About Me

2012/08/05

பிர் அவ்ன் அழிப்பு


திருக்குர்ஆன் - அத்தியாயம் 28
----------------------------------------------
 திருமறையின் இறை வசன ஆதாரங்களிலிருந்து திரட்டிக் கொண்ட  பிர்அவ்ன் அழிவு தொடர்பான சம்பவங்கள்
-------------------------------------------------------------------------------------
மென்மையான மனிதமானது பொறாமை, ஆணவம், கபடம் போன்ற துர்க்குணங்களால் சூழும் தருணத்திலிருந்தே அழிவுக்காக அத்திவாரமிடப்படுகின்றது.

அத் தீயகுணத்தின் சரித்திரமாக இன்றும் நம் நினைவுக்குள் விழுந்து கிடப்பவன் பிர்அவ்ன்.....தானே இறைவன் எனும் மமதையில் இருந்தவனை இறைவன் அழித்தமை பற்றி திருக்குர்ஆனில் அல் கஸஸ் (சரித்திரம்) எனும் அத்தியாயத்தில் இறைவன் தெளிவாக விளக்குகின்றான்.

மூஸா அலை அவர்கள் எகிப்தில் பிறந்த இஸ்ரேல் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் . அப்பொழுது எகிப்தில் ஆட்சி செலுத்திக் கொண்டிருந்த (பார்வோன்) பிர் அவ்ன் குறி சொல்பவர்களை நம்பும் பழக்கத்தைக் கொண்டிருந்தான். எகிப்தில் பிறக்கும் ஒரு ஆண் பிள்ளையின் கையால் பிர் அவ்ன் கொல்லப்படுவானென குறிகாரன் சொல்ல, குறிப்பிட்ட காலம் வரை பிறக்கப்போகும் அனைத்துக் குழந்தைகளையும் கொல்லும்படி அவன் கட்டளையிட்டான்.

எகிப்திய பூமியில் தன் ஆட்சியைப் பலப்படுத்திய பிர்அவ்ன் மனிதர்களை பல பிரிவாக்கி அவர்களை பலஹீனப்படுத்தி தானே இறைவன் என மார் தட்டிய ஒருவனாவான்..

அவ்வாறான ஓர் சூழலிலேயே மூஸா நபி (அலை) அவர்களும் பிறந்தார்கள். பிர் அவ்னால் அக்குழந்தைக்கு ஏதும் நடந்துவிடுமோவென அவர்களின் தாயார்  அஞ்சிய போது அவர்களுக்கு இறைவனிடமிருந்து வஹீ வந்தது.

மூஸா நபி (அலை) அவர்களுக்கு பாலூட்டும்படியும், அவரது பாதுகாப்பு பற்றி பயமேற்பட்டால் பேழையில் வைத்து ஆற்றில் போடும்படியும், அவர்கள் மீள திருப்பி தாயிடம் சேர்க்கப்படுவார்களெனவும், தூதர்களில் ஒருவராக மாற்றப்படுவார்களெனவும் வஹீயில் அறிவிக்கப்பட்டது.

மூஸா நபி (அலை) அவர்களின் தாயாரும் அவ்வாறே செய்தார்கள். வைக்கோலினால் படகு போன்று செய்து  நைல் நதியில் மூஸா  (அலை) அவர்கள் விடப்பட்டார்கள், பேழையில் மிதந்து வந்த மூஸா நபி (அலை) அவர்களை பிர் அவ்னுடைய மனைவி நைல் நதிக்கு குளிக்கச் சென்ற போது கண்டெடுத்தார். பிர் அவ்னனிடம் மனைவி தன் கணவனிடம் , அக் குழந்தையைக் கொல்ல வேண்டாமெனவும், சுவீகார புத்திரராக வளர்க்கலாமென்றும் கூறினாள்.

மூஸா (அலை) அவர்களின் தாயாரோ தன்னிதயம் வெறுமையடைந்து மிக்க கவலையுற்றார்கள். அந்த இரகஸியத்தை வெளிப்படுத்தாமல் இறைவன் அவர்களின் மனதைக் கட்டுப்படுத்தினான். எனினும் அக் குழந்தை தூரத்திலிருந்து அக் குழந்தையின் சகோதரியால் கண்காணிக்கப்பட்டது.

மூஸா (அலை ) அவர்கள் பிர் அவ்ன் வீட்டிலேயே வளர்ந்தார்கள். அக்காலத்தில் எகிப்தியரிடம் அடிமைகளாக இஸ்ரேலியர்கள் இருந்ததால், மூஸா (அலை)யை வளர்க்கும் பொறுப்பு அவரின் சொந்தத் தாயிடமே ஒப்படைக்கப்பட்டது.. தன்னினத்தின் அடிமைத்தனம் கண்டு அவர்கள் மனம் வருந்தினார்கள்.

மூஸா (அலை )அவர்கள் வாலிபத்தையடைந்த போது இறைவனால் அவர்களுக்கு ஞானமும், கல்வியும் வழங்கப்பட்டது. மீண்டும் அவர் , அவர் குடும்பத்தவரிடம் சேர்க்கப்பட்டார்கள்.


"அவர் வாலிபத்தையடைந்து, (வாழ்க்கையில்) அவர் நிறைவு நிலை பெற்றபோது அவருக்கு ஞானத்தையும், கல்வியையும் நாம் வழங்கினோம், இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் ( நற்) கூலி வழங்குவோம்" (28:14)


ஒருசமயம் அந்நகரத்தில் இருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். ஒருவன்  இஸ்ரேலிய இனத்தையும், மற்றவன்எகிப்தியனாகவும் காணப்பட்டான். இஸ்ரேலிய இனத்தை சார்ந்தவன் மூஸா (அலை ) அவர்களிடம் விடுத்த கோரிக்கைக்கேற்ப அவ் எகிப்தியனைக் அவர் குத்திக் கொன்றார்கள்.. எனினும் பின்னர் அச் செயல் அவர்களுக்கு வருத்தமளிக்கவே மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்புக்கேட்டார்கள். இறைவனும்  மன்னிப்பை வழங்கினான்.


" என் இராட்சனே! என் மீது நீ அருள் புரிந்ததன் காரணமாக (இனி) குற்றவாளிகளுக்கு உதவி செய்பவனாக நான் ஒரு போதும் இருக்க மாட்டேன்" என்று அவர் கூறினார் (28:17)


தன் எகிப்தியனைக் கொன்றதற்காக பிர் அவ்னால் மூஸா அவர்கள் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது. இதனைக் கேள்வியுற்ற   பட்டணத்திலிருந்த ஒருவன் ஓடி வந்து அச்  செய்தியை  மூஸா (அலை) அவர்களிடம் கூறினான்.


" மேலும் , பட்டணத்தின் கோடியிலிருந்து ஒரு மனிதர் விரைவாக (ஓடி) வந்து, "மூஸாவே ! நிச்சயமாக உம்மைக் கொலை செய்து விட , (இந்நகரப்) பிரதானிகள் ஆலோசனை செய்து கொண்டிருக்கின்றார்கள். ஆதலால் நீர் (இங்கிருந்து) வெளியேறிவிடும். நிச்சயமாக நான் (உம்முடைய நன்மையைக் கருதி) உபதேசம் செய்பவர்களிலுள்ளவனாவேன் " என்று கூறினார். (28:20)


இதனைத் தொடர்ந்து மூஸா அலை அவர்களும் தனது குடும்பத்தினருடன் இரவோடு இரவாக வெளியேறி பாலைவனத்தையடைந்தார்கள். நீண்ட பயணத்தின் பின்னர் மதியன் எனும் இடத்தையடைந்தார்கள். இஸ்ரேலிய மக்களுக்கு இறை தூதராக அனுப்பப்பட்ட சுஹைப் (ரலி) அவர்கள் மூஸா (அலை) யை அடையாளம் கண்டு தன்னுடன் தங்க வைத்ததுமல்லாமல் தன் மகளையும் திருமணம் செய்து வைத்தார்கள்.

