About Me

2021/04/22

மணிமுடி


 
புரட்டுகின்ற நூலும் 
        புதையலே சிந்தைக்கு/
புத்துணர்ச்சி தரும் 
        எண்ணங்களும் எழுதுகோல்களே/


புத்தாக்கச் சிந்தனையும் 
        செதுக்குமே வெற்றிகளை/
புது வழியைக் 
       காட்டிடுமே கல்வியும்/


சிரசேந்தும் அறிவில் 
       ஒழியுமே அறியாமையும்/
சிந்தையின் செயல்களில் 
      அனுபவமும் விரியுமே/

உனதான உரிமைகள் 
      உனைச் சேர்கையில்
உணர்வுக்குள் சுதந்திரமும் 
     உனை ஆளுமே

துணிச்சலின் முகவரியில் 
      முயற்சிகள் சேர
துணிந்த செயலினில்
       வலிமையும் கோர்க்க/ 

உறவுதனை அணைத்து 
      அன்பினை மொழிந்து/
கரும்பாய் இனித்திடும் 
      நடத்தையால் ஆளு/

கற்ற கல்வியால் 
      பெற்றிடுக மதிப்பும்/
சுற்றமும் போற்ற 
      ஏற்றமே எதிர்காலமாக/

மனிதம் சூட்டிடும் 
     மணிமுடி உன்னிலே/
இனிய வாழ்வும் 
      வளமான எதிர்காலமும்/

ஜன்ஸி கபூர்  


 பின்னூட்டம்

கவி பா.மா சேகர்
 
ஜன்ஸி கபூர் ஒவ்வோர் வரியிலும் ஓர் உன்னத நம்பிக்கையின் இழையோட்டம் மிளிர்வது படைப்புத் திறனுக்கான முதல் முத்திரை!
நேர்த்தியான சிந்தனைகளும் 
தெள்ளிய நீரோட்டம் போன்ற துல்லிய சொற்கோர்வைகளும் தங்கள் ஆளுமைக்கான சிறப்பம்சமாய்த் திகழ்கிறது!
மேன்மேலும் இவ்வாறான செறிவான கருத்துக்கள் அடங்கிய படைப்புகளை வழங்கித் தன்னிகரற்ற படைப்பாளராய்த் தமிழ்தொண்டில் சிறந்திட நல்வாழ்த்துக்கள் சகோதரி அவர்களே!!

பரவசப் பயணம்

 


பசுமை வெளிக்குள் 
    காற்றின் சோலை/
பரவசமாகத் துள்ளிடும் 
     பாலகன் புன்னகைக்குள்/

துளிர்த்திடும் வியர்வையெல்லாம் 
     விருப்புடன் கரைந்தோடும்/
துள்ளும் அழகுக்குள் 
     அள்ளுதே ஈர்ப்பும்/

படரும் உச்சி 
     வெயிலின் பார்வைக்கு/
தடையோ வாழை 
      இலைக் குடையும்/

நடையும் புதைகின்ற 
     சேறும் இன்பமே/
மடை திறந்த 
     வெள்ளமாக மகிழ்ச்சியே/

வயிற்றுப் பசியும் 
     ஆற்றும் சோற்றுடன்/
வயலுக்குள் அன்பால் 
     உழுதிடும் சிறுவன்/

ஜன்ஸி கபூர்  

விரிவாக்கமும் விளைச்சலும்


விரிந்திடும் அபிவிருத்தி விரட்டுது மாந்தரை 

விரித்திடும் வலையிலும் சிக்கவும் வைக்குது 

அரித்திடும் கறையானாய் வேரினைப் பிடுங்குது 

அழகென்ற பெயரினில் அவலமும் ஊட்டுதே 

விரிவாக்கம் செய்கையில் சுருங்கிடுமே வளங்களும் 

வியப்பூட்டும் வீதிகள் கண்ணீரிலே நனைந்தோடும் 

கண்ணை விற்றே வாங்கிடும் அழகால் 

பண்ணை வயல்களின் உயிர்த்துடிப்பும் அறுந்திடும் 

எண்ணற்ற தெருக்கள் புண்ணாக்கும் வயல்களை 

எண்ணங்களில் சோகம் வார்த்திடும் அகோரமாய் 

ஊரையே அழித்திடும் நவீனத்தின் ஓட்டத்தால் 

உயிர்களின் சாபமே பெரும் விளைச்சலாகும் 

ஜன்ஸி கபூர்

 

2021/04/21

ஆகாயம் - சூரியன் - சந்திரன்

 

ஆகாயம் ஏந்துகின்ற
     அழகுக்கோள்கள் யாவுமே/
ஆரத்தழுவுமே ஈர்ப்பினை
     இயற்கையின் விந்தையிது/
நகர்ந்திடும் மேகங்கள்
     உதறுகின்ற நீர்முத்துக்கள்/
நனைத்திடுமே மணற்றரையின்
     வெப்பக்கோடுகளும் குளிர்ந்திடவே/

சூரியன் விரித்திடும்
     சிறகின் ஒளியினில்/
சூடுகின்றதே புவியும்
     வாழ்விற்கான உயிர்ப்பை/
இன்னுயிர்கள் வாழ்ந்திட
     இயற்கையும் செழித்திட/
இதமாக அணைத்திடும்
     செங்கதிரோன்தானே இவனும்/

சந்திரனும் செல்லப்
     பிள்ளையோ நித்திலத்திற்கே/
அடர் இருளினில்
     மின்னொளி பாய்ச்சி/
அண்டத்திற்கே விளக்கேற்றும்
     அற்புதப் படைப்பே/
அழகு நிலாவெனக்
     கொஞ்சிடுவாரே மழலையரும்/

ஜன்ஸி கபூர்