2012/09/17
அன்பூ உனக்காய் !
வந்து வந்து போகின்றன
இரவுகளும்..........!
விழிகள் உறிஞ்சிய கனவுகள் மட்டுமின்னும்........
விழித்திரை கிழித்து
நிஜங்களாய் தரிசிக்கவேயில்லை!
நீயோ வுன்
மௌனக் கிறக்கத்தில்............
மயங்கிக் கிடக்கின்றாயென்னை
மறந்தும் சுகமுமாய்!
நீ கிறுக்கிப் போன எழுத்துக்களை
கோர்க்கின்றேன்................உன்
இம்சை யினாக்கிரமிப்பில் அவையும்
திணறிக் கொண்டுதானிருக்கின்றன!
பாறைச் சிதறல்களா லுன் மனம் பூட்டி
மிரட்டினாயன்று..........!
புரிந்ததின்று
நீயும் மெழுகுத்துண்டென்று!
இருந்தும்...............
அடுத்தவருக்காய் .........
எனைக் கிழித்தெறிவதில்
சளைக்காத சாகஸக்காரி நீ!
என் மன விசாரிப்புக்களில்
அடிக்கடி
எட்டிப்பார்க்குமுன்னை.......
கன்னம் வைத்தேன் சிறைப்பிடிக்க
நழுவியோடுகின்றாய் - உன்
கண்ணீர்ப்படைத் துணையுடன்!
நீயென் சொந்தமென
உணர்வுகளில் ஒப்பந்தமிட்டு - ஒவ்வொரு
கணப்பொழுதும் காத்திருக்கின்றேன்.........
உன் நேசம் கலந்தவென்
உயிரை மீட்டு காதல் நெய்ய!
வெட்டவெளியில் வெட்கித்துக் கிடந்த
காற்றலையில்- நீ
கலந்த சுவாசத்தின் வாசத்தில்
மோகித்துக் கிடக்கின்றதே - என்
மூச்சுக்காற்றும் உன்னை நினைந்து!
நீ நடந்து போன சுவடுகளை
சுரண்டியெடுத்தேன் ரகஸியமாய்.........
முத்தம் பதித்த ரோசாக்களின் எச்சங்கள்
சத்தமின்றியென்னை ஏளனம் செய்தே
மிரட்டுகின்றன!
உன்...............
வார்த்தை கேட்டு வரட்சி விரட்டி
பாலைவனங்கள் ஈரமாகிக் கசிகையில் ...
பாதகம் செய்கின்றாயே எனக்கு மட்டுமுன்
புன்னகையை மறைத்தே!
என் தொடுவிரலின் சிறைப்படுத்தலில் - உன்
அடர்கேஷம் பிடித்திழுத்து
சில்மிஷம் பண்ண நினைக்கையில் - உன்
நாணப்பூக்களின்
அக்கினிவேட்டைக்குள்ளென்னை வீழ்த்தி
இம்சிக்கின்றாயே பாதகியாய்!
இருந்தும்...........
பசுமை நிரப்பியுன் விழி கடைந்து
தினம் தினம் காதல் கோர்த்தே...........
கிறங்கச் செய்யுமுன் பார்வைக்காய்
காத்திருக்கின்றனவென் நிழற்பொழுதுகள்
ஏக்கத்துடன்!
உதிர்ந்துருகும் சருகுகளில்
உருண்டு பிரளும் காதலின்றி.............
இதயத்திலன்பு நிறைப்பாய்
காயமில்லாமல்!
காத்திருப்பேனுனக்காய்!
என்றோவொரு நாள் ......!
உன்னைச் சுற்றித் திரியும் - என்
நினைவலைகளைச் சுருட்டி......நீ
புனைந்திடுவாய் கவிதையொன்று - அதுவே
எனக்கான வுன் நினைவஞ்சலி!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!