அவர்களுடன் சிறிது காலம் வாழ்ந்த பின்னர் எகிப்திற்கு திரும்ப வேண்டுமென்ற எண்ணத்தை இறைவன் மூஸா (அலை) அவர்களிடம் ஏற்படுத்தினான். திரும்பிச் செல்லும் போது , பாதை எதுவும் தெரியாத நிலையில் தடுமாறினார்கள். அப்பொழுது தூரத்தில் நெருப்பைக் கண்டார்கள். அந் நெருப்பிலிருந்து ஏதும் தகவலறிந்து வருவதாக மூஸா அலை அவர்கள் தன் குடும்பத்தினரிடம் கூறி விட்டு அந் நெருப்பை நோக்கிப் புறப்பட்டார்கள்

நெருப்பை அண்மித்ததும்


"மூஸாவே"


என அழைக்கப்பட்டார்கள். அது "சினாய்" மலை. இறைவனுடன் பேசும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது

"நிச்சயமாக நான்தான் உன் இறைவன். உன் காலணிகள் இரண்டையும் கழற்றி விடும். நிச்சயமாக நீ துவா எனும் புனித பள்ளத்தாக்கில் உள்ளீர்"

"இன்னும் நான் உம்மை என் தூதராகத் தேர்வு செய்தேன். ஆதலால் வஹியின் வாயிலாக உமக்கு அறிவிக்கப்படுவதற்கு நீர் செவி ஏற்ப்பீராக"


"நிச்சயமாக நான்தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு நாயகன் இல்லை. ஆகவே என்னையே நீ வணங்கும். என்னைத் தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலை நிறுத்துவீராக "


என இறைவன் பேசினான்.


"மூஸாவே ! உம்முடைய வலது கையில் இருப்பது என்ன" என்று இறைவன் கேட்க,



(அதற்கவர்)"இது என்னுடைய கைத்தடி இதன் மீது நான் சாய்ந்து கொள்வேன். இதைக் கொண்டு என் ஆடுகளுக்கு இலைகள் பறிப்பேன். இன்னும் இதில் எனக்கு வேறி தேவைகளும் நிறைவேறுகின்றன. " எனக் கூறினார்.


அவர் கையிலிருந்த தடியை கீழே போடும்படி பணிக்கப்பட்டார்கள்.

அப்பொழுது அத் தடி பெரிய மலைப் பாம்பைப் போன்று நெளிந்தது. அதனைக் கண்டு அச்சமுற்றவராக திரும்பிப் பார்க்காமல் புறமுதுகிட்டு ஓட முற்பட்டார்கள்.. அப்பொழுது இறைவன் அவரைப் பயப்பட வேண்டாமெனவும், அவர் பயமற்றவர்களில் ஒருவராவார்கள் எனவும் கூறினான்.


" உம்முடைய சட்டைப்பைக்குள் உம்முடைய கையை நுழைப்பீராக. அது எவ்விதத் தீங்குமின்றி (பிரகாசமுள்ள) வெண்மையாக வெளிப்படும். பயத்திலிருந்து (விடுபட) உம்முடைய புஜங்களை உம் (விலாவின்) பால் சேர்த்துக் கொள்வீராக. இவ்விரண்டும் பிர் அவ்னுக்கும், அவனுடைய பிரதானிகளுக்கும் ( நீர் எடுத்துச் செல்வதற்கு) உரிய உமதிரட்சகனிடமிருந்துள்ள இரு அத்தாட்சிகளாகும். நிச்சயமாக அவர்கள் பாவம் செய்யும் கூட்டத்தினராகவே இருக்கிறார்கள்" (என்றும் அவருக்குக் கூறப்பட்டது) (28:32)



"இவ்வாறு என்னுடைய பெரிய அத்தாட்சிகளிலிருந்து சிலவற்றை உமக்கு காண்பிக்கின்றேன்  பிர் அவ்னிடம் நீர் செல்வீராக! நிச்சயமாக அவன் வரம்பு மீறிவிட்டான்."


அதனைக் கேட்டதும் , மூஸா அலை அவர்கள் அச்சப்பட்டார்கள்.
பிர் அவ்ன் கூட்டத்தில் உள்ள ஒருவனை ஏற்கனவே தான் கொலை செய்தமையால் அவர்கள் தன்னைக் கொலை செய்யக்கூடுமென அஞ்சி, தன் சகோதரனான ஹாரூன் அவர்களையும் தன்னுடன் அனுப்பி வைக்கும்படி இறைவனிடம் வேண்ட, இறைவனும் அவர் வேண்டுதலை நிறைவேற்றினான்.

