About Me

2012/08/21

என்று தணியும்


விஞ்ஞானம் விசமம் செய்ததா........
அஞ்சுகின்றதே நம் வாழ்க்கை!
சூரியன் சூட்சுமத்தில் எரிகின்றது - எம்
பூமியிலோ வரட்சி வருத்துகின்றது!

எம் தரைப் பாதங்களில் - பல
பித்தவெடிப்புக்கள் வரையப்பட்டுள்ளனவே!...........
வைத்தியர்களில்லையோ சிகிச்சைக்கு
சித்தம் கலங்கு தியற்கை ஒவ்வொரு நாளும்!

பசுமை மரங்களெல்லாம் நீர் மறந்து
எலும்புகளாய் உருமாறியதில்.............
எரிகின்றது மரப்பற்றை - தீக்குச்சிகள்
உரசாமலே !

இலையுதிர்த்த மரங்களெல்லாம்
விலைமாதராய் அவிழ்த்துக்கிடக்க............
நறுஞ்சோலை கூடப் புழுக்கம் கண்டு
தலை கவிழ்த்து முறைத்து நிற்கின்றது!

பாலைவனங்கள் சொகுசாயிங்கு
தரையோடு உறவாகிப் போக - நம்மிள்
இறந்து போகும் நீரூற்றுக்காய் - தேகம் கூட
மரத்துப் போய் வெடிக்கின்றது!

நீரோடைகளின் சலசலப்பெல்லாம்
நீராவியாய் கலைந்தேதான் போனதில்........
குளங்களிலெல்லாம் குஷியாய் நிதமும்
எட்டிப்பார்க்கின்றது மணற்றரை!

வளியெங்கும் வெப்பமுறிஞ்சி
அழகான தேசம் இறந்தும் போனதில் - நீர்
வாழ் உயிரினங்களின் மூச்சைப் பிடுங்கும்
வெயில்தானின்னும் எரிக்கின்றது!

கார் மேகமிங்கு மிரண்டோட
பாரெங்கும் மழைக்கு மேங்க - ஈரலிப்பு
தார்மீகம் சிதைந்தே போக ...........
வரண்டுதான் போனதெங்கள் சூழல்!

நா வரண்டு தொண்டை யும் காய்ந்து
நாடியெல்லாம் துடிப்பையுமடக்கி.........
வாடி நிற்குமெம் தேகம் கதற
ஓடி வந்த காலநிலை யாதோ!

இனங்களாலும் மதங்களாலும்
கோடு கிழித்தவர்கள் யாவரும்..........
பேதமேதுமின்றி குரல்வளை குளற
தாகமுற்று  துடிக்கின்றார்கள் தேசத்தில்!

ஜன்ஸி கபூர் 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!