About Me

2020/08/03

வயலோரம் விளையாட வா புள்ள

வயலோரம் காத்திருக்கேன் மனசுக்குள்ளே பூத்திருக்கேன்/
வாறியாடி வெளையாட வரம்போரம் கோடிழுப்போம்/
சறுக்கிடாதே சகதியிருக்கு மனசுக்குள்ள சங்கதியிருக்கு/
இறுக்கி அணைச்சுக்கோடி இன்பம் கோடிதான்/

சத்தம் போடுற வெள்ளிக் கொலுசே/ 
சித்தம் குளிருதே அவளை நெனைச்சா/
உச்சி சூரியனும் இளகிப் போச்சே/
உத்தமிப் புள்ள ஊஞ்சலாடலாம் காத்துக்குள்ள/

சந்திரப் பெண்ணே கிட்ட வாடி/
மந்திரமிட்டாய் மாதுளங்கன்னி செவக்குதடி உதடுதான்டி/
வந்திடு அருகில் வாசிக்கணும் உன்னத்தான்/
சந்திப்போமடி நாம சடுகுடு ஆடலாம்டி/

சமைஞ்ச புள்ளே  வெளஞ்ச நாத்தே/
சக்கரைத் தண்ணீ ஊறுமடி நாவில/
சந்தனம் தெளிக்கிறே தென்றலும் மணக்குதே/
அந்திக்குள் வந்திடு ஆனந்தம் நெறைஞ்சிருக்கு/

வெக்கம் ஏனோ வெள்ளரிப் பிஞ்சே/
பக்கம் வந்திடு மாமனும் சொக்க/
அக்கம் பக்கம் யாருமில்லை புள்ளே/
ஆக்கிப் போடு கூட்டாஞ் சோறும்/

வட்டச் சூரியன் கிட்ட வாரான்/
சுட்டெரிப்பான் வெள்ளத் தோலும் வேக/
கட்டழகியே பதுங்கிக்கலாம் நெல்லும் காத்திருக்கு/
சிட்டுக்குருவியே பறந்து வாடி வெளையாடத்தான்/

ஜன்ஸி கபூர் - 03.08.2020
யாழ்ப்பாணம்   



வரம்

நீண்ட நேரமாய் ஒலித்துக் கொண்டிருக்கும் அலைபேசியை இயக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் உஷா. கைபேசி அதிர்வை விட அவளின் மனம் கூடுதலாக படபடத்துக் கொண்டிருந்தது. சுவரில் மாட்டப்பட்டிருந்த நாட்காட்டி இதழ்கள் காற்றிலே அசைந்தாடி அந்தத் திகதியை காட்சிப்படுத்தியபோது மனதுக்குள் ஏனோ அமைதியின்மையை உணர்ந்தாள். இத்தனை நாட்களாக தனக்குள்ளேயே ஒரு வட்டத்தைக் கீறி வெளியுலகத் தொடர்பின்றி வாழ்பவளுக்கு கைபேசி அழைப்பு விசனத்தைக் கொடுத்தது. நிலத்திலே ஊன்றிக்கிடந்த தனது வலது காலைப் பார்த்தவளுக்கு மனசுக்குள் நறுக்கென்று முள் குத்திய பிரமை.

இரண்டு வயதில் அந்த ஊரில் வேகமாகப் பரவிய இளம் பிள்ளை வாத நோய் அவள் வாழ்வையும் முடக்கியது. பண்ணாத வைத்தியமில்லை. மனம்தான் புண்ணானது. நோய்த் தாக்கம் கண்ட கால் வளர்ச்சியடையாத நிலையில் ஒரு காலை இழுத்து இழுத்து நடப்பதற்கும் பழகிக் கொண்டாள்.

காலம் யாருக்கும் காத்திருப்பதில்லை. பருவம் அவளுக்குள்ளும் பூச்சூடியது. இருபதைக் கடந்த பேரழகி  இன்று. ஆனாலும் அடுத்தவர் கண்களுக்குள் புலப்படாத கால் ஊனம் அவள் மனதுக்குள் வலியைப் பிறாண்டிக் கொண்டிருந்தது.

இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஏதோ ஒரு திறமை அவர்களை  அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறது. பொழுதுபோக்காக தைக்க ஆரம்பித்தவள் இன்று அதன் மூலமாக வருவாயும் ஈட்ட ஆரம்பித்துள்ளாள்.

