About Me

2021/04/26

அவசரம்

இறைவனால் படைக்கப்பட்டிருக்கின்ற உலகம் இயற்கையால்  சூழப்பட்டிருக்கின்றது. மண்ணில் வீழ்கின்ற வித்துக்கள் மறு விநாடியே மரம் ஆவதில்லை. கருவுக்குள் உருவாகின்ற உயிர்கள் இவ்வுலகைக் காண பத்து மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். பருவ மாற்றங்களோ, காலநிலையோ படிமுறைச் சுழற்சிக்கமைவாக செயற்படுகின்றன.

'மனிதன் பெரிதும் அவசரக்காரனாக இருக்கின்றான்' (17:11) 

என்ற திருக்குர் ஆனின் கூற்று எவ்வளவு உண்மை என்பதை   நாம் புரிந்துகொள்ளலாம்.

ஆனால்   இந்த நவீன உலகத்தில் வாழ்கின்ற மனிதர்களின் செயல்களில் காட்டப்படுகின்ற அவசரம் எனும் மாயையின் விளைவாக பல எதிர்பாரத விளைவுகள் நம்மை ஆட்கொள்கின்றன. 

நிதானமே பிரதானம் என்பார்கள். ஆனால் பொறுமை இழக்கப்படும்போது நிதானமும் காணாமற் போய்விடுகின்றது.

 ஏன் அவசரப்படுகின்றோம்?

எதற்கு அவசரப்படுகின்றோம்?

சிந்திக்கின்றோமா .....

நினைத்தவுடன் கிடைக்க வேண்டுமென்ற அவசரப் பண்பால் நமது அவசியமான சிந்தனைகள் செயலிழந்து போய் விடுகின்றன. 

பல சந்தர்ப்பங்களில் நாம் எடுக்கின்ற அவசர தீர்மானங்கள், முடிவுகள் என்பன நமது இயல்பான வாழ்வையே திசை திருப்பி விடக் கூடியன.

தற்கொலை செய்வதும் அவசர உணர்வுக் கோளாறே!

விபத்தும்கூட அவசர வேகத்தின் வேதனைப் பக்கமே!!

அவசர வார்த்தைப் பிரயோகங்கள் நம் பெறுமதியான ஆளுமையையே கேலிப்படுத்தி விடும். மன உணர்வுகளை சினம் ஆட்கொள்ளும்போது ஏற்படுகின்ற வார்த்தைப் பிரயோகத்தை அவசரமாக வெளியேற்றும்போது பிறரின் பகைமையும், குரோதங்களும் நமக்குச் சொந்தமாகின்றன.

தோல்வியில் முடிகின்ற சில காதல்கள்கூட அவரமாக எழுகின்ற எதிர்பால் கவர்ச்சியே....

அவசர அவசரமாக கொறித்து உண்பதைப் போல் ஆகாரமெடுக்கின்ற இன்றைய பலருக்கு ஆரோக்கியமும் கெட்டே போய்விடுகின்றது.

நாம் அவசரப்படும்போது பதற்றம் நம்மை அணுகுகின்றது. எதிலும் திருப்தியற்றுப் போகின்றோம். நம் நம்பிக்கை பொய்த்து விடுகின்றது. ஈற்றில் செய்யப்படுகின்ற வேலைகள் செல்லக் காசாகி விடுகின்றன.

திட்டமிடலுடன் கூடிய தீர்மானம் நமக்குள் இருந்தால் நாம் எதற்கும் அவசரப்படமாட்டோம்.

எனவே அவசியமான வாழ்வில் அவசரம் தவிர்த்து வாழ்வோம்

ஜன்ஸி கபூர் - 26.04.2021

 


மயிலிறகே மயிலிறகே


 காதல்

இளமைப் பருவத்தின் சொப்பனம். கனவுக் கூட்டுக்குள் தம் உணர்வுகளை நிரப்பி உல்லாசமாக பவனி வருகின்ற இரதம் இது. காதலை மையப்படுத்தி நகர்கின்ற மனங்களை சோகங்களும், கண்ணீர்த்துளிகளும் எட்டிப் பார்ப்பதில்லை. கவிதைகள் பல பிறப்பெடுக்க இந்தக் காதலே வரம்பமைத்துக் காட்டுகின்றன. 

ஒவ்வொரு பாடலைக் கேட்கும்போது கவிஞனின் கற்பனைத் திறன் நம்மை வியக்க வைக்கும். ஒவ்வொரு வரிகளும் நாம் கடந்து போனவைதான். ஆனால் நம் கண்களுக்குப் புலப்படாத அந்த கைவண்ணம் கலை உணர்வுகள் கவிஞனின் வரிகளை வசப்படுத்தும்போது நாம் ஆச்சரியத்தில் விழிகளை உயர்த்துகின்றோம்.

இந்தப் பாடலைக் கேட்கும்போது.

அதன் இசை நம்மை மானசீகமாக வருடிச் செல்கின்றது. 

அறம், பொருள், இன்பம் என்ற முப்பால்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட திருக்குறளில், மூன்றாம் பால் இன்பத்திற்குரியது என்பார்கள். இன்பத்தின் நிழலில் இதயங்களை குளிர்விக்கக் கூடிய காதலை மையப்படுத்தி இப்பாடல் எழுதப்பட்டாலும்கூட, ஒவ்வொரு வரிகளின் ஆழமான நகர்வு இப்பாடலை ரசிக்க வைக்கின்றது. 

தனது மடியில் அவனை சாய்த்து உணர்வுகளால் வருடுகின்ற பொய்கையாக அவள் மாற, அவனோ தன்னை வசீகரிக்கின்ற பொதிகைத் தென்றலாக அவளை ரசிக்கின்றான்.

காதலின் மையப் புள்ளியே இந்த இரசிப்புத்தான். ஒருவரை ஒருவர் இரசிக்கின்ற அந்த அன்பின் வருடலே சுகந்தமான உணர்வுகளுக்குள் ஒருவரை ஒருவர் தள்ளி விடுகின்றது

மயில் இறகால் வருடும்போது கிடைக்கின்ற மென்மை இந்தக் காதல் உணர்வால் ஏற்படுகின்றது போலும். உயிரும் மெய்யுமின்றி ஏது இலக்கணம். அவள் அவனுக்கு மெய்யெழுத்து. உரிமையோடு அடையாளப்படுத்துகின்ற கையெழுத்து.... 

விழிகளில் உலாவுகின்ற மழைக்கால நிலவாக அந்தக் காதல் அழகாக மாறுகின்றது. 

ஒ ...  ஆத்மார்த்தமான அந்தப் பிணைப்பிற்கு எல்லைகளின் வரையறைகள் இல்லையோ...

வரிகளை இரசிக்கின்றேன் இசை என்கிற உயிர்ப்பினையும் சேர்த்து

 ஜன்ஸி கபூர் - 26.04.2021



வெற்றியைத் தேடி

சாதனையாளர்களின் சரித்திரப் பக்கங்களை வாசிக்கையில் எந்தவொரு சாதனைகளும் இலேசில் கிடைப்பதில்லையெனத் தோன்றும். அந்த வெற்றியாளனின் வாழ்க்கைக்குள் இருக்கின்ற கடினமான உழைப்பு நம் கண்களுக்குள் தெரியும்.   மானசீகமாக உழைக்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் வெற்றியைத் தேடுகின்ற நம்பிக்கை இருக்குமாயின் கிடைக்கின்ற ஒவ்வொரு சிறு வெற்றிகளுமே நமது      வாழ்வையே மாற்றியமைக்கின்ற சக்திகளாக மாறி விடுகின்றன.

உயரப் பறக்கின்ற பறவையின் முதல் அடி கூட மெல்லிய தத்தித் தத்திப் பறப்பதற்கான முயற்சிதான். நம்பிக்கையுடனான அந்தப் பயிற்சிதான் நீண்ட வானில் சுதந்திரமான உலாவுகைக்கான உத்வேகமாக மாறுகின்றது. நாமும் சாதனையாளர்களாக மாறுவோம்.

ஜன்ஸி கபூர் - 26.04.2021