அட...செல்லமே!
ஏந்திழையே!

நமக்குள் முகிழ்த்தது நட்பென்று
என்னுள் வீறாப்புத்  தொட்டாலும் .................
ஏனோ......
உயிரோர வேலிகளில்
எட்டிப் பார்க்கின்றாய் வாஞ்சையுடன்
நீயென் காதலியாய்!

சகியே.!
சல்லடை போட்டுத் தேடுகின்றேன்
உன்னை......!
மயிலிறகின் ஸ்பரிசமாய்
என்னுள் வீழ்ந்துகிடக்குமுன்னுள்
என்னுயிர் நாட்டிட!

வெட்ட வெளியில் மோகம் பிழிந்து
எட்டிப் பார்க்கும் நிலாவாய் நீ காத்திருக்க..........
மொட்டைமாடிக் குளிரில்
லாப்டொப்பின் நரம்புகளாய்
நான் புடைத்திருக்க......
பயணிக்கின்றேன் உனைக் கோர்த்தவாறே!

உன்னிதழில் எனைப் பிழிந்து
விழியுறக்கம் தனைக் கலைத்து- நம்
நெஞ்சுக்குள் சாரல் துளைக்குமந்த
நெருடலே "காதலாய்" மொழி பேச............

கைபேசியினில் உரசிடும்  வார்த்தைகளில்
சித்தம் கரைந்து கிடக்கின்றேன்- உன்னுள்
என் முத்தத்தை நனைத்தவாறே!

என் வெம்மையை உடைத்தெறிந்தே............
உன்னுள் எனைப் பத்திரப்படுத்தும்
உன் ஆன்மாவுக்குள்
நானே நிரந்தரமாகின்றேன்
இப்போதெல்லாம்!

என் கவித் தேசத்தின் உலாவுகை
இப்பொழுதெல்லாம் - உன்
விரல் பற்றியே எழுதுகின்றது
உன் காதலை என்னுள்
வார்த்தபடி!

மேகம் பிழிந்தோடும்
தூறல்கள் நீயாக !


உன்னுடன் சயனிக்கையில்
நீயே என் கவிதைகளாய்
களமிறங்குகின்றாய் 

உன் செவ்விதழ் வடிக்கும்
குறும்புகளில் நசிந்தும்............
என் விரல் ரேகைக்குள் 
தடம் பதித்தும்.............
கூத்தடிக்குமுன்னை
பிரியேன் ஓர் பொழுதும்!

அடச்....செல்லமே!

அறிவாயா..இப்பொழுதெல்லாம்............
ஊடலுக்குள் உனை வீழ்த்தி
கூடிக் களிக்குமென் னாசைகள்
காதல் அவஸ்தைகளாய்
அறுத்தெறிகின்றதுன் மௌனத்தையும்
உயிரை வருடியபடி!
2 comments:

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை