இந்த ஆங்கிலக் கதையின் முழுமையான மொழிபெயர்ப்பு இதுவல்ல. ஆனால் இக்கதையை நான் வாசித்தபோது, எனக்குள் ஏற்பட்ட அருட்டலை கதையின் பண்போடு வரிகளாக்கியுள்ளேன்.
இயற்கையின் வனப்புக்களை ஆங்காங்கே சிதறவிட்டு அழகாக காட்சியளிக்கின்ற பசுமைக் கிராமம்தான் இது. இக்கிராமத்தில்தான் இந்த முதியவர் வாழ்ந்து வருகின்றார்.
முதுமை என்பது உடலுக்கே அன்றி மனதுக்கல்லவே. வயதின் ஏற்றம் எப்பொழுதும் உடலுக்குத்தானே. மனது எப்பொழுதும் இளமையாக இருக்கவே விரும்புகின்றது. அனுபவங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இம்முதுமை என்பது உறவுகளுக்கு பொக்கிசமே!
ஆகவே இப்பருவத்தில் எல்லோரும் குழந்தைகள்போல் அன்பை எதிர்பார்த்து உறவுகளுடன் நெருங்கி வாழவே விரும்புகின்றார்கள். தம்மைச் சூழக் காணப்படுகின்ற தனிமையை விரட்டி மற்றவர்களுடன் தம் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ளத் துடிக்கின்றார்கள்.
சில முதியவர்கள் உறவுகளின் அரவணைப்பில் புன்னகையை உதிர்த்துக் கொண்டிருக்க, சில முதியவர்களை யாரும் கண்டு கொள்வதாக இல்லை. விரக்திக்குள் அவர்களை வீழ்த்த, விரட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.
இக்கதையில் வருகின்ற முதியவர் சற்று வித்தியாசமானவர்.
ஒளி இழந்த கண்களில் ஏதோ ஒன்றுக்கான தேடல். சுருக்கமடைந்த தேகத்தினுள் கொந்தளிப்புக்களின் சேகரிப்பு. மகிழ்ச்சியற்றவராக, எதையோ இழந்தவராகவே எப்பொழுதும் காணப்பட்டார்.
அடுத்தவரை புண்படுத்தும் வார்த்தைகளும், நடத்தைகளும் அவரை ஊர்மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி வைக்கின்றது.
அவரின் தோற்றத்தினுள் இறுக்கம். கடுமை.
அடுத்தவரின் குறைகளை விமர்சிப்பதால் பலரின் வெறுப்புக்கும் ஆளானார்.
இதனால் ஊரார் அவரை நெருங்குவதில்லை.
தனிமை இவர் தனக்கு தானே விரித்துக் கொண்ட கூடு.
அவரிடம் மகிழ்ச்சியைக் காணவே முடியாது. உம்மென்ற புன்னகையற்ற முகம் அவரின் அடையாளம்.
நாட்கள் வேகமாக ஓடுகின்றன.
அவரின் பிறப்புக்கு எண்பது வருடங்களாகி விட்டன.
அன்றைய பிறந்தநாளின்போது ஊருக்குள் ஆச்சரியமான செய்தியொன்று பரவியது.
'கிழவன் இன்று ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கின்றார்'
ஊர்வாய்கள் சுவாரஸியமாக அவரைப் பற்றி அலசின.
எல்லோரும் காரணமறிய அவரைச் சந்தித்தனர்.
அவரோ நிதானமாகச் சொன்னார்.
இத்தனை நாட்களாக மகிழ்ச்சியை நான் தேடிக் கொண்டிருந்தேன். அது பயனற்றது என்பதை உணர்கின்றேன்.
'ஆனால் இன்றோ மகிழ்ச்சியைத் தேடாமல், கிடைக்கின்ற வாழ்வை வாழ வேண்டுமென நினைக்கின்றேன். அதனால் என் முகம் மகிழ்ச்சியாக இருக்கின்றது' என்றார்.
உண்மைதான் இந்தச் சின்னக் கதைக்குள் பொருந்தியிருக்கின்ற பெரிய உண்மை நமக்கான தத்துவமே. தன்னைச் சுற்றிய வாழ்க்கையை உணர்ந்ததால், ஏற்பட்ட திருப்தியே இம்மகிழ்ச்சிக்குக் காரணம் என்பதை அவரது புன்னகை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றது.
மகிழ்ச்சி என்பது நீண்ட நாள் நல்வாழ்க்கைக்கான உணர்வு. அமைதி மற்றும் நமது வாழ்வோடு சேர்ந்த திருப்தி.
உண்மையில், நம்மைப் பற்றி மட்டுமே அக்கறைப்படுதல் என்பது தனிமையையும், மனஅழுத்தத்தையுமே முன்னெடுக்கும். நாம் நமக்குள் பல எதிர்பார்ப்புக்களை உருவாக்கி அதன் அழுத்தத்தால் கிடைக்கின்ற சின்னச் சின்ன சந்தோசங்களையும் இழக்கின்றோம்.
மகிழ்ச்சியை விராட்டாதீர். வாழ்க்கையை நமக்கேற்றதாக நாம் வாழ்கின்றபோது மகிழ்வும் நம்மை விட்டுப் போகாது
ஜன்ஸி கபூர் -16.5.2021
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!