இறைவனால் படைக்கப்பட்டிருக்கின்ற உலகம் இயற்கையால் சூழப்பட்டிருக்கின்றது. மண்ணில் வீழ்கின்ற வித்துக்கள் மறு விநாடியே மரம் ஆவதில்லை. கருவுக்குள் உருவாகின்ற உயிர்கள் இவ்வுலகைக் காண பத்து மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். பருவ மாற்றங்களோ, காலநிலையோ படிமுறைச் சுழற்சிக்கமைவாக செயற்படுகின்றன.
'மனிதன் பெரிதும் அவசரக்காரனாக இருக்கின்றான்' (17:11)
என்ற திருக்குர் ஆனின் கூற்று எவ்வளவு உண்மை என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
ஆனால் இந்த நவீன உலகத்தில் வாழ்கின்ற மனிதர்களின் செயல்களில் காட்டப்படுகின்ற அவசரம் எனும் மாயையின் விளைவாக பல எதிர்பாரத விளைவுகள் நம்மை ஆட்கொள்கின்றன.
நிதானமே பிரதானம் என்பார்கள். ஆனால் பொறுமை இழக்கப்படும்போது நிதானமும் காணாமற் போய்விடுகின்றது.
ஏன் அவசரப்படுகின்றோம்?
எதற்கு அவசரப்படுகின்றோம்?
சிந்திக்கின்றோமா .....
நினைத்தவுடன் கிடைக்க வேண்டுமென்ற அவசரப் பண்பால் நமது அவசியமான சிந்தனைகள் செயலிழந்து போய் விடுகின்றன.
பல சந்தர்ப்பங்களில் நாம் எடுக்கின்ற அவசர தீர்மானங்கள், முடிவுகள் என்பன நமது இயல்பான வாழ்வையே திசை திருப்பி விடக் கூடியன.
தற்கொலை செய்வதும் அவசர உணர்வுக் கோளாறே!
விபத்தும்கூட அவசர வேகத்தின் வேதனைப் பக்கமே!!
அவசர வார்த்தைப் பிரயோகங்கள் நம் பெறுமதியான ஆளுமையையே கேலிப்படுத்தி விடும். மன உணர்வுகளை சினம் ஆட்கொள்ளும்போது ஏற்படுகின்ற வார்த்தைப் பிரயோகத்தை அவசரமாக வெளியேற்றும்போது பிறரின் பகைமையும், குரோதங்களும் நமக்குச் சொந்தமாகின்றன.
தோல்வியில் முடிகின்ற சில காதல்கள்கூட அவரமாக எழுகின்ற எதிர்பால் கவர்ச்சியே....
அவசர அவசரமாக கொறித்து உண்பதைப் போல் ஆகாரமெடுக்கின்ற இன்றைய பலருக்கு ஆரோக்கியமும் கெட்டே போய்விடுகின்றது.
நாம் அவசரப்படும்போது பதற்றம் நம்மை அணுகுகின்றது. எதிலும் திருப்தியற்றுப் போகின்றோம். நம் நம்பிக்கை பொய்த்து விடுகின்றது. ஈற்றில் செய்யப்படுகின்ற வேலைகள் செல்லக் காசாகி விடுகின்றன.
திட்டமிடலுடன் கூடிய தீர்மானம் நமக்குள் இருந்தால் நாம் எதற்கும் அவசரப்படமாட்டோம்.
எனவே அவசியமான வாழ்வில் அவசரம் தவிர்த்து வாழ்வோம்
ஜன்ஸி கபூர் - 26.04.2021
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!