பழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் அவருக்கு எமது அஞ்சலி
----------------------------------------------------------------
திரையுலகின் ஓரங்கமே திரையிசைப் பாடல்கள். அந்த வகையில் காலத்தில் அழியாத பாடல்கள் பலவற்றையும், அவற்றை உயிர்ப்பித்தோரையும் தென்னிந்திய திரையுலகு தந்து கொண்டுதான் இருக்கிறது. வயது வேறுபாடின்றி இன்று நாம் ரசிக்கின்ற பல பழைய பாடல்கள் இருக்கின்றன. சில நவீன இசையமைப்பில் துள்ளல் வடிவம் கூட பெற்றுள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. அந்த வகையில் நான் ரசித்த பாடல்களுள் "நிலவே என்னிடம் நெருங்காதே" ஒன்றாகும். ஜெமினி கணேசன் பாடுவதைப் போன்ற பிரமிப்பினை ஏற்படுத்தியவர், தமிழ் சினிமாவில் பழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் என்றால் மறுக்கவா போகின்றீர்கள். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 12 இந்திய மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
கடந்த சில நாட்களாக உடல்நலம் மோசமான நிலையில் இருந்து வந்த நிலையில் இன்று (14.4.2013) அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது. இறக்கும் போது அவருக்கு வயது 82.
காலமான பி.பி.ஸ்ரீநிவாஸ் 1934-ம் ஆண்டு செப்டம்பர் 22ம் நாள் ஆந்திராவில் காக்கிநாடா மாவட்டத்தில் பிறந்தார். தமிழ்த் திரை இசை உலகில் டி.எம்.சௌந்தரராஜன் புகழின் உச்சியில் இருந்த காலத்தில் ஸ்ரீநிவாஸ் அவருக்கு அடுத்த இடத்தில் விளங்கினார். வெண்கலக் குரலில் பாடிவந்தோர் காலகட்டத்தில், மென்மையான குரலால் இனிமையைக் கூட்டி பாடுவதில் ஒரு புதிய பாணியை கொண்டுவந்தவர் பி.பி.ஸ்ரீநிவாஸ்.
'காலங்களில் அவள் வசந்தம்', ‘மயக்கமா கலக்கமா’, ‘நிலவே என்னிடம் நெருங்காதே’ என காலத்தால் அழியா பாடல்களை பாடிய அற்புதமான பாடகர். தமிழ்ப் படங்களில் ஜெமினி கணேசன், கன்னடத்தில் ராஜ்குமார் ஆகியோரின் அனைத்துப் படங்களிலும் இவர்தான் பின்னணி பாடியுள்ளார்.
பி.பி.ஸ்ரீநிவாஸ் மறைவிற்கு நாமும் எம் அஞ்சலியைச் செலுத்துவோமாக!
ஒரு கலைஞனின் உடல் அழியலாம், ஆனால் விட்டுச் சென்ற கலைகள் என்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்.
-Jancy Caffoor-
எத்தனை எத்தனை இனிமையான பாடல்களை கொடுத்த மறக்க முடியாத பாடகர்... அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...
ReplyDeleteஉண்மைதான் காலத்தால் மறையாத இனிய கானங்கள் அவை!
Delete