமே நல் மழையிங்கு


வசும்பின் துளிவீழின் அல்லால்மற்று ஆங்கே 
பசும்புல் தலைக்கண்பு அரிது. 

பெய்திடும் மழையும் பொய்த்திட்டால் புவியில்
பெருமரங்கள் ஊன்றாதே நிலத்தோ டுயிர்த்தே
பெருஞ் செல்வமாம் வாழ்வும் சுருங்கிட
ஓரறிவுப் புல்லினமும் வாடுமே பசுமையிழந்து

 
குறள் :- 17

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி  
தான்நல்கா தாகி விடின். 

மேக முறிஞ்சும் கடல் நீரெல்லாம்;
மேதினில் மழையாய் வீழ்ந்திடாத பொழுது
வருந்தித் துடிக்குமே கடல்வாழ் உயிரெல்லாம்
வற்றியும் போகுமே பெருங்கடலும் வளமின்றி

ஜன்ஸி கபூர்

எதிர்பாராதது

 சுவரில் மாட்டியிருந்த கடிகாரம் மணி ஆறென்பதை உணர்த்தியதும் வனஜாவின் நெஞ்சுக்குள் ஏதோ பிசைய ஆரம்பித்தது. தன் முன் மேசையில் பரவிக்கிடக்கும் கோவைகள் அனைத்திற்கும் இன்று கையொப்பம் இட்டால்தானே நாளை அவற்றை உரிய இடங்களுக்கு அனுப்பி வைக்க முடியும். இந்த அலுவலகத்தில் முகாமைத்துவ அதிகாரியாக இருக்கும் அவளுக்குள் பயமெல்லாம் வேரூன்றக் கூடாதுதானே. மனதைத் திடப்படுத்திக் கொண்டவளாக தனது வேலையில் மும்முரமாக ஈடுபடத் தொடங்கினாள். 

நிமிடங்கள் இரவுடன் கசியத் தொடங்கவும் அறையினுள் ஒளிர்ந்து கொண்டிருந்த மின்விளக்குகளை அணைத்து விட்டு வெளியேறத் தொடங்கினாள். கடைசிப் பேருந்தினை பிடித்துவிடலாம் எனும் நம்பிக்கை அவளை விரைவுபடுத்திய போது.      யாரோ பின்தொடரும்  ஓசை   கேட்கத் தொடங்கியது. நடையின் வேகத்தை துரிதப்படுத்தினாள். 
வீட்டில் அவளும் அம்மாவும்தான். தம்பி வெளி மாவட்டத்தில் படித்துக் கொண்டிருக்கிறான். சிறு குளியலொன்றையும் எடுத்தவள் அம்மா தூங்கியதும் தன்னறைக்குள் வந்தாள்.

அம்மா பாரிசவாத நோயினால் கடந்த இரண்டு வருடங்களாக அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார். அவளைப் பொறுத்தவரை அம்மா  இன்னமும் சிறு குழந்தைதான். இயக்கமற்று நாற்காலியே கதியென்று வாழும் அவரைக் கவனிக்க   ஏற்பாடும் செய்திருந்தாள்.

உறக்கம் கண்களைச் சுழற்ற தன்னறைக்குள் திரும்பியவள் அதிர்ந்தாள். மீண்டும் காலடிச் சப்தம் அருகில் கேட்கத் தொடங்கியது. பிரமையோ தன்னைச் சமாதானப்படுத்த முயன்றாலும்கூட அவளது அடிமனமோ மீண்டும் அச்சத்தில் உறைய ஆரம்பித்தது.

திடீரென அவளது கண்முன்னே அவன் நின்று கொண்டிருந்தான். 

வயது முப்பதுக்குள்.....

முகக் கவசத்தினால் தன்னை மறைத்திருந்தான். கையில் வைத்திருந்த கைத் துப்பாக்கி அவளது நெஞ்சின் முன்னால் நீண்டு பயமுறுத்திக் கொண்டிருந்தது. அவன் திருடனென்பதைப் புரிந்து கொண்டாள். 

'வீட்டு பீரோச் சாவியைக் குடு'

'ஓ..இதுதான் காரணமா என தனக்குள் சொல்லிக் கொண்டு' அவனது கட்டளைக்கு இயங்க ஆரம்பித்தாள். சப்தம் போட்டால் அம்மா பயப்படுவாரென்ன கவலை அவளுக்குள்.

'அவள் கண்முன்னே....... அலுமாரி திறக்கப்பட்டு பொருட்கள் வீசப்பட்டன. அவன் எதையோ தேட ஆரம்பித்தான். அவன் தேடி வந்த பொருள் கிடைக்கவில்லைபோலும். கண்ணுக்குள் அகப்பட்ட பொருட்களை எட்டி உதைத்து தன் ஆத்திரத்தை தீர்த்தவன் வந்த வேகத்திலே மறைந்தும் போனான்.

அம்மாவின் அறையினை மெல்ல எட்டிப் பார்த்தாள் வனிதா. அம்மா கலவரத்தோடு போராடிக் கொண்டிருப்பது புரிந்தது.

'யாரு மக...........'

'அவள் விடயம் சொன்னதும் அம்மாவின் முகம் பயத்தில் இறுகத் தொடங்கியது.

'அம்மா பயப்பிடாதீங்கோ....அவன் இனி இந்தப் பக்கம் வரமாட்டான். கொஞ்ச நாளா யாரோ என்னைப் பின்தொடர்ந்தாங்க. எனக்கு சந்தேகமா இருந்திச்சு. அதான் வீட்டிலிருந்த நம்ம நகையையெல்லாம் வங்கிப் பெட்டகத்தில நேற்றே பாதுகாப்பா வைச்சிட்டேன். விடிஞ்சதும் பொலிஸுக்கு போகலாம்மா.'  

 என்ற வனிதாவிடம் திருடனைத் தந்திரத்தில் வென்ற மகிழ்ச்சி வெளிப்பட்டது.   தனது எதிர்பார்ப்பு திருடனுக்குள் எதிர்பாராத முடிவைக் கொடுத்த திருப்தியுடன் உறங்கச் சென்றாள் அவள்.  

ஜன்ஸி கபூர் 
 







2020/07/24

புரிதலில் வாழ்க்கை


சிறகிருக்கு துணையாய்
 தொட்டிடலாம் சிகரம்/

சிந்தையும் தெளிந்திருந்தால்
சிறப்பாகும் எண்ணமே/

சிதறாதே பகையுணர்வால்
சீராகும் நல்லுணர்வும்/

சினமது தொலைந்திட்டால்
மனமது மகிழும்/

சிக்கல்தானே வாழ்க்கை
மதியுமதை மீட்கும்/

புரிந்துதானே நீயும்
சுகமாய் வாழ்ந்துவிடு /

ஜன்ஸி கபூர்