" (அதற்கு அல்லாஹ்) " உம் சகோதரரைக் கொண்டு உம் புஜத்தை நாம் வலுப்படுத்துவோம். நாம் உங்களிருவருக்குமே வெற்றியைத் தருவோம். ஆகவே அவர்கள் உங்களிருவர் பால் நெருங்கமாட்டார்கள். நீங்கள் நம்முடைய அத்தாட்சிகளுடன் (செல்லுங்கள்) நீங்களிருவரும், உங்கள் இருவரைப் பின்பற்றுவோரும்தான் வெற்றி பெறக் கூடியவர்கள் " என்று கூறினான்.  (28:35)

14:6. "மூஸா தம் சமூகத்தாரிடம்: ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிடமிருந்து (அல்லாஹ்) உங்களைக் காப்பாற்றிய போது, அல்லாஹ் உங்களுக்குப் புரிந்த அருள் கொடையை நினைத்துப் பாருங்கள்; அவர்களோ, உங்களைக் கொடிய வேதனையால் துன்புறுத்தியதுடன், உங்களுடைய ஆண் குழந்தைகளை அறுத்(துக் கொலை செய்)தும் உங்கள் பெண்மக்களை (மட்டும்) உயிருடன் விட்டுக் கொண்டும் இருந்தார்கள் - இதில் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு மகத்தான சோதனை (ஏற்பட்டு) இருந்தது” என்று கூறினார்

10:83." ஃபிர்அவ்னும், அவனுடைய பிரமுகர்களும் தங்களைத் துன்புறுத்துவார்களே என்ற பயத்தின் காரணமாக, மூஸாவின் மீது அவருடைய சமூகத்தாரின் சந்ததியினர் சிலரைத் தவிர (வேறு) ஈமான் கொள்ளவில்லை, ஏனெனில், நிச்சயமாக ஃபிர்அவ்ன் அந்த பூமியில் வலிமை மிக்கவனாக இருந்தான்; வரம்பு மீறிக் (கொடுமை செய்பவனாகவும்) இருந்தான்"

அவ்வாறே இறைவன் கட்டளைப்படி மூஸா அலை அவர்கள் இறைவன் பற்றிய தெளிவான அத்தாட்சிகளை எடுத்துக் காட்டியபோது பிர் அவ்ன் கூட்டத்தினர் அது இட்டுக்கட்டப்பட்ட சூனியம் என நிராகரித்தனர்.

0:77. "அதற்கு மூஸா: “உங்களிடம் சத்தியமே வந்த போது, அதைப்பற்றியா நீங்கள் இவ்வாறு கூறுகிறீர்கள்? இதுவா சூனியம்? சூனியக்காரர்கள் வெற்றி பெறவே மாட்டார்கள்” என்று கூறினார்"

10:80. "அதன்படி, சூனியக்காரர்கள் வந்ததும், “நீங்கள் (சூனியம் செய்ய) எறிய விரும்புவதை எறியுங்கள்” என்று மூஸா அவர்களிடம் கூறினார்"


10:81அவர்கள் (எறியக் கூடிய கைத்தடிகளை) எறிந்தபோது, மூஸா: “நீங்கள் கொண்டு வந்தவை (அனைத்தும்) சூனியமே; நிச்சயமாக அல்லாஹ் விரைவிலேயே இவற்றை அழித்துவிடுவான் - அல்லாஹ் விஷமிகளின் செயலை நிச்சயமாக சீர்படச் செய்யமாட்டான்” என்று கூறினார்


26:43. "மூஸா அவர்களை நோக்கி, நீங்கள் எறியக் கூடியதை எறியுங்கள்” என்று கூறினார்"


26:44. "ஆகவே, அவர்கள் தங்கள் கயிறுகளையும், தடிகளையும் எறிந்து, ஃபிர்அவ்னுடைய சிறப்பின் மீது ஆணையாக, நாமே வெற்றியடைவோம்” என்று கூறினார்கள்"


