About Me

2021/06/15

வெற்றி(யின் இ)லை

உலகினை கொரோனா எனும் நோய் தன் பிடிக்குள் சிக்க வைத்து வாழ்வைக் கசக்கிப் பிழிகின்ற நேரம், அன்றாடம் உழைத்து உண்ணும் பலர் பசியுடன் போராடி வருகின்றனர். ஊதியம் கிடைக்கின்ற வழி உழைப்புத்தானே. நேர்மையான வழியில் உழைக்கின்ற எல்லாத் தொழில்களும் சிறந்தவைதான்.

 சென்ற வருடம் கொரோனாத் தொற்றுக் காரணமாக பாடசாலைகள் விடுமுறை விடப்பட்டிருந்தன. வீட்டில் இருக்கின்ற அந்நாட்களைப் பிரயோசனப்படுத்துவதற்காக வீட்டுத்தோட்டத்தில் நாட்டம் செலுத்தினேன். அதன் விளைவாகச் சிரிக்கின்றது வெற்றிலைச் செடி. 

சில வீடுகளின் சுவர்களில் இவ்வெற்றிலைச் செடி பரந்து வளர்கையில் அதனை ரசிப்பேன். ஏனோ வெற்றிலைச் செடி வளர்ப்பதென்றால் எனக்கு கொள்ளை ஆசைதான்.

இந்த வெற்றிலையைப் பற்றித்தான் இந்த வீடியோவில் கொஞ்சம் கதைக்கப் போகின்றேன்.

மலேசியாவில் தோன்றிய இச்செடி மருத்துவ மூலிகையாகும். அத்துடன் இந்துக்களின் பண்பாட்டு பாரம்பரிய அடையாளமாகவும் திகழ்கின்றது. வயிற்றுக்கோளாறு நீங்கவும் வெற்றிலை பயன்படுத்தப்படுகின்றது. இது மிளகுக் குடும்பத்தைச் சேர்ந்த பயிராகும். வெற்றிலையை பாக்குடன் மென்றோ அல்லது பீடாவாகவோ சாப்பிடுவார்கள். சிலர் வெற்றிலை ரசம் வைத்துச் சாப்பிடுகின்றார். 

தாய்ப்பால் சுரப்பிற்கும் வெற்றிலை பயன்படுகின்றது. கருகருவென கரும்பச்சை நிறத்தில் இருக்கும் வெற்றிலைகள் ஆண் வெற்றிலைகள் என்றும், இளம்பச்சை வெற்றிலைகள் பெண் வெற்றிலைகள் என்றும் வகைப்படுத்தப்படுகின்றன. வெள்ளை வெற்றிலை   காரம் இல்லாததும், வெளிர்ப்பச்சை நிறமாகவும் இருக்கும். கருப்பு வெற்றிலை  காரம் உள்ளதாகவும், நல்ல பச்சை நிறமாகவும் இருக்கும். வெற்றிலையில் நடுக்காம்பிலிருந்து ஒரு புள்ளியில் இருந்து நரம்புகள் பிரிந்து இருந்தால் ஆண் என்றும், பல புள்ளிகளில் இருந்து பிரிந்து வந்தால் பெண் என்றும் கூறப்படுகிறது. 

வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச் சத்தும், 0.8% கொழுப்புச் சத்தும் நிறைந்துள்ளது. 

வெற்றிலைப் பயிருக்கு விதை என்று எதுவும் இல்லை. காம்புகளை வெட்டி பதியன் போட்டுத்தான் பயிர் செய்கிறார்கள் வெற்றிலை பயிராகும் நிலப்பகுதிக்கு வெற்றிலை கொடிக்கால் என்கிறார்கள். 

வெற்றிலையும், பாக்கும் ஒற்றுமைக்கு உகந்தது. ஒன்றோடு ஒன்றை இணைத்துதான் கொடுக்க வேண்டும். 'வேண்டாத உறவிற்கு வெறும் வெற்றிலை'  என்பது பழமொழி. 

வெற்றிலை, பாக்கு சுண்ணாம்பு, ஏலக்காய், கிராம்பு, வால்மிளகு, சாதிக்காய், சாதிபத்திரி, சுக்கு, காசுக்கட்டி ஆகியவற்றை சேர்த்து வாய் மணக்கஇ மணக்க தாம்பூலம் தரிப்பது தமிழர்களின் வழக்கம். 

இவ்வெற்றிலையின் மருத்துவ குணங்கள்

  • உடல் பருமனை குறைக்கும் மருந்து

2 வெற்றிலையில் 5 மிளகு வைத்து வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு சாறை மட்டும் விழுங்கிவிட வேண்டும். இதேபோல் இரண்டு மாதங்கள் வரை செய்துவர உடல் எடை குறையும்.

  • நரம்புகளை பலப்படுத்தும் மருந்து
  • மூளை பலம் பெறுவதுடன் ஞாபக சக்தி அதிகரிக்கும்.
  • மூச்சுதிணறல், நெஞ்சக சளியை போக்கும் மேல்பூச்சு மருந்து
  • நரம்பு மண்டலத்துக்கு பலம் கொடுப்பதால் படிக்கும் குழந்தைகளுக்கு வெற்றிலை சாறு கொடுத்துவர ஞாபக சக்தியை அதிகரிக்கும். வெற்றிலை சாறை ஒரு சொட்டு காதில் விட்டால், காதில் ஏற்படும் வலி, சீல் பிடித்தல் போன்றவை குணமாகிறது

ஆனாலும் நன்மையின் மறுபக்கமாக தீமையும் உள்ளது. வெற்றிலை மென்று சிலர் வழி வழியே துப்பும்போது சூழலின் அழகு கெடுகின்றது. அது மாத்திரமல்ல தொடர்ந்து மெல்லும்போது பற்களில் கறைகளும், புற்றுநோய் போன்ற நோய்களும் ஏற்படுகின்றன.

இருந்தபோதும் மங்களகரமான அச்செடியை வீட்டில் வளர்த்து மன சந்தோசம் பெறுவோமாக!

உங்கள் அன்பின் ஜன்ஸி கபூர் - 14.06.2021


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!