மனம் ஒரு நிலையில்லாமல் தடுமாறியது.

அவன் ஜெகன்.....

அண்ணன் முகேஷின் நண்பன். அடிக்கடி வீட்டுக்கு வருவான்.
எதிர்பாராதவிதமாக தனிமையில் அவனும் அவளும் சந்திக்க நேரிட்ட அந்த நாளில்  வெளிப்படுத்தினான் தன் விருப்பத்தை.

'உஷா..........'

அவள் மௌனமாகவே நின்று கொண்டிருந்தாள்.

' ஏன்............உனக்குள்ளேயே உன்ன சிறைப்பிடிச்சு வச்சிருக்கிறே. வெளியே வா..... எனக்கு உன்ன ரொம்பப் பிடிச்சிருக்கு. நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்.

அவனின் காதலுக்குள் தாய்மை நிரம்பியிருந்தது. உணர்ந்தாள். ஆனாலும் உள்ளத்துத் துயர் அவள் மௌனத்தை அவிழ்க்க விடவில்லை. வீட்டுக்குள் மறைந்து கொண்டாள்.

அதன் பின்னரான முயற்சியாக ஜெகன் கைபேசியில் அவளைத் தொடர்பு கொள்ள முயன்றும் தோற்றுப் போனான். அவள் தனது பிடிவாதத்திலிருந்து இறங்குவதாக இல்லை. சிந்னையிலிருந்தவள் தாயாரின் குரல் கேட்டு சுயநினைவுக்குள் திரும்பினாள்.

'மக........... இங்க வாம்மா யாரு வந்திருக்கிறாங்னு பாரு'

அம்மாவின் குரல் கேட்டு வெளியே வந்தவள் அதிர்ந்து நின்றாள்.

அங்கே..................

ஜெகன் ......அவனது அம்மாவுடன் வந்திருந்தான். அவளுக்கு எல்லாம் புரிந்தது.  அம்மாவின்  நீளமான சந்தோச உரையாடலில் தாயாரின் சம்மதம் தொக்கி நிற்பதை உணர்ந்தாள்.

அவனோ இமைக்காமல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்;. அந்தப் பார்வையில் வழிந்த காதல் அன்பு பாசம் எல்லாமே ஒன்றிணைந்து அவனை அவளுக்குள் இமயமாய் உயர்த்தி வைத்தது.

அவன்.............

அவளுக்கான வரம்.........

முதன்முதலாக அவனது பார்வை அவளுக்குள் மகிழ்வைக் கிளற ஆரம்பித்தது. உதடுகள் அவளையுமறியாமல் நாணத்துடன் உரசி நின்றது. ஒரு புதிய வாழ்க்கை தன் கண் முன்னால் ஒளிர ஆரம்பிப்பதை உணர்ந்தாள் உஷா.

ஜன்ஸி கபூர்
 




 

அன்பே .......எழிலே

அன்பே என்னுயிரே
அமுதூட்டும் விழியாளே/ 
ஆரத்தழுவினேன் உனையே
ஆனந்தம் வழிந்தோட/
இளமைச் சிற்பமே 
இன்பவூற்றின் செங்கரும்பே/
ஈகையாய் எனக்களித்தாய்
உனைத்தானே எழிலே/

ஜன்ஸி கபூர் - 03.08.2020



தடம் மா(ற்)றும் எதிர்காலம்



நவீனத்தின் உருமாற்றம் மதியதை மயக்க/
நாகரிக மோகமும் வாலிபத்தை வீழ்த்தும்/
நாடித்துடிப்போடு கைபேசி அலைவின் சுதந்திரமும்/
நாளைய சந்ததியின் உறவுகளை உடைத்தெறியும்/

இயந்திரச் சுழற்சியாய் இசைந்திடும் வாழ்வில்/
இதயங்களும் தானறியாது அன்பின் அருமைதனை/
இடரறுக்கும் வலிமையின்றி மரணத்துள் வீழும்/
இளையோரின் தன்னம்பிக்கையும் சுருங்கும் தானாய்/

உழைக்கும் கரங்களும் கரைக்கும் பணத்தை/
உறுஞ்சுமே நாவும் போதை மதுவை/
உன்னதப் பணியாற்றும் பண்பாடும் கலாசாரமும்/
உடைகையில் எதிர்காலமும் தடம் மா(ற்)றுமே/

ஜன்ஸி கபூர் - 28.07.2020