About Me

2021/05/05

காலம் பொன் போன்றது

 வாழ்க்கை எனும் நீண்ட பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்ற எமக்கு காலம் எனும் மைல் கல்லே திசைகாட்டியாக நின்று வழிகாட்டிக் கொண்டிருக்கின்றது. நம்மைக் கடந்து செல்கின்ற அந்தப் பெறுமதியான காலத்தின் நகர்வு நமது அனுபவங்களையும் அதிகரித்துச் செல்கின்றது. 

நேரம் என்பது நம்மிடம் காணப்படுகின்ற மிகப் பெரிய சொத்து. அதனை சரியாகப் பயன்படுத்தும் அறிவு திறன் நம்மிடம் இருக்கும்பட்சத்தில் அந்நேரம் நம் வாழ்வின் பொன்னான நேரமாகி விடுகின்றது. முன்னேற்றம் நம் வாசலைத் தொட்டு விடுகின்றது.

ஆனால் காலத்தை வீணாக்கி விட்டால் அல்லது நாளை நாளை எனத் தள்ளிப் போட்டால் நகராத கடிகாரம் போல் நாமும் செயலற்றுப் போய் விடுவோம். அற்புதமான அழகிய பெறுமதியான வாழ்வும் விழலுக்கிறைத்த நீர் போல் வீணாகி விடும்.

'காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருக்காது ''காலம் வீணானால் திரும்பக் கிடைக்காது', 'காலம் பொன் போன்றது', "பருவத்தே பயிர் செய்",  "இளமையிற் கல்வி சிலையில் எழுத்து",  "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா" போன்ற பழமொழிகள்கூட வாழ்வியல் அனுபவங்களின் தொகுப்புக்களே.

கற்கின்ற காலத்தில் கண்ணாகப் போற்றப்படுகின்ற நேரங்களின் பெறுமதியால் சிறந்த எதிர்காலம் மாணவர்களுக்குக் கிடைக்கின்றது. ஆனால் மாறாக வீணடிக்கப்படுகின்ற விநாடிகள்கூட வலியின் சுமையால் தளம்புவதை நாம் அறிவோம். நம் முன்னே நிழலாடுகின்ற காலத்தை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும். நினைவுகளில் எழுகின்ற நல்ல எண்ணங்களை நாம் உரிய காலத்தில் செயற்படுத்த வேண்டும். ஏனெனில் சிந்தனைகளை நம்மை வழிப்படுத்துகின்றன. வளப்படுத்துகின்றன. 

இலக்கில்லாத வாழ்வு சக்கரங்கள் அற்ற வாகனம் போல் குறித்த இடத்திலேயே தரித்து விடும். எனவே செய்யப்போகின்ற ஒவ்வொரு செயல் பற்றியும் சிந்தித்து திட்டமிட்டு செய்வோமானால் நமக்கு மன நிறைவு ஏற்படும். அத்துடன் கால விரயமும் ஏற்படாது. நமது நேரம் நமக்காக உருவாக்கப்பட்டது. அதனை நாமே சிறப்பாகச் செய்ய வேண்டும். அந்நேரத்தில் சிறு துளியாகினும் தேவையற்ற விதத்தில் செலவளிக்கின்றபோது நம் மிகப் பெரிய பலம் பலகீனம் எனும் வலையினுள் சிக்கி விடும். காலத்தை சிறப்பாகப் பயன்படுத்தும்போது சாதனைகள் பல நம் வசமாகின்றன. எனவே காலத்தைச் சரியாகப் பயன்படுத்தி வெற்றி எனும் பாதையில் செவ்வோமாக.

ஜன்ஸி கபூர் - 05.05.2021


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!