26:45. "பிறகு மூஸா தம் கைத் தடியைக் கீழே எறிந்தார்; உடன் அது (பெரும் பாம்பாகி) அவர்களுடைய பொய்(ப் பாம்பு)களை விழுங்கி விட்டது"


26:46." (இதைப்பார்த்தவுடன்) சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்தனர்"


26:47. "அகிலங்களெல்லாவற்றின் இறைவன் மீது நாங்கள் ஈமான் கொண்டோம் என்றனர்"


 ஆனாலும் பிர் அவுன் தானே இறைவன் எனக் கூறினான்

 “மூஸாவே! உங்களிருவருடைய இறைவன் யார்?” என்று கேட்டான். 



(7:115) "பிர் அவ்னே ! நிச்சயமாக நான் அகிலங்களின் இறைவனால் அனுப்பப்பட்ட தூதன் ஆவேன்" என்று மூஸா கூறினார் "



20:57“மூஸாவே! நீர் உம் சூனியத்தைக் கொண்டு, எங்களை எங்கள் நாட்டை விட்டு வெளியேற்றுவதற்காகவா நம்மிடம் வந்தீர்?” என்று கூறினான்."

20:61. "(அப்பொழுது) மூஸா சூனியக் காரர்களிடம் “உங்களுக்குக் கேடுதான்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டாதீர்கள், (அவ்வாறு செய்தால்) அவன் வேதனையினால் உங்களை அழித்து விடுவான்; எவன் பொய்யை இட்டுக் கட்டுகிறானோ, திடனாக அவன் (நற்பேறு கெட்டு) அழிந்து விட்டான்” என்று கூறினார்"


எனினும் பிர் அவுன் தன் கருத்திலிருந்து மாறாமல் தன்னையே இறைவனாகக் கூறினான்-


" (அதற்கு) பிர் அவ்ன், "பிரதானிகளே ! என்னைத் தவிர வேறொருவரு (வணக்கத்துக்குரிய) நாயகன் உங்களுக்கு இருப்பதாக நான் அறியவில்லை. ஆகவே ஹாமானே! களிமண்ணின் மீது ( செங்கல் சூளைக்கு) எனக்காக நெருப்பை மூட்டி (அவற்றைக் கொண்டு மிக உயரமான ) மாளிகையை எனக்காக நீ கட்டுவாயாக, (அதில் ஊறி) மூஸாவுடைய இராட்சனை நான் எட்டிப் பார்க்க வேண்டும்.(அவர் தனக்கு வேறு இராட்சன் இருப்பதாக கூறுகிறாரே, இவ் விஷயத்தில் நிச்சயமாக அவரைப் பொய்யர்களில் உள்ளவராகவே நான் எண்ணுகிறேன் " என்றும் கூறினான் (28:38)

இவ்வாறு பெருமையடித்துக் கொண்டு திரிந்தான்  பிர் அவ்ன் .

7:127. "அதற்கு, ஃபிர்அவ்னின் சமூகத் தலைவர்கள் (அவனை நோக்கி) “மூஸாவும் அவருடைய சமூகத்தாரும் பூமியில் குழப்பம் உண்டாக்கி, உம்மையும் உம் தெய்வங்களையும் புறக்கணித்து விடும்படி நீர் அவர்களை விட்டு வைப்பீரா?” என்று கேட்டார்கள். அதற்கு அவன், “(அவ்வாறன்று!) நாம் அவர்களுடைய ஆண் மக்களை வெட்டிக் கொன்றுவிட்டு, (அவர்களைச் சிறுமைப் படுத்துவதற்காக) அவர்களுடைய பெண் மக்களை மட்டும் உயிருடன் வாழவிடுவோம் - நிச்சயமாக நாம் அவர்கள் மீது பூரண ஆதிக்கம் பெற்றுள்ளோம்” என்று கூறினான்"

பிர் அவ்ன் மூஸா ( அலை) அவர்களுக்கு துன்பம் விளைவிக்க தொடங்கிய தருணத்தில் இறைவனின் வஹீ மூஸா (அலை) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது

26:52. "மேலும், “நீர் என் அடியார்களை அழைத்துக் கொண்டு, இரவோடு இரவாகச் சென்று விடும்; நிச்சயமாக நீங்கள் பின் தொடரப்படுவீர்கள்” என்று நாம் மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம் "

மூஸா (அலை) வஹீயின் பிரகாரம் செயற்பட்டார்கள்.


20:77. "இன்னும்: “நீர் என் அடியார்களுடன் இரவோடிரவாகப் பயணம் செய்து, அவர்களுக்காக கடலில் உலர்ந்த பாதையை உண்டாக்கிக் கொள்வீராக! (ஃபிர்அவ்ன் உம்மைப்) பிடித்துவிடுவான் என்று பயப்படாமலும், (கடலில் மூழ்கி விடுவோம் என்று) அஞ்சாமலும் இருப்பீராக!” என்று மூஸாவுக்கு நாம் திட்டமாக வஹீ அறிவித்தோம்,"

26:61. "இவ்விரு கூட்டத்தினரும் ஒருவரையொருவர் கண்டபோது: “நிச்சயமாக நாம் பிடிபட்டோம்” என்று மூஸாவின் தோழர்கள் கூறினர்"


26:63. "உம் கைத்தடியினால் இந்தக் கடலை நீர் அடியும்” என்று மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம். (அவ்வாறு அடித்ததும் கடல்) பிளந்தது; (பிளவுண்ட) ஒவ்வொரு பகுதியும் பெரும் மலை போன்று ஆகிவிட்டது"


26:64. "
(பின் தொடர்ந்து வந்த) மற்றவர்களையும் நாம் நெருங்கச் செய்தோம்"

26:65"மேலும், நாம் மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் காப்பற்றினோம்."

ஆனால் பின்தொடர்ந்த பிர் அவ்ன் அவனது படையினருடன் பிடிக்கப்பட்டு கடலில் மூழ்கடிக்கப்பட்டான்.

இது தொடர்பாக இறைவன் திருமறையில் கூறும்போது பின்வருமாறு கூறுகின்றான்:-

" ஆதலால் நாம் அவனையும், அவனுடைய படையினரையும் பிடித்தோம். பின்னர் அவர்களைக் கடலில் எறிந்து விட்டோம். ஆகவே ( நபியே) அநியாயக் காரர்களின் முடிவு எப்படி இருந்தது என்பதை நீர் கவனிப்பீராக!" (28:40)


(7:103) " அவர்களுக்குப் பிறகு மூஸாவை நம் அத்தாட்சிகளுடன் பிர் அவ்னிடத்திலும் அவனுடைய தலைவர்களிடத்திலும் நாம் அனுப்பி வைத்தோம், அப்போது அவர்கன் அவற்றை (நிராகரித்து) அநியாயம் செய்து விட்டார்கள், இத்தகைய குழப்பக்காரர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதை கவனிப்பீராக " என்று இறைவன் கூறினான்.


இவ்வாறாக இறைவனை நிராகரித்துத் திரிந்த முந்திய பரம்பரை அழிக்கப்பட்ட பின்னர் மூஸா அலை அவர்களுக்கு" தவ்றாத் "எனும் வேதம் வழங்கப்பட்டதன் மூலமாக மனித குலம் நேர் வழியையும் , அருளையும், படிப்பினையையும் பெற்றதாக அல்லாஹ் தஆலா "அல் கஸஸ் " எனும் அத்தியாயத்தின் மூலமாக எம் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கின்றான். (அல்ஹம்துலில்லாஹ்)

மூஸா (அலை அவர்கள் "கலீம் அல்லாஹ்" (இறைவனுடன் பேசியவர்) என அழைக்கப்பட்டவர். திருக்குர் ஆனில் அதிக தடவை பெயர் இடம் பெற்ற நபியாவார்கள். இவர்கள் 120 வயது வரை வாழ்ந்தார்கள்.

இறை நிராகரிப்பவர்களுக்கு ஒரு படிப்பினையாக இருப்பதற்காக இன்றும் பிர் அவ்ன் உடல் சிதைவடையாமல் உள்ளது.



No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!