அழகான குடும்பம்
அன்பை உணர்த்திடும் அருமையான குடும்பம்/
இன்பத்திற்கும் குறைவில்லை இதயமெனும் கூட்டிலே/
அழகான குடும்பம் இறைவனின் வரமே/
அணைத்திடும் சிறகினுள் ஆனந்த உலகமே/
அனுபவமும் ஏற்றிடும் பண்பாட்டுப் பல்கலைக்கழகமே/
ஆறாது சினம்
பசுமை கரைத்தே
பகைமை வளர்த்த/
பச்சோந்தி மானிடன்
பற்றிய தீயிது/
கொடுமைகளின் விளைவினாலே
கொட்டுகின்ற அனலும்/
கொழுந்து விட்டெரிந்தே
கொல்கின்றதே சுவாசத்தை/
கொல்லும் புகை
கொண்டலை உலர்த்தி/
கொட்டாதே மழையும்
கொட்டுகின்றதே நெருப்பும்/
அகிலத்தின் உயிர்ப்பினை
அறுக்கின்ற வன்முறைகள்/
அடங்கிடாத போது
அணைந்திடுமோ சினமும்/
தெரிந்தே இரணமாக்கி
தென்றலுக்குள் மாசேற்றித்/
தெளிக்கின்ற அவலத்தால்
தெறிக்கின்றதே வஞ்சினம்/
தன்னையே செதுக்கிடு
சூளும் தடைகளை
சூட்சுமமாகத் தகர்த்தே/
சூட்டிட வேண்டுமே
சுகமான நலங்களை/
தக்கபடி வாழ்ந்திடவே
தன்னையே செதுக்கிடு/
தன்னம்பிக்கைப் பலத்தோடு
தரணியில் சிறந்திடு/
முயற்சியும் வென்றிடும்
முழுமூச்சாய் செயலாற்றிடு/
இல்லறவியல்- அதிகாரம்7.மக்கட்பேறு.
குறள்:66.
குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்
மங்கலச் சிறப்பின் பயன் நன்மக்களே/
மாண்பான வாழ்வும் வந்தணையும் நற்பேறாகி/
மகிழ்வினை யூட்டுகின்ற பிள்ளைகள் இல்லாதோர்க்கு/
மனக்குறையே என்றென்றும் தம் வாழ்நாளிலே/
மழலை யின்பம் அறியாதோரே என்றும்/
மயங்குவார் யாழினை மீட்டிடும் இசைதனில்/
மனதின் கலியினைக் கரைத்திடும் அமிர்தமே/
மக்கட் செல்வமாகி நிறைத்திடுமே வாழ்வினை/
பஞ்சு மேனியினைத் தழுவி அணைத்திடல்/
நெஞ்சில் வார்த்திடுமே இனிமையெனும் அன்பினை/
வீணாகும் விளைச்சல்
வந்தனை செய்தோம்
உழவினை நாமே/
நிந்திக்கின்றதே காலமும்
விற்பனை யின்றி/
தேகம் வருத்தி
விளைந்த முத்துக்கள்/
தேங்கின தொற்றும்
தீட்டிய ஊரடங்கால்/
கட்டிய மூட்டைக்குள்
கருக்கட்டியதே கண்ணீரும்/
எட்டியும் பார்த்தன
முளைத்திடும் பயிர்களாகி/
விளைந்ததைக் காத்திடா
ஏழ்மையும் இங்கே/
விதியா சதியா
பாழானதே முயற்சி/
இன்னல் சிந்திய
இடைவிடாத உழைப்பு/
இங்கே வீணான
விளைச்சலுக்கான உரமோ/
ஜன்ஸி கபூர